தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, August 27, 2004

தொடர் விடுமுறை

இந்த வாரமுடிவு(weekend) எங்களுக்கு(UK) நீண்ட வாரமுடிவு(வாரகடைசி??).

ஆம், திங்கட்கிழமை இங்கே வங்கி விடுமுறை. அதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று 3 நாட்கள் :-))தொடர் விடுமுறை.

இதை வீணாக்கக் கூடாது என்று கார் முன்பதிவு செய்தேன் (எங்கே போவது என்று முடிவு செய்யும் முன்). பிறகு செலவை பகிர்ந்து கொள்ள ஆட்களைபிடித்தேன் :-). இப்போது தான் எங்கே செல்வது என்று முடிவு செய்தேன். நான் போகபோவது ஏரி மாவட்டத்திற்க்கு (Lake district). அங்கே ஏரி, காடு, மலை மட்டும் தான் இருக்குமாம்.சரி இயற்கையை கொஞ்சலாம் என்று பக்கத்தில் ஒரு படுக்கை&காலை உணவுவிடுதியில் (Bed&Breakfast) அறையும் முன்பதிவு செய்து விட்டேன். சனிக்கிழமை காலை கிளம்பி,திங்கட்கிழமை மாலை தான் ஊர் திரும்புவேன். அதுனாலே வந்து உங்களை எல்லாம்பார்க்குறேன். பை (bye).


Thursday, August 26, 2004

மகாத்மாக்கள்

முன்குறிப்பு:-
முகுந்தின் பதிவிற்கு எதிர்வினையாக வைத்துக்கொள்ளலாம்.

இதை எழுதுவதற்க்கு நான் மிகவும் வருந்துகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த சில வார்த்தைகள் அவசியமாகிறது. இந்த பதிவை இப்படி எழுதுவதற்க்கு நான் நிஜமாகவே வருந்துகிறேன்.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும், யார் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னித்து அவர்களை திருத்த அல்லது மனநோயாளிகளாக இருந்தால் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்து நான் ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன்.

நான் உணர்வுபூர்வமாக கேள்வி எழுப்பினாலும், முன்னேறிய, மனித சிந்தனை மிகுந்த, அறிவுப்பூர்வமாக எதையும் பார்க்கக் கூடிய, கொடூர குற்றவாளிகளை மன நோயாளியாக மட்டுமே பார்த்து பரிதாப் படுகிற, இரக்க சுபாவம் கொண்ட, மன்னிக்கத் தெரிந்த ஆத்மாக்கள் இல்லை இல்லை மகாத்மாக்கள் எனக்கு பதில் சொல்லட்டும்.

நான் ஒரு மனநோயாளி என்று வைத்துக் கொள்ளலாம். எனக்கு காம வெறி அதிகம், பெண்களின் மீது இச்சை அதிகம், மற்றவர்களை துன்புறுத்தி அதில் சுகம் காணும் குணம் கொண்டவன். அடுத்த உயிரினை சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஆவல் நிறைந்தவன்.

ஒருநாள் என்ன பண்ணுகிறேன், என்னைப் போன்ற மனநோயாளிகளுக்கு வக்காலத்து வாங்கி, அவர்கள் மீது கருணை காட்டும் ஒரு மகாத்மாவின் மனைவியையோ அல்லது சகோதரியையோ அல்லது அவருடைய 5 வயது கொழு கொழு மகளையோ, கடத்தி வந்து, அவர்களை வன்புணர்ச்சி செய்து, பிறகு கண்களை நோண்டி, கை, கால் விரல்களை வெட்டி எரிந்து, முகத்தை சிதைத்து கொடூரமாக, இல்லை இல்லை மனநோயாளி போல் கொன்று விடுகிறேன்.

இப்போது அந்த மகாத்மா என்னை மன்னித்து, "ஐய்யோ பாவம் இவன், மனநிலை சரியில்லாமல் என் மனைவியை கொன்று விட்டான் / என் சகோதரியை கற்பழித்துக் கொன்று விட்டான்/ என் 5 வயது மகளை சிதைத்து அழித்து விட்டான், இவனை மன்னித்து விடலாம், நானே வேண்டுமானால் இவனுக்கு வைத்தியம் செய்து சரி பண்ணுகிறேன்" என்பாரா? இல்லை என் விடுதலைக்கு குரல் குடுப்பாரா?? சிதைக்கப்பட்டு, சாகடிக்கப்பட்ட தன் மனைவி/சகோதரி/மகள் ஆகியோருக்கு இறுதிசடங்கை செய்து விட்டு, ஒரு கொலைகாரனுக்கு இந்த மகாத்மாக்கள் வக்காலத்து வாங்குவார்கள் என்றால்... இவர்கள்... நிஜமாகவே மகாத்மாக்கள் தான்... நான் காட்டுமிராண்டி தான்.

கனவு பயம் எனக்கு - PART 2

"நீங்க இன்னைக்கு இரவு சாக போறீங்க... " என்று உறுதியுடன் கூறினேன்.

டாக்டர் பயந்து தான் போய் இருக்க வேண்டும். இருந்தும் ஒன்றும் கண்டுகொள்ளாதவர் போல்

"என்ன சொல்றீங்க??" என்றார்.

"நிஜம் தான் டாக்டர்... எனக்கு நேத்து வந்த கனவுலே.. நீங்க இன்னைக்கி சாக போறதா தெரிஞ்சது.. அதுவும் நீங்க வீட்டுக்கு போற வழியிலே லாரியிலே அடிபட்டு சாகறதை நான் பார்த்தேன்."

இவ்வளவு நேரம் என் பேச்சை கேட்டவர் இப்போது லேசாய் சிரித்தார்.
"இல்லை கவலை படாதீங்க.. நான் சாக மாட்டேன்... உங்க கனவு இன்னைக்கு பலிக்காம போக போகுது.. "
என்று சொல்லியவாறு மேலும் சிரித்தார்.

"சிரிக்க வேண்டாம் டாக்டர், ஏற்கனவே 60 பேரை காப்பாத்த முடியாம போய் நான் ரொம்ப வருத்தத்துல இருக்கேன், உங்க உயிரை காப்பாத்தின ஒரு சந்தோசமாச்சும் குடுங்க.. ப்ளீஸ்."

"ஓ கமான்.. உங்க கனவுக்கு பயந்து நான் எங்கேயும் வெளியே போகாம எல்லாம் இருக்க முடியாது.. நீங்க தான் என்னோட கடைசி பேஷண்ட்.. இனி நான் வீட்டுக்கு தான் போறேன்..."

நடுவில் தடுத்தேன்.
"இங்கே இங்கே தான் டாக்டர் சொல்றேன்.. நீங்க வீட்டுக்கு போற வழியிலே தான் அடி பட்டு... " சொல்லாமல் நிறுத்தினேன்.

"இங்க பாருங்க உங்க நல்ல மனசு எனக்கு புரியுது.. எனக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நினைக்கிறீங்க.. அது போல தான் நடக்கும். கவலை படாதீங்க.. நாளைக்கு உங்களை சந்திச்சி.. நான் நல்லாதான் இருக்கேன்னு நிரூபிக்கிறேன். உங்க கனவு வெறும் கனவு தான் பயப்பட ஒண்ணும் இல்லேன்னு காட்டுறேன்... ம்ம்ம் இந்த மருந்துகளை வாங்கி சாப்பிடுங்க. நல்லா தூக்கம் வரும். குட்நைட். கிளம்புங்க" என்றார்

நான் அவரை அப்படியே பார்த்தவாறு இருந்தேன். பிறகு..

"சரி டாக்டர் நான் கிளம்புறேன்.. "

என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்து பிரிஸ்கிரிப்ஸனை வாங்கினேன்.
"ஆனா டாக்டர்.. நீங்க சொன்னது ஒண்ணு மட்டும் உண்மை.." என்றேன்
என் இருக்கையில் இருந்து எழுந்தவாறு.

"என்ன சொன்னேன்??" என்றார்

"யார் நினைச்சாலும் சில விபத்துக்களை தவிர்க்க முடியாதுன்னு சொன்னீங்களே... அது சரி தான்.. யார் நினைச்சாலும்.... முடியாது.. "
என்றவாறு கதவுக்கு போனேன்..
திரும்பி,
"குட்நைட் டாக்டர்.. பத்திரம்" என்று வெளியேறினேன்.

"நில்லுங்க.." என்றது டாக்டரின் குரல்.

"உங்க கனவு பலிக்காதுன்னு நிரூபிக்கிறேன்.. இந்த இரவு முழுதும் உங்க கண்ணுக்கு முன்னாடி உட்காந்து இருக்கேன்.... சரியா??"
என்றார் புன் சிரிப்புடன்.

எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.. என் கெட்ட கனவு பலிக்காமல் போக போகிறது என்று ,

"ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் டாக்டர்.. "
என்று அவரது அறைக்கு திரும்பினேன்.

டாக்டர் தொலைபேசி எடுத்தார், தன் வீட்டுக்கு பேசினார், பிறகு தன் உதவியாளரை அழைத்து உணவுக்கு ஏற்பாடு செய்தார்.. எனக்கும் ஆர்டர் கொடுத்தார்... தன் உதவியாளரையும் தன்னுடன் இருக்க செய்து இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு, பல தாள்களை அச்சிட்டு அடுக்கி வைத்துக்கொண்டனர். நான் பாட்டுக்கும் வரவேற்பறையில் இருந்த டிவியில் மிட்நைட் மசாலா பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரவு 1 மணி இருக்கும், லேசாய் தூக்கம் கண்ணை இழுத்தது..

"என்ன தூக்கம் வருதா உங்களுக்கு" என்றார் டாக்டர்.

"ம்ம் ஆமாம் டாக்டர்.. லேசாய்.. பாவம் நீங்க.. உங்களை இங்கேயே இருக்க வைத்து ரொம்ப கஷ்டம் குடுக்குறேன்.. சாரி " என்றேன் தலை குனிந்தவாறு.

"அப்சலூட்லி நாட்... உங்களால எனக்கு எந்த தொந்தரவும் இல்லை.. எனக்கு அடுத்த வாரம் ஒரு முக்கியமான கான்பரன்ஸ் இருக்கு அதுக்கு எப்போ தயார் பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன்.. இந்த இரவை உபயோகப்படுத்தி கிட்டேன். உங்க பிரச்சினையும் தீர்ந்தது.. எனக்கும் வேலை முடிஞ்சது.. .. சரி.. உங்களுக்கு தூக்கம் வந்தா அப்படியே சோபாலே படுத்துக்கங்க.. "என்று சொல்லி விட்டு அகன்றார்.

நானும் 3 மணி வரை டிவி பார்த்தேன்... டாக்டர் சலிக்காமல் ஏதேதோ படித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்... அப்புறம்... என்னை அறியாமல் தூங்கினேன்....

எழுந்திருக்கும் போது...

"குட்மார்னிங்.." என்றவாறு டாக்டர் என் முன்னே முழுதாய் நின்றிருந்தார்.

"குட்மார்னிங் டாக்டர்..." என்று எழுந்து அவரை தொட்டு பார்த்தேன்..

"என்ன முழுசாய் இருக்கேனா..??" என்று சொல்லி சிரித்தார்..

" கவலை படாதீங்க..உங்க கனவுக்கும் நிஜத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு நிரூபிச்சிட்டேன் பார்த்தீங்களா?? தைரியமா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.. அடுத்த வாரம் வந்து பாருங்க." என்றார்.

"ரொம்ப நன்றி டாக்டர்.. ரொம்ப இம்சை படுத்திட்டேன் உங்களை " என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

********
டாக்டரின் வீடு..

"ஓ இதுதானா கதை, ஐயா நேத்து நைட் வீட்டுக்கு வராதது.. நல்ல காமெடி போங்க.. உங்களுக்குன்னு வந்து மாட்டுறாங்க பாருங்க, நல்ல பேஷன்ட், நல்ல டாக்டர்.. "
என்று சொல்லிவிட்டு டாக்டரின் மனைவி அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தார்.

********
டாக்டரின் க்ளினிக்
"ஹலோ வாங்க வாங்க... எப்படி இருக்கீங்க.. கனவு எல்லாம் வருதா இன்னும் " என்றார் டாக்டர் என்னைப் பார்த்தும்..

நான் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே..
"இல்லே டாக்டர். நீங்க குடுத்த மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிச்சதும் நல்லா தூக்கம் வருது.. அதுனாலே எந்த கனவும் வர்ற்தில்லை.. " என்றேன்.

"குட், இதை தான் நான் எதிர் பார்த்தேன்.. இன்னும் 1 வாரம் அந்த மாத்திரை சாப்பிட்டு அப்புறம் விட்டுடுங்க.. அவ்வளவு தான் உங்க பிரச்சினை சரி ஆயிடிச்சி.. "

"ரொம்ப நன்றி டாக்டர்... எனக்கு இவ்வளவு உதவி செஞ்சி இருக்கீங்க. எனக்காக ஒரு நைட் புல்லா இருந்திருக்கீங்க. .. என்னோட ஒரு சின்ன அன்பளிப்பை நீங்க வாங்கிக்கணும்"
என்ற சொல்லிய படி, அவரிடம் அந்த கவரை குடுத்தேன்.அவர் அதை வாங்கியவாறு,

"என்ன இதெல்லாம்... நான் என் வேலையை தானே செஞ்சேன்" என்றபடி அதை பிரித்தார்..

"ஒண்ணும் இல்லீங்க அது.. வர்ற ஞாயிற்று கிழமை கிரேஸி மோகன் நாடகத்துக்கு முதல் வரிசையில உட்கார்ந்து பார்க்குறதுக்கு பேமிலி டிக்கெட். புது நாடகம். அன்னைக்குத் தான் அரங்கேற்றம்... உங்களுக்கு அவர் நாடகம் பிடிக்கும்ன்னு டிவிலே சொன்னீங்க அதான்...."

"ஓ ரொம்ப தேங்க்ஸ்.. இந்த வாரம் கட்டாயம் நான் என் குடும்பத்தோட போய் பார்க்குறேன். ரொம்ப நன்றி" என்றார்.

"ஐயோ எனக்கு எதுக்கு நன்றி சொல்லிகிட்டு.. என் வியாதியை சரி பண்ணதுக்கு ஒரு நன்றிகடன் அவ்வளவு தான்... வர்றேங்க டாக்டர்"
என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

******
டாக்டர் வீடு..
"ரொம்ப நல்ல மனுஷனா இருப்பார் போல இருக்கு அவர். நீங்க ஒருநாள் நைட் அவரை பார்த்துகிட்டதுக்கு நம்ம குடும்பத்துக்கே ஒரு சந்தோசத்தை குடுத்து இருக்கார்.. நானும் உங்க கூட வெளியே போய் எவ்வளவு நாள் ஆச்சு... இதை மிஸ் பண்ண கூடாதுங்க... " என்று பேசிக்கொண்டிருந்தார் டாக்டரின் மனைவி...
******
டாக்டர் வீடு..
ஞாயிற்றுக்கிழமை இரவு... டாக்டர் காரை நிப்பாட்டுகிறார்...
"சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு புண்ணாயிடிச்சிங்க... டிக்கெட் குடுத்தவரை பார்த்தா நான் ஸ்பெஷல் தாங்க்ஸ் சொன்னதா சொல்லிடுங்க" என்று சொன்ன டாக்டரின் மனைவி வீட்டை திறந்தார்... "வீவீவீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்" என்று அலறினார்..
*******
"DVD ப்ளேயர், காம்கார்டர்,லாப்டாப், டிஜிட்டல் கேமிரா, 50 பவுன் நகை.. யப்பா யப்பா யப்பா.. சரியான டாக்டர் தான் அவரு... எப்படியும் ஒரு 3 லட்சம் தேறும்" என்று மனதிற்க்குள் மெல்ல சிரித்தவாறு விசில் அடித்துக்கொண்டு.. என் மாருதியில் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தேன்... என் பக்கத்தில் ஒட்டு தாடி, மீசை, விக் எல்லாம் சிரித்துக்கொண்டிருந்தது.
******
முற்றும்.

Wednesday, August 25, 2004

கனவு பயம் எனக்கு - PART 1

"டாக்டர் எனக்கு ரொம்ப ரொம்ப வித்தியாசமான பிரச்சினை. சொன்னா நம்புவீங்களான்னு எனக்கு தெரியல" என்று புதிராய் ஆரம்பித்தேன்.

அவர் டிவியில் வரும் பிரபல மனோதத்துவ நிபுணர். எந்த கேள்வி யார் கேட்டாலும் உடனே தகுந்த காரணங்களுடன் விளக்கம் கொடுப்பார். இவரது புகழ் பல நாடுகளிலும் பரவி இருந்தது. அதனால் தான் அவரை கஷ்டப்பட்டு பிடித்து சில நூறுகள் செலவு செய்து அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி இருந்தேன்.

"சொல்லுங்க. உங்க பிரச்சினை எதுவா இருந்தாலும், அதுக்கு கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும்... " என்று சொல்லி விட்டு என் முகத்தை தீர்க்கமாய் பார்த்தார்.

நான் சொல்ல ஆரம்பித்தேன்

" சமீப காலமா எனக்கு ஒரு விதமான, வித்தியாசமான கனவுகள் வருது டாக்டர். எப்படி சொல்றதுன்னு தெரியல... அதாவது, இரவு தூக்கத்துல, ஆழ்ந்த உறக்கத்துல எனக்கு வர்ற கனவுகள் அடுத்த சில நாட்களில் நிஜமாவே நடந்துடுது டாக்டர்... "
என்ற போது அவர் முகத்தில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது. அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தேன்.

"இப்படி தான் போன மாசம் ஒரு கனவு வந்தது . ஒரு பெண்ணுக்கு நான் முத்தம் தர்ற மாதிரி, அடுத்த நாள் பஸ்ஸுல போகும் போது ஒரு பொண்ணு பின்னாடி நின்னுட்டு இருந்தேன் டாக்டர், அவ இறங்க வேண்டிய இடம் வந்தது போல, அவ திரும்பி வாசல் பக்கம் நகரப் பார்த்தா, அப்போ டிரைவர் சடன் ப்ரேக் போட்டார், நானும் அவளும் தடுமாறி போய் ஒருத்தர் மேல இன்னொருத்தர் விழுந்து முத்தம் குடுத்துக்கிற மாதிரிஆகிடிச்சி..."
என்று நிறுத்தினேன்.

அவர் அதை ரசித்தார் போல்,

"ம்ம் இண்ட்ரஸ்டிங் ... சொல்லுங்க!" என்றார்.

"உங்களை போல தான் நானும் நினைச்சேன், இது சும்மா ஒரு விபத்து, நம்ம கனவுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லேன்னு.. அப்புறம் அன்னைக்கே அடுத்த கனவு.. நான் மழைலே சொட்ட சொட்ட நனையிற மாதிரி.. உங்களுக்கே தெரியும், சென்னையில வெயில் காலத்துல மழை எப்படி பெய்யும்ன்னு.. நான் நம்பவே இல்லே... கனவு தான் இதுன்னு... ஆனா பாருங்க டாக்டர் அடுத்த நாள் நான் வெளியே போறேன்.. சோ'ன்னு மழை.. கனவுலே பார்த்த மாதிரி அப்படியே நடந்துச்சி... இதை கூட நான் என் கனவோட தொடர்பு பண்ணிக்கலே டாக்டர்... ஆனா, அடுத்து நடந்தது தான் என்னை கொஞ்சம் பாதிச்சிடிச்சி..." என்று நிறுத்தினேன்.

இப்போது கொஞ்சம் ஆர்வம் வந்தவராய்..

"அடுத்து என்ன ஆச்சு சொல்லுங்க" என கேட்டார்.

"எனக்கு கை கால் அடிபட்டு கட்டு போட்டு, பெட் ரெஸ்ட் எடுக்குற மாதிரி ஒரு கனவு ... அது வந்ததுல இருந்து நான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன், பைக் ஓட்டாம, நடக்கும் போது ரொம்ப கவனமா, யாரும் வந்து மோதிடாம, பஸ்ஸுல போகும் போது படியிலே தொங்காம.. எல்லாம் ரொம்ப உஷாரா தான் இருந்தேன்.. ஆனா ஸ்பென்ஸர் போன போது எக்ஸ்லேட்டர்ல இறங்குறப்போ பின்னாடி இருந்த ஒருத்தன் தள்ளி விட்டதால உருண்டு விழுந்து உடம்பெல்லாம் அடி. கனவுல வந்த மாதிரி நான் கட்டு போட்டு 1 வாரம் படுத்திருந்தேன் டாக்டர்.. "
என்று சொல்லி முடித்தப் போது என் கண்ணில் லேசாய் பயம் இருந்தது.

டாக்டரும் அதை அறிந்தவர் போல.
"பயப்படாதீங்க மேல சொல்லுங்க" என்றார்.

"அதையும் நான் சாதாரணமாவே எடுத்துகிறேன்னு வச்சிகங்க டாக்டர்... ஆனா இரண்டு நாள் முன்னாடி வந்த கனவு நேத்து நடந்த போது என்னால நம்பாம இருக்க முடியல ..."

"அப்படி என்ன நடந்தது??" என்றார்.

"நேத்து PMQ236 விமானம் விபத்துல சிக்கி 60 பேர் செத்தாங்க தானே?? அதை நான் என் கனவுல பார்த்தேன் டாக்டர்..."
என்று சொல்லி முடித்த போது என் கண்கள் கலங்கி போய் இருந்தது... விசும்பிக் கொண்டே,
"அதை நான் தடுத்து இருந்திருக்கலாம் தானே?? என்னை நானே நம்பாததாலே இப்படி 60 உயிர் அநியாயமா போயிடிச்சி ... "

எனக்கு சில விநாடிகள் நேரம் குடுத்த அவர், பின்..

"கூல் டவுன், கூல் டவுன்.. இதுக்கு நீங்க பொறுப்பு ஆயிட்டதா நினைச்சி வருத்தப் படாதீங்க. உங்க நிலைமை எனக்கு புரியுது. இதுல நீங்க வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது மாதிரி சில பேருக்கு வர்ற கனவுகள் சில சமயங்களில் நிஜத்துலேயும் நடக்குறது சகஜம் தான். இதுக்காக நீங்க உங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க. யார் நினைச்சாலும் சில விபத்துக்களை தவிர்க்க முடியாது... உங்களுக்கு சில அறிவுரைகள் சொல்றேன் கேட்டுகங்க. ஆழ்ந்த தூக்கத்துல கனவுகள் பெரும்பாலும் வராது. அப்படியே வந்தாலும், அது நீங்க முழிக்கும் போது ஞாபகத்துல இருக்காது. உங்களுக்கு வர கூடிய கனவுகளை பார்த்தால், உங்களுக்கு தூக்கம் சரியா அமையலேன்னு தோணுது. இது ரொம்ப ரொம்ப சாதாரண தீர்க்கக் கூடிய பிரச்சினை.. சில மருந்துகள் எழுதி தர்றேன்.. ஒரு வாரம் கழிச்சி வந்து பாருங்க சரி ஆகி இருக்கும். சரியா??" என்றார்.

"இல்லை டாக்டர், உங்களை இவ்வளவு அவசரமா நான் சந்திக்க வந்ததுக்கு காரணமே வேற.."

"என்ன காரணம்?? " என்றார் கேள்வியுடன்.

" நீங்க இன்னைக்கு இரவு சாக போறீங்க... " என்று உறுதியுடன் கூறினேன்.
****
கனவு தொடரும்....

Tuesday, August 24, 2004

சிறைப் பறவை

"குயிலை பிடிச்சி கூண்டில் அடைச்சி
கூவ சொல்லுகிற உலகம்!!
மயிலை பிடிச்சி காலை உடைச்சி
ஆட சொல்லுகிற உலகம்!!
அது எப்படி பாடுமய்யா??
அது எப்படி ஆடுமய்யா??
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ......."

இதுவரை இந்த பாட்டை கேட்டு கலங்கின நான் இப்போது அனுபவிக்கிறேன். சந்தோசமா, தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருந்த என்னை, எங்க பாஸ் கூப்பிட்டு, அவர் பக்கத்துல உட்கார வச்சிக்கிட்டார். இனி ஆபீஸ் நேரத்துல நான் எப்படி வலைப்பக்கம் வர முடியும்? எப்படி எழுதுறது? எல்லாம் சோகமயம். நேத்து காலையில் இருந்து நான் இந்த பாட்டை மட்டும் முணுமுணுத்துக்கிட்டு இருக்கேன். வேற என்ன செய்யிறது?.

இருந்தாலும் நம்ம ஊர் பழமொழி ஒண்ணு சொல்லுவாங்க
"சொறி பிடிச்ச குரங்கும், சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மா இருக்காது"ன்னு. அது மாதிரி தானே நானும். ஏதோ எழுதி எழுதி பழகிட்ட எனக்கு, நாள் முழுதும் சும்மா ஆபீஸ் வேலை மட்டும் பார்க்கச் சொன்னா முடியுமா? என்ன செய்யிறதுன்னு யோசிச்சேன்.

எனக்கு குடுத்திருக்குற கணினி, விண்டோஸ் என்.டி. எனக்கு அட்மினிஷ்ட்ரேட்டர் உரிமையும் கிடையாது. எதுவும் புதுசா டவுன்லோட் அல்லது இன்ஸ்டால் பண்ண முடியாது. அவ்வளவு ஏன், இந்த கம்ப்யூட்டர்லே யூனிகோட் கூட இல்ல :(. மெஷின் ஆன் செஞ்சா 10 நிமிஷம் ஆகுது. இதையெல்லாம் பார்த்து எனக்கு ரத்தக் கண்ணீர் வராதது தான் மிச்சம். ஆனா கடவுள் புண்ணியத்துல நோட்பேட் இருந்திச்சோ இல்லையோ நான் தப்பிச்சேன்.

நோட்பேட் யாருக்கும் சந்தேகமும் வராது. அதுனாலே இதுலே எல்லாத்தையும் டைப் செஞ்சிட்டு, ப்ளாப்பி போட்டு வீட்டுக்கு கொண்டு போய் தமிழுக்கு மாத்தணும் :(

"அடாது மழை பெய்தாலும் விடாது...???"

" ஆற்று வெள்ளத்தை அணை போட்டு தடுக்க முடியுமா??"

இப்படியெல்லாம் யோசிச்சி யோசிச்சி இதை டைப் பண்றேன்.

"ஞான தேவனுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் பதிவு வரும்
பதிவு வந்தால்
அனைவரையும் அழுக (படிக்க) வைப்பானே..."

கண்ணீருடன்... :(

Monday, August 23, 2004

பாம்பாட்டி கூட்டம்

இந்த பிபிசி'க்கு கொழுப்பு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதுவும்
இந்தியாவைப் பத்தி நக்கல் பண்றது'ன்னா அல்வா சாப்பிடுற மாதிரி. நம்ம
ஊர்ல எத்தனை விஷயம் நடக்குது. அதாவது உமா பாரதி விவகாரம்,
கருணாநிதி பண்ற கூத்து, ராமதாஸ் ஆடுற ஆட்டம், லல்லு பண்ற
வித்தை...இதை எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஆனா இந்தியாலே எங்கேயாச்சும் ஒரு மூலையிலே பாம்பாட்டிங்க கூட்டம் போட்டா போதும், கேமராவை தூக்கிட்டு அங்கே போயி, இந்தியா'ன்னு சத்தமா சொல்லிட்டு, நம்மூரு சாமியார்கள், அவங்க பக்கத்துல இருக்குற பாம்பாட்டிகளை காட்டி, விரிவா 5 நிமிஷம் பேசுவாங்க.

எங்க ஆபீஸ்ல பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?? நான் இந்தியா
போனா, இப்படி தான் தலையிலே முண்டா கட்டிகிட்டு, அழுக்கு கைலி அல்லது வேட்டி கட்டிகிட்டு, மகுடியோட, பாம்பு வித்தை காட்டுவேனா'ன்னு கேட்க்கமாட்டாங்க. நியூஸ் முடிஞ்சி பார்த்தா என் நாக்கு வெளியே வந்து "ஸ் ஸ் ஸ்" பண்ணுது ... பிபிசி பாதிப்பு'ன்னு நினைக்கிறேன். :) இனி ரொம்ப பார்க்கக்கூடாது.

பரம்பரை பரம்பரையா..

....XYZ.... லேடீஸ் காலேஜ்ல, துணி துவைக்கிற பையன் ஒருத்தன் இருந்தான். அவன் பார்க்குறதுக்கு அம்சமா, நல்ல வாளிப்பா, கட்டுமஸ்தா இருப்பான். அவனை பார்க்குறது, சீண்டுறது இங்கே படிக்கிற லேடீஸ்க்கு ஒரு பொழுபோக்கு. ஒரு நாள் என்னாச்சு 10 பொண்ணுங்க சேர்ந்து அவனை தூக்கிட்டு போய், கெடுத்து கொன்னுட்டாங்க. ஐய்யோ மாட்டிக்குவோம்ன்னு சொல்லி, அவனை பாதாள சாக்கடையில தள்ளிட்டாங்க.

என்ன இந்த கதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?? ஆண்கள் கல்லூரி, இல்லை ஆண்கள் மேனிலைப்பள்ளியிலே படிச்சவங்களா நீங்க??? அப்போ கட்டாயம் உங்களுக்கு இந்த கதை தெரிஞ்சிருக்கும். அதுலே ஆச்சரிய பட ஒண்ணுமே இல்ல.

கதையிலே வர்ற காலேஜ், பொதுவா பொண்ணுங்க மட்டுமே படிக்கிற காலேஜா இருக்கும். துணி துவைக்கிற பையனுக்கு பதிலா.. வாட்ச்மேன், பியூன் இப்படி யாரை வேணாலும் வச்சிக்கங்க. இது ஒரு ஜெனரிக் கதை. ஊருக்கு தகுந்த மாதிரி காலேஜ் பேரையும், ஆளையும் மட்டும் மாத்தி போட்டு இந்த கதை சொல்லுவாங்க.

நிறைய பசங்க (என்னையும் சேர்த்து) இது எப்போ நடந்தது, யார் செத்ததுன்னு எல்லாம் ஆராய மாட்டாங்க. இது ஒரு வாய் மொழி கதையாவே போய்ட்டு இருக்கு. என் நண்பன் ஒருத்தனுக்கு இதை பத்தி தெரிஞ்சிக்காம தூக்கமே வரல (+2 படிக்கும் போது). யார் கிட்டே போய் கேட்குறதுன்னும் தெரியலே. கடைசியா அவன் அப்பா கிட்டேயே கேட்டான், இதெல்லாம் நிஜமாப்பா'ன்னு. அவங்க அப்பா சிரிச்சிகிட்டே...
"நான் படிக்கும் போதும் இதே கதை தாண்டா சொன்னாங்க. ஆனா அது வேற ஊரு, வேற லேடீஸ் காலேஜ்"ன்னாரு.

அம்புட்டுதாங்க :-)

Sunday, August 22, 2004

வாழ்க நீதி!!

மற்றும் ஒரு கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிஸான் மார்வாரி என்ற மிருகம், 6 வயதே ஆன ஒரு சிறுமியை கொன்று, பின் புணர்ந்து, உடலை வேறு வெட்டி எறிந்து போய் இருந்திருக்கிறான். தீர்ப்பளித்த நீதிபதி தனஞ்செய்யின் வழக்கையும் உதாரணம் காட்டி இவனுக்கு தூக்கு தண்டனை அளித்துள்ளார். அவரை வணங்குகிறேன்.

ஐயா மனித(??) உரிமை தர்மவான்களே.. இனி உங்களுக்கு கொஞ்ச நாள் வேலை இருக்கும். இவனை அப்பாவி, பால் குடிக்கும் பிஞ்சுக்கு சமம், ஒரு மனிதனின் உயிர் எடுக்கும் உரிமை இன்னொரு மனிதனுக்கு இல்லை. இவனை கொன்றால் நீதியும் கொலைகாரன் என்பது போல் ஆகிறது என்று ஆங்காங்கு கூடி நின்று கூவி கூவி டிவிக்கு பேட்டி குடுத்து, மனிதர்களை(???) வாழ்விக்க வந்த வானத்து தேவர்கள் போல் படம் காட்டி, கொஞ்சம் பிரபலம் ஆகும் வழியை பாருங்கள். இவனை வரிந்து கட்டி காப்பாற்றி விட்டால், அந்த சிறுமியை பெற்ற தாயின் வயிறு எரிச்சல் உங்களை அமோகமாய் வாழ வைக்கும்.

வாழ்க கொலைகார கொடூரன்கள்!!!

வாழ்க அவர்களை காப்பாற்றும் மனித(???) உரிமையாளர்கள்!!!!

Friday, August 20, 2004

கிழக்கு லண்டன் - PART 2 ட்ரெய்லர்

நாளைக்கு லண்டன் போறேன்.. இது ஒரு எதிர்பாரா பயணம். நண்பன் கிட்ட இருந்து £1 பஸ் டிக்கெட் கிடைச்சது. போக வர மொத்தம் £2 தான் ஆகும்(சாதாரணமா £16 ஆகும்) அதுதான் சரி ஒருநாள் ஊர் சுத்தலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். கட்டாயம் கிழக்கு லண்டன் போவேன். இந்த தடவை கோவில்களுக்கு போகணும்னு முடிவு செஞ்சி இருக்கேன். சனிக்கிழமை அதுவுமா பெருமாளை சேவிக்கப் போறேன். அப்புறம், நல்லா வயிறு முட்ட தின்னுட்டு பிரகாரத்துல படுக்க முடியுமான்னு பார்க்கணும் ;-) இல்லாட்டி பாதாள ரயில் ஸ்டேசன் தான் கதி :-)

ம்ம் சொல்ல மறந்துட்டேனே..இந்த தடவை கொத்து பரோட்டா மட்டும் சாப்பிட மாட்டேன். ;-)

கிழக்கு லண்டன்

சென்ற..சென்ற வாரம் சனிக்கிழமை (7 ஆகஸ்ட்) அன்று என் நண்பரைப் பார்க்க "ஈஸ்ட் ஹம்(East ham)" (லண்டன்) சென்றேன். அது மத்திய லண்டனுக்கு கிழக்குப்பகுதியில் இருக்கிறது. இங்கிலாந்து மகாராணியின் வீட்டில் இருந்து 30 அல்லது 40 நிமிடத்தில் போய் விட கூடிய தூரம் தான். பாதாள ரயில்(TUBE) பயணம் முடிந்து, நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தால் அது லண்டனே இல்லை.. அதிர்ச்சி அடைய வேண்டாம்... அது லண்டன் மாதிரி இல்லை என்று சொல்ல வந்தேன். தெருவெங்கும் குப்பை.. திரும்பிய பக்கம் எல்லாம் தமிழ் குரல், தமிழ் பாட்டு, தமிழர் முகம். பெரும்பாலும் ஈழத்தமிழர்கள் தான்.

".... சில்க் ஸ்டோர்ஸ்" என்று தமிழில் பெயர் பலகை பார்க்க முடிந்தது.
இட்லி £ 0.50
தோசை £1.00
மசாலா தோசை £2.50
என்று தெருவில் கறுப்பு அறிவிப்பு பலகையில் சாக்பீஸில் எழுதி இருந்தார்கள். ப்ளாட்பாரம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இஷ்டத்துக்கு எல்லாரும் ஹார்ன் அடித்துக் கொண்டு காரை கன்னா பின்னா என்று ஓட்டினார்கள்.

நிற்க. இந்த இடத்தில் சில விஷயங்களை சொல்ல வேண்டும்.
நம்மூரை போல் அல்லாமல் இங்கு ஹார்ன் அடிப்பது என்பது எதிராளியை மிக கெட்ட வார்த்தையில் திட்டுவதற்க்கு சமம். ஹார்ன் சத்தம் கேட்டாலே எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள். ஹார்ன் வாங்கினோம் என்றால் எதோ தப்பு செய்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதை தவிர, வெகு அரிதாக தங்களின் வாகனம் இருக்கிறது என்பதை பிறருக்கு, முக்கியமாய் ரிவர்ஸ் வருபவருக்கு உணர்த்த மட்டுமே ஹார்ன் உபயோகப்படும்.

சாலையில் சில இடங்களில் மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கும் பாதசாரிகள் சாலை கடக்குமிடங்கள் இருக்கும். இவ்விடங்களை கடக்கும் போது வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக வர வேண்டும். ஏனென்றால் எந்த நிமிடம் யார் வேண்டுமானாலும் சாலையை கடக்கக் கூடும். பாதசாரிகளுக்குத் தான் அங்கே முன்னுரிமை. இந்த வகையான இடத்தை, இங்கிலாந்தின் எல்லா பகுதியிலும், எல்லா வாகன ஓட்டிகளும் பொறுப்பாய், பொறுமையாய் கடப்பார்கள். ஆனால் இங்கே மட்டும், வாகன ஓட்டிகள் முன்னுரிமை எடுத்துக் கொண்டு பாதசாரிகளை பயமுறுத்தி விட்டு ஹார்ன் வேறு அடித்து கலவரப் படுத்தி சென்றார்கள்.

சினிமா போஸ்டர்களை பார்க்க முடிந்தது. சத்தமாய் தெரு வரை ஒலிக்கும் தமிழ் பாடல்கள் இருந்தது. மொத்ததில் சற்று முன்னேறிய ஒரு பாண்டிபஜாரை பார்ப்பது போல் தான் இருந்தது.

அங்கே சென்னை ரெஸ்டாரெண்ட் சென்றோம். 2 தோசை, 3 வகை சட்னி, சாம்பார், பொங்கல், கேசரி எல்லாம் சேர்த்து £3.50 மட்டுமே. திருப்தியாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கில்லி, கந்தா கடம்பா கதிர் வேலா VCDகளை வாங்கினேன்.

அங்கே இருந்த ஒரு கடையில் சமையலுக்கு தேவயான சில காய்கறிகள், பருப்பு, கடலை வகைகளை வாங்கிக் கொண்டு, என் நண்பனின் அறைக்கு சென்றோம். சிறிது நேரம் பேசிவிட்டு, "சானரிபார்க்" என்ற இடத்திற்க்கு சென்றோம். அது 5 அல்லது 6 மைல் தொலைவு தான்.. ஈஸ்ட்ஹாமுக்கும் இந்த இடத்திற்க்கும் எவ்வளவு வித்தியாசம்??? இங்கே விண்ணை முட்டும் கட்டிடங்கள், தேம்ஸ் நதியின் ஓரத்தில் உயர்ந்து எழும்பி நின்றிருந்தது. துடைத்து வைத்தது போல் சாலைகள், வெளிநாடுதான் இது என்ற தோற்றம் தரும் வகையில் பிரம்மாண்டம், பசுமை, தூய்மை அனைத்தும் இருந்தது. அங்கே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஆளில்லா ரயிலில் ஏறி மீண்டும், பாண்டிபஜார் வந்தேன்.

அங்கே ஒரு ஓட்டலில் "கொத்து பரொட்டா" சாப்பிட்டேன். காரம் கண்ணை மறைத்து கண்ணீர் பெருகியது. கிட்டதட்ட 1 வருடம் கழித்து கொத்து பரொட்டா சாப்பிடுவதால் வரும் கண்ணீர் என்று என் நண்பன் நினைத்தான். அவனிடம் உண்மையான காரணம் சொன்னவுடன் சிரித்தான்.

இப்படியாக என் தாய் தமிழ் நாட்டை இங்கே லண்டனில் இல்லை இல்லை ஈஸ்ட்ஹாமில் தரிசித்தேன். நான் இங்கே சொல்ல மறந்தவை அங்கே இருக்கும் கோவில்கள்.. பிரபலமான இந்த கோவில்களுக்கு அன்று என்னால் செல்ல முடியவில்லை. அதனால் நோ கமெண்ட்ஸ்.

கிழக்குப்பகுதிக்கு ஒரு ஈஸ்ட்ஹாம் என்றால் மேற்க்கு பகுதிக்கு ஒரு "செளத்ஹால்" (southaal). இது லண்டனின் பஞ்சாப் என்று செல்லமாக சொல்வார்கள். ஈஸ்ட்ஹாமில் தமிழ் என்றால் இங்கே ஹிந்தி, பஞ்சாபி பாட்டுக்கள் தான் கேட்கும். ப்ளாட்பார ஜிலேபி கடைகள், பான் மசாலா கடைகள் அனைத்தும் உண்டு. ஹிந்தி பட போஸ்டர்கள், சுவற்றில் தீட்டப்பட்டிருக்கும் பான் மசாலா காவியும் இங்கு உண்டு. இந்த இடத்தைப் பார்த்தால் வட இந்தியாவின் ஜன நெரிசல் மிகுந்த ஒரு நகரத்துக்கு வந்தது போலவே இருக்கும்

பின் குறிப்பு.. நிஜமாவே இது என் பின் குறிப்பு தான்... சனிக்கிழமை இரவு நான் சாப்பிட்ட கொத்து பரொட்டா காரம் தன் வேலையை அடுத்த நாள் சரியாகவே செய்தது. ;-)

Thursday, August 19, 2004

கேள்விகள்

மாங்காமணி எம்.பி.பி.எஸ் பதிவை படித்து விட்டு ஒரு நண்பர் எனக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.

"நன்றாக கிண்டலாக எழுதுகிறீர்கள். இப்படி எழுதுனா எவனாவது PMK காரன் பார்த்துட்டு இந்தியாலே இருந்தா ஆட்டோவோ, வெளிநாட்டில் இருந்தால் FBஈ கோ ஈ-மெயில் அனுப்பி எதுனா பிரச்சினை வந்துறாதா? எதுக்கு கேக்குறேன்னா .... நானும் கருணாநிதியை கிண்டல் பண்ணி ஒரு கவிதை போட்டுட்டு அப்புறம் எடுத்திட்டேன். என் கேள்வி என்னவென்றால், நாம் தான் இதை எழுதுகிறோம் என்று கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? Blogger மூலம், FBI'யானது நம் கணினியின் IP விலாசத்தை கண்டுபிடிக்க முடியாதா?"

எனக்கு தெரிந்து நம் கணினியின் விலாசத்தை சுலபமாக கண்டு பிடிக்க முடியும். அதை வைத்து எங்கிருந்து நாம் வலை பதிக்கிறோம் என்பதையும் கண்டுபிடிக்கலாம். ஆனால் PMK காரர்களின் மின்னஞ்சலை வைத்து மட்டும் FBI நம்மை பிடித்துவிடுவார்கள் என்பது முடியாத விஷயம் என்று நம்புகிறேன்.

எனக்கு என்ன தெரியவேண்டுமென்றால்,
- தமிழ்நாட்டில் இருந்தால் ஆட்டோ அனுப்புவார்களா? இப்படி யாராவது வலை பதிந்து பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா?

- வெளிநாட்டில் இருந்தால் FBI பிடிப்பார்களா? அப்படி யாரையாவது பிடித்திருக்கிறார்களா? (வேறு நாட்டில், வேறு பிரச்சினைக்காகவாகவும் இருக்கலாம்.)

இந்த கேள்விகளுக்கு உங்களில் யாருக்காவது பதில் தெரிந்தால் ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.

நன்றி

கருத்து கணிப்பு முடிவு 18-Aug-2004

ஈராக் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டுள்ள இந்திய பிணை கைதிகள் உயிருடன் விடுவிக்கப்படுவார்களா?

மொத்த ஓட்டுகள் : 7

சாத்தியம் இருக்கிறது என்றவர்கள் : 6
இல்லை என்றவர்கள் : 1
தெரியாது என்றவர்கள் : 0

ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி

Wednesday, August 18, 2004

ஒரு ரயில் பயணமும், பிஸ்கட் பாக்கெட்டும்.. PART-2

ரயில் "தடக் தடக்" என்று ஒரே சீராய் போய்க் கொண்டிருதது.. பெட்டி லேசாய்இழுபடுவது போல் ஒரு உணர்ச்சி.. மெல்ல கண் இமை திறந்து பார்த்தேன்... முடிவு செய்து விட்டேன்.. அவன் தான்.. திருடன் தான் அவன்.. நிச்சயம்.... பெட்டியை லேசாய் இழுக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒரு விநாடி தாமதிது வெடுக்கென்று எழுந்தேன். பதறிப்போய் பின் வாங்கி அமர்ந்தான் அவன்.

"என்ன சார், ஏதாச்சும் கெட்ட கனவா?? இப்படி திடீர்ன்னு எந்திரிச்சிட்டீங்க" என்றான் ஒன்றும் தெரியாதவனாய்..

இந்த முறை நான் சிரிக்கவில்லை, லேசான முறைப்புடன்..
"என் பெட்டி மேல உஙகளுக்கு என்ன கை?? என்ன பார்த்துகிட்டு இருந்தீங்க?" என்றேன்.

" ஓ அதுவா சார்.. பெட்டி மேல உங்க பேரு இருந்திச்சி.. சார் சார்ன்னு கூப்பிடுறதை விட பேரு சொல்லி கூப்பிடலாம்ன்னு தான் பார்த்தேன்.. தப்பா நினைச்சிட்டீங்களா?" என்று சொல்லிவிட்டு அரை விநாடி தாமதித்து "...பயந்துட்டீங்களா.. " என்று சொல்லி திரும்பியும் அதே சிரிப்பை ஆரம்பித்தார். . பற்றிக்கொண்டு வந்தது எனக்கு.. இருந்தும் அதை மறைத்துக்கொண்டு சன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தேன்.

"பிஸ்கட் சாப்பிடுறீங்களா சார்" என்றார் இந்த முறை..

உங்களுடன் பேச்சு குடுத்தவாறு அவர்கள் பையிலிருந்து மயக்க மருந்து தடவப்பட்ட பிஸ்கட் அல்லது வேறு ஏதேனும் உணவு பொருட்களை நீட்டுவார்கள்.

அவசரமாய் தினத்தந்திஐ உதறி விட்டு..

"வேண்டாம் என்கிட்ட பிஸ்கட் இருக்கு" என்று சொன்னேன்.

அவரும் விடவில்லை.
"அட பயப்படாதீங்க சார். நான் ஒண்ணும் இதுலே மயக்க மருந்து எல்லாம் தடவலே. பாருங்க நான் தைரியமா சாப்பிடுறேன்." என்று சொன்னவாறு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அவர்கள் சாப்பிடும் பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து எடுத்து தந்தாலும் சாப்பிடவேண்டாம். ஏனென்றால் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை அவர்களுக்கு அடையாளம் தெரியும். எனவே நல்லவற்றை சாப்பிட்டு விட்டு உங்களுக்கு மாற்றி கொடுத்து விடுவார்கள்.

தினத்தந்தி மீண்டும் எச்சரித்தது.

"வேண்டாம் " என்று பிடிவாதமாய் மறுத்து விட்டு என் பையில் இருந்த அந்த வெளிநாட்டு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தேன். அவரிடம் காட்டி..

"பாருங்க என்கிட்டேயும் இருக்கு. நான் என்னோடதையே சாப்பிட்டுக்குறேன்" என்று சொல்லிவிட்டுஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன்.

"அது எந்த கம்பேனி சார்" என்றார் பிஸ்கட் பாக்கெட்டை காட்டி.

"இது பாரின் பிஸ்கட்.. நான் போன வாரம் லண்டன் போன போது வாங்கிட்டு வந்தது" என்றேன் பெருமையாக.

"ஒண்ணு குடுங்க சாப்பிட்டு பார்க்குறேன்" என்றார் சிறிதும் தயக்கம் இல்லாமல், பின் அவரே

"நான் லண்டன் போய் இதை எல்லாம் வாங்க முடியாது சார். அவ்வளவு படிப்பு இல்ல. நீங்க ஒண்ணு குடுத்தா ஊருல போய் பெருமையா சொல்லிக்குவேன்.. லண்டன் பிஸ்கட் சாப்பிட்டதா" என்றார்..

எனக்கே பாவமாக இருந்தது.. ஒன்று தானே கேக்கிறார் குடுத்துவிடலாம் என்று பாக்கெட்டை நீட்டினேன். 3 பிஸ்கட் எடுத்துக்கொண்டு.. லேசாக இளித்தார்.

"தப்பா நினைச்சிக்காதீங்க.. சம்சாரத்துக்கு ஒண்ணு.. என் பொண்ணுக்கு ஒண்ணு..அதான் சேர்த்து எடுத்துகிட்டேன்.."

"பரவாயில்லை வேணா இன்னும் 2 எடுத்துகங்க" என்றேன்.

"இருக்கட்டும் சார்.. மனுஷனுக்கு நாக்கு முக்கியம்.. அதை அடக்கனும்... " என்றார் ஒரு பிஸ்கட்டை சாப்பிட்ட படி...அடுத்த 2 நிமிடத்தில் மூன்றையும் காலி செய்து விட்டு..

"சில சமயம் நாக்கை அடக்க முடியறதில்லீங்க" என்று சிரித்தார்.

எனக்கு பாத்ரூம் வருவது போல் இருந்தது.

" கொஞ்சம் என் பெட்டியை பார்த்துகங்க.. நான் பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன்" என்றேன்.

"தாராளமா போய்ட்டு வாங்க சார்.. நான் ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டேன். நீங்க வந்ததும் நான் போகனும்.. " என்று சொல்லி சிரித்தார்.

நான் போய் 5 நிமிடத்தில் திரும்பி வரும் போது அவர் நன்றாக உறங்கி போய் இருந்தார். தொட்டுப் பார்த்தேன்.. லேசாக உலுக்கியும் பார்த்தேன். முழிக்கவில்லை..பிஸ்கட் தன் வேலையை சரியாக செய்து விட்டது. என் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை. அந்த ஏமாந்தவனின் பெட்டியை தூக்கி கொண்டு.. அடுத்த 5வது நிமிடத்தில் வந்த வேலூர் ஜங்ஷனில் இறங்கி மக்களோடு மக்களாய் கலந்துபோனேன்.

நாளைய தினத்தந்தியை அவசியம் பாருங்கள். இதே கதை கட்டாயம் வரும்.
***

Tuesday, August 17, 2004

ஒரு ரயில் பயணமும், பிஸ்கட் பாக்கெட்டும்.. - PART - 1

இந்தியாவின் மற்ற பெரிய ஸ்டேசன்களை போலவே சென்னை சென்ட்ரல் அன்றும் நிரம்பிவழிந்துக் கொண்டிருந்தது. மொத்த மக்கள் தொகையும் அங்கே வந்து குவிந்தது போல்அத்தனை தலைகள். அவற்றுக்கு நடுவே புகுந்து, பிழியப்பட்டு, நைந்து, வேர்வைவெளியேற, சேலம் செல்லும் விரைவு புகையில்லா வண்டியை கண்டுபிடித்தேன். நீண்ட வால்போல் அத்தனை பெட்டிகளை இணைத்துக்கொண்டு, ஒரு சத்தமும் இடாமல் அமைதியாய்நின்று கொண்டிருந்தது.

உடம்பின் வேர்வையில் காற்று பட்டு அதை குளிர செய்தது. உடலும் அதனால்அங்கங்கே குளிர்ந்தது. சன்னலோர இடம் தேடி கடைசி வரை ஒரு கால்நடைபயணம். வீணாகவில்லை அற்புதமாய் ஒரு இடம் கிடைத்தது. "கண்டேன் சீதையை"என்ற அனுமன் போல் "கண்டேன் சீட்டினை" என்று மனதிற்க்குள் கூவிக்கொண்டு அங்கே சென்றுஅமர்ந்தேன். உடல் "கச கச" என்றிருந்தது. சட்டையை லேசாய் தூக்கி விட்டுசன்னலை நெருக்கிக் கொண்டு அமர்ந்தேன்.

ஏசி'யா அது?? சாதாரண சன்னல் தானே! என் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறுகாற்று வரவில்லை. காற்றில் ஈரம் தென்பட்டால் எவனது துப்பியது என்றுஎட்டிப்பார்க்கத் தோன்றியது. கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்தமர்ந்தேன். "ஷ் ஷ் ஷ் ஷ்அப்பாடா" என்றவாறு என்னைப்போல் ஒரு ஜீவன் பழைய ரயில் எஞ்சின் சத்தம் போல்மூச்சு விட்டுக்கொண்டே வந்தது.. இல்லை வந்தார். சினேகமாய் புன்னகைத்தார்.நானும் சிரித்தேன்.

" சென்னையில் இருந்து கோயமுத்தூர் நோக்கிச் செல்லும்....... ".என்ற தேனறிவிப்பு என்காதில் தேனாய் தான் பாய்ந்தது... குணா கமல் போல "வரும் வரும் வரும் வரும்..காத்து வரும் " என்று மனம் முனகியது. அறிவிப்பு முடிந்த போது உடம்பை லேசாய்உதறிக்கொண்டு அந்த பெரிய இரும்பு பாம்பு சென்னையில் இருந்து புறப்பட்டது.

"என்ன சார் சேலமா" என்று ஆரம்பித்தார் எதிரே இருந்தவர்... இப்போது அவர்தனது ரயில் எஞ்சினை அணைத்து விட்டார் போலும், சாதரணமாக பேசினார்.கடந்த 30 நிமிடமாக அவரது "ஷ் ஷ் ஷ்" சத்தம் கேட்டு எனக்கு எந்த ரயிலில்போகிறோம் என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒரு சாதாரண மனிதன் இப்படி"ஷ்ஷ்...." பண்ண முடியுமா என்று குழப்பம் ஆகி, நானே 2 முறை வாசல் வரை சென்று"ஷ்......" செய்து பார்த்தேன்... ம்ம்ஹூம்.. அது என் காதுக்கே எட்டவில்லை. மேல்மூச்சு கீழ் மூச்சு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே மூச்சாக விட்டு இப்போதுதான் சாதா மூச்சுக்கு வந்து என்னிடம் இந்த கேள்வியை கேட்டார்.

"ஆமா" என்றேன் ஒரே வார்த்தையில்.. ஏனோ அந்த ஆளை எனக்கு பிடிக்கவில்லை.

"ஏதாச்சும் புக்ஸ் வச்சி இருக்கீங்களா சார்" என்றார் அணைந்து போன ரயில்எஞ்சின்.
இல்லை என்பது போல் தலையாட்டினேன்

"பரவாயில்லை என்கிட்ட குமுதம், கல்கி, ஜூனியர் விகடன் இருக்கு, நீங்கஏதாச்சும் ஒண்ணு படிங்க நான் ஒண்ணு படிக்கிறேன்" என்று கல்கியை நீட்டினார்.

திடுக்கென்று காலையில் படித்த தினத்தந்தி ஞாபகம் வந்து தொலைத்தது.
ரயிலில் திருடும் பெரும்பாலோர், சக பயணிகளிடம் மிகுந்த பாசம் உள்ளவராக நடிப்பர்... புதியவர்களின் நட்பை உடனே நம்ப வேண்டாம்...

"என்ன சார் யோசனை? கல்கி வேண்டாமா?" ஷ்ஷின் குரல்

"ம்ம் ம்ம்க் வேண்டாம்..." என்று மறுத்தேன்..

"அப்போ ஜூனியர் விகடன் படிங்க.. இந்தாங்க" என்றார்..

நீங்கள் கேட்க்காமலே உங்களுக்கு தேவையானதை தருவதை போல் தருவார்.அவரது பேச்சில் உதவியில் மயங்கி விட வேண்டாம்.

"என்ன சார், எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா என்ன?? சூப்பர் பாஸ்ட் சார்நீங்க. நேத்து தான் வந்துச்சி, இன்னைக்கி நீங்க படிச்சி முடிச்சிஇருக்கீங்க.. சரி விடுங்க புத்தகம் வேண்டாம், நாம கொஞ்ச நேரம் பேசிகிட்டுஇருக்கலாம் சார்"

உங்களுக்கு மிக நெருக்கமானவராக காட்டிக்கொள்ள முனைவார். நீங்கள்சாதாரணமாக பேசும் பேச்சில் இருந்து உங்களை அறியாமல் சில முக்கியமானவிவரங்களை எடுத்து தனக்கும் அது தெரியும் என்பது போல் கட்டிக்கொள்வார். எனவே இவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நன்று.
தினத்தந்தி அடிக்கடி குறுக்கே வந்து ஆலோசனை சொல்லியது.

"இல்லீங்க எனக்கு தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்குறேன்.. அப்புறம் பேசலாம்"என்றேன்.

என்னையே உற்றுப்பார்த்த அந்த ரயில் எஞ்சின்..

"சரி தூங்குங்க.. பார்த்தா ரொம்ப களைப்பா தெரியிரீங்க.. கவலைபடாதீங்க. தூங்குங்க.. உங்க பொட்டி எது எதுன்னு சொல்லுங்க, நான் வேணாபார்த்துக்குறேன்" என்றார்..

திடீரென்று அடி வயிற்றில் அமிலம் சுரந்தது... ஆஹா ஒரு பக்காத் திருடன் நம்முன்னாடி உட்காந்து இருக்கானே.. எப்படி பிடிப்பது என்று மனம் பர பரக்கஆரம்பித்தது.. கண் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது..

"என்ன சார், கண்ணை மூட முடியலியா? வெளிச்சம் இருந்தா எப்படி சார் தூக்கம்வரும், கைகுட்டை வச்சி இருந்தா அதை எடுத்து கண்ணை கட்டிகங்க" என்றார்.

'நான் என்ன இளிச்சவாயனாடா?, நான் கண்ணை கட்டிகிட்டா நீ அடுத்த ஸ்டேஸன்வரும் போது எஸ்கேப் ஆயிடுவே, அப்புறம் தினத்தந்திலே என் பேட்டி + போட்டோ போட்டு..இன்று ஏமாந்தவர்ன்னு வரும்.. ம்க்கும். நானாவது ஏமாற்றதாவது... ' என்றுனினைத்துக் கொண்டிருக்கும் போது..

"என்ன சார் யோசனை, நீங்க கண்ணை கட்டிகிட்டு இருக்கும் போது உங்க பொட்டியைதூக்கிட்டு போயிடுவேன்னு பயப்படுறீங்களா?" என்று சொல்லி ஸ்டார்டிங் ட்ரபிள் ஆனரயில் எஞ்சின் மாதிரி "ஹஸ் ஹ்ச் ஸ்க் அஷ்க்ஸ்ஸ்ஸ் ஹஸ்க் ஹஸ்க்" என்று சிரித்தார்

"இல்லீங்க" என்றேன் ரொம்ப அப்பாவியாய்.

"பயப்படாதீங்க .. நான் நல்லவன் தான்.. தைரியமா தூங்குங்க.. நான்பார்த்துக்குறேன்" என்றார்

அந்த ஆள் அப்படி சொல்ல சொல்ல எனக்கு பயம் அதிகம் ஆனது.. இந்த கம்பார்ட்மெண்டில்வேறு கூட்டமே இல்லை.. என்ன செய்வது என்று முழித்தேன்.. இல்லை கண்ணை மூடிக்கொண்டு,பெட்டி மேல் ஒரு கை வைத்துக்கொண்டு யோசித்தேன்.

ரயில் "தடக் தடக்" என்று ஒரே சீராய் போய்க் கொண்டிருதது.. பெட்டி லேசாய்இழுபடுவது போல் ஒரு உணர்ச்சி.. மெல்ல கண் இமை திறந்து பார்த்தேன்... முடிவுசெய்துவிட்டேன்.. அவன் தான்.. திருடன் தான் அவன்.. நிச்சயம்.... பெட்டியை லேசாய்இழுக்க பார்த்துக் கொண்டிருந்தான்..

தொடரும் ......

Monday, August 16, 2004

"மாங்காமணி எம்.பி.பி.ஸ்" - துண்டு 2

அடுத்த நாள் சோமதாஸ் அறிக்கை "இந்த சினிமாகாரங்க பண்ற தேவையற்ற ஸ்டைல் காரணமா பல தமிழ் இளைஞர்கள் வாழ்க்கை நாசமா போகுது, உருபடாம போகுது, அதை தடுத்து நிறுத்தனும், இனி எவனும் சினிமாலே தம் அடிக்கிற மாதிரி, தண்ணி அடிக்கிற மாதிரி நடிக்க கூடாது. அப்படி நடிச்சா.. கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்து அந்த படம் ஓடுற தியேட்டர், படப்பொட்டி, படம் பார்க்க வந்தவங்க எல்லாரையும் அடிச்சி நொறுக்கிடுவாங்க. அப்படி ஏதாவது நடந்தா எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு இப்போவே பத்திரம் எழுதி குடுத்துடறேன்"

***
இதுக்கு நடுவுலே மாயலலிதா குடுத்த வேட்டி கிழிஞ்சி போனதாலே, திரும்பவும் அருணாபதி கிட்ட போறார் சோமதாஸ்

"வாய்யா சோமதாஸ், அங்கே போய் மானம் ஈனம் கெட்டு திரும்பி வர்றியா.. "
என்று இளக்காரமா சிரிச்சார்.

"வெளியே சொல்லாதீங்க அருணாபதி. எல்லாத்தையும் மறந்துடலாம். இனி சத்தியமா நான் அந்த பக்கம் போக மாட்டேன். வேட்டி என்ன, கோவணமே பறந்தாலும் இனி நான் உங்க பக்கம் தான்.இது சத்தியம் சத்தியம் சத்தியம்"

" இது மாதிரி நீ ஆயிரம் சத்தியம் பத்திரம் எழுதி தந்து இருக்கே. சரி விடு. நம்புறேன். இப்போ தேர்தல் வருது. என் கூட வேலை செய், உனக்கும் 4 இடம் தர்றேன்."

வாயெல்லாம் பல்லாக இளித்த படி சோமதாஸ் எழுந்து போகிறார்.

"கோழி நடை போட்டு கூரையில் ஏறு..
கூரைக்கு வந்ததும், கொக்கர கோன்னு கூவு
என் பேரு சோமதாஸு, மகன் பேரு மாங்காமணி
என்னோட உள்ளதெல்லாம் வெட்டு வெட்டு வெட்டுகிளி.."
அப்படின்னு பாட்டு வருது...

***
மாங்காமணி நல்லா தூங்கிட்டு இருக்கான்.
"டேய் மாங்கா.. எந்திரிடா.. இப்படியே தூங்கிட்டு இரு.. உருப்படாம போய்டுவே."

லேசாய் கண்ணை கசக்கியவாறு எழுந்த மாங்காமணி
"என்னாப்பா இந்த நேரம் எழுப்பிகிட்டு.. "

"கேள்வி கேட்க்காதே, அப்படியே என்கூட கொல்லைப்பக்கமா வா.. ரன்ராமன்சிங்கை பார்த்துட்டு விடியறதுக்குள்ளே வந்துடலாம்."

"அந்தாளை ஏன் பார்க்கணும் அதான் ஏற்கனவே இத்தானியா பூந்தியை பார்த்தாச்சே?"

"டேய் கேள்வி கேட்காம வா.. கொல்லைபக்கமா போறதை யாரும் பார்க்க கூடாது.. எந்திரிச்சி வா.."

****
மாங்காமணி மந்திரி அலுவலகம்.நிருபர் கூட்டம்

"நீங்க எப்படி மந்திரி ஆனீங்க.."

"நான் நானாவே மந்திரி ஆயிட்டேன்".

"உங்க அப்பா சிபாரிசு செஞ்சாரா?"

"இல்லை, கட்சி சிபாரிசு செஞ்சது".

"கட்சிலே யாரு சிபாரிசு செஞ்சாங்க"

"கட்சிலே இருக்குற சோமதாஸ் சிபாரிசு செஞ்சார்"

"சோமதாஸ் தானே உங்க அப்பா?"

"சோமதாஸ் தான் என் அப்பா. ஆனா அவர் சிபாரிசு செய்யலே. கட்சிலே இருக்குற சோமதாஸ் தான் சிபாரிசு செஞ்சார்"

"அப்போ ரெண்டு பேரும் வேற வேறயா?"

"இல்ல.. என் அப்பா சோமதாஸ் தான் கட்சிலே இருக்கார். ஆனா அவர் சிபாரிசு பண்ணும் போது, கட்சி கூட்டத்துலே இருந்தார். அப்போ அவர் கட்சி தலைவர். அதுனாலே அது கட்சி எடுத்த முடிவு. என் அப்பா எடுத்த முடிவு இல்லே."

மண்டை காய்ந்து போன நிருபர்கள் எதை எழுதுவது என்று தெரியாமல் திரு திரு வென்று முழித்த படி வெளியேறுகிறார்கள்.
****

பெஞ்சு மீது நிற்கிறான் மாங்காமணி. கீழே சவுக்குடன் சோமதாஸ்
"என்னடா இது.. என்ன வேலை செஞ்சி இருக்கே?? யார்கிட்டே கேட்டு இப்படி அறிக்கை விட்டே.. எப்போ இந்த தொற்று நோயை கண்டு பிடிச்சே?? என்கிட்டே கேட்காம எப்படி நீ வெளியே சொல்லலாம்... இப்போ பாரு இந்த தினப்பூ பத்திரிக்கை உன்னை நார் நாரா கிழிச்சி இருக்கு.. இரு கவனிச்சிகிறேன்"

"அய்யோ அட்ச்சிடாதீங்கப்பா.." என்று அழுகிறான்.

"அடச்சே உன்னை அடிக்க இல்லை... தினப்பூவை அடிக்கிறதுக்கு..அடுத்த நாள் தினப்பூ அலுவலகம் நொறுக்கப்படுகிறது..
***

இப்படி துண்டு துண்டா இந்த கேடு கெட்ட படம் போகுதுங்க. உங்களுக்கு இதுவரைக்கும் ஏதாசும் புரிஞ்சி இருந்தா ஒரு கடுதாசி போடுங்க..

007 கிட்ட சொல்லி இந்த கண்றாவியை எடுத்த இடத்துலேயே வைக்க சொல்லிட்டேன்....

துண்டு காலி.

Saturday, August 14, 2004

"மாங்காமணி எம்.பி.பி.ஸ்" - துண்டு 1

"மாங்காமணி எம்.பி.பி.ஸ்"ன்னு ஒரு படம் வரப்போகுதாம். பேரை பார்த்ததும் எனக்குள்ளே ஒரு பொறி, கடலை தட்டிச்சி. உடனே 007க்கு போன் போட்டேன். இப்போ அதோட திரைக்கதை (ஸ்கிரிப்ட்) என் கையிலே.
ஆ ஹா ஹா ஹா (ஒண்ணும் இல்லே சிரிப்பு தான்). படிச்சி பார்த்தேன், கதை துண்டு துண்டா இருக்கு. ஒரு தொடர்ச்சி காணோம். கிடைச்ச வரை தர்றேன். படிச்சிகங்க.

படத்தோட ஹீரோ-மாங்காமணி (ஹீரோயின் இல்லையாம்) மற்றும் சோமதாஸ்
மற்றவர்கள் - அருணாபதி, மாயலலிதா, ரன்ராமன்சிங், இத்தானியா பூந்தி மற்றும் பலர்.

தயாரிப்பு - சோமதாஸ். (பையனை வச்சி அப்பா படம் எடுத்து இருக்கார்)

மாங்காமணி 5 வயசு குழந்தை. பென்சிலை உடைச்சிகிட்டு இருக்கார். அவங்கம்மா ஓடி வர்றாங்க.

"இப்படி பண்ணக் கூடாது செல்லம், கையிலே குத்திடும்" என்கிறார். அப்பொழுது சோமதாஸ் வருகிறார்.

"தடுக்காதே அவனை. அவன் ரத்தம் அப்படி. பென்சில் உடையாட்டி அவன் கையிலே கத்தி குடு. அறுத்து போடட்டும். மரத்தால் ஆன பென்சிலை பார்த்தா அவனுக்கு உடைக்கத்தான் தோணும். அதுக்காக அவனை நீ திட்டாதே. அவன் என் ரத்தம். அப்படித்தான் இருப்பான்."

"ஐய்யோ, அவனும் உங்க மாதிரி ஆயிடுவானா.. அதான் எனக்கு பயமா இருக்குங்க. வீடே பைத்தியகார கும்பலா இருக்கும் அப்புறம். வேண்டாம்... " என்று அழுகிறார்.

"ச்சீ.. இப்படி முட்டள் தனமா பேசாதே. அவன் பெரிய டாக்டர் ஆகி பல தொற்று வியாதி கண்டு பிடிப்பான். யாரையும் எதிர்க்காமலே பார்லிமெண்ட் மந்திரி ஆவான்.. அவன் ஜாதகம் உனக்கு தெரியாது.. எனக்கு மட்டும் தான் தெரியும்..." என்று சொல்லிவிட்டு
திரும்புகிறார்..

டைட்டில் சாங்....

"அதாண்டா இதாண்டா மாங்காமணி வந்தான்டா
வட தமிழ்நாடே வன்னியருக்கு சொந்தம்டா
சோமதாஸு சொல்லிடுவான்டா டா டா டா
மாங்காமணி நடந்திடுவான்டா டா டா டா
நான் தொகுதி குடுத்த ஆளை மறந்ததில்லடா
ஆனா ப்லிமு காட்டுற ஆளை விடுவதில்லடா.. ஆ ஆ ஆ"

இப்படி பாட்டு முடியும் போது..

மாங்காமணி பெருசா வளர்ந்துடுறார்.அவரை க்ளொசப்ல காட்டுறாங்க. கையிலே ஒரு மரச்செடி வச்சிகிட்டு இருக்கார். அவரை சுத்தி
"ஜைன் ஜப் ஜைன் ஜப்"ன்னு அடிச்சிகிட்டு ஒரு கும்பல் இருக்கு.

"ஊஊஉலுலு உலு உலு" கத்திகிட்டு ஒரு கும்பல் (பாடிகிட்டு) இருக்கு.

"என்னை வளர்க்கும் பச்சை தாயக இயக்கமே, அதன் வேர்களே, விழுதுகளே, பூக்களே, வண்டுகளே, உங்களுக்காக உழைக்க நானிருக்கிறேன், என் ஒரு துளி வியர்வைக்கு 1 மரம் வெட்டிதந்த காடு வெட்டிகளுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். இனி யாரும் எந்த மரங்களையும் வெட்டக்கூடாது, நாம் தான் அதற்கு பாதுகாப்பு. அப்படி யாரேனும் மரம் வெட்ட முயற்சித்தால்.. நாம் வெட்டிடுவோம்.. "
அப்போது ஒரு தொண்டன்.

"எதை தலைவா? மரத்தையா இல்லை மரம் வெட்ட வந்தவனையா?"

"குழப்பம் வேண்டாம் தெளிவாக சொல்கிறேன். இதை பத்தி சோமதாஸ் சொல்வார்" என்று சொல்லிவிட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் பேந்த பேந்த முழித்தப்படி அமருகிறார்.

சோமதாஸ் எழுந்து

" நான் ரொம்ப பேசப் போறது இல்லே. உங்க சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்றேன். ஏன்னா இது கட்சி மீட்டிங் இல்ல, அசிங்கமா பேசுறதுக்கு. அதுனாலே ...இதோ என் பதில்... தப்பு நம்ம பக்கம் இருந்தா நாம மரத்தை வெட்டுவோம், தப்பு எதிராளி பக்கம் இருந்தா அவன் தலையை வெட்டுவோம்.." என்று முடித்தார்...

கூட்டம் கரகோஷம் எழுப்பியது.
அப்படியே ஒரு சாங்...
"நம்ம அய்யா காலடி மண்ணெடுத்து..
சாராயத்தை புதைச்சி வச்சோம்..
அய்யா அவர் சொல்லுக்குத்தான்
மரத்தை எல்லாம் விட்டுவச்சோம்.."

***
காட்சி மாறுகிறது. அண்டர்வேருடன் ஓடி வருகிறார் சோமதாஸ்.பின்னால் யாரும் இல்லை. மாங்காமணி தடுத்து நிறுத்துகிறார்.

"என்னாச்சுப்பா என்னாச்சு?? வேட்டி எங்கே.. காத்துல போயிடிச்சா??" என்கிறார்.
"இல்லைடா மகனே.. அந்த அருணாபதி இருக்கானே, பேசலாம்னு கூப்பிட்டு என் வேட்டியை உருவிட்டான்.. அவனை சும்மா விட கூடாது.. வா போகலாம்.." என்றார்.

"எங்கே போறதுப்பா?"

"மாயலலிதா கடைக்கு போய் வேட்டி வாங்கிட்டு.. அந்த அருணாபதியை பழி வாங்கலாம்."

மாயலலிதா கடை..

சோமதாஸ் சொல்கிறார்,
"நல்ல வேளை, அவன் வேட்டி உருவும் போதே ஓடி வந்துட்டேன், இல்லை என் கோவணத்தையும் உருவி இருப்பான்..." என்றார் வேதனையுடன்.

"அதுக்கு தான் சொன்னேன், இங்கே வந்து வேட்டி வாங்கிகங்கன்னு... கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும், உங்க மானம் போய் இருக்காதுல்ல?" என்றார் மாயலலிதா..

"அருணாபதியோட இனி ஒட்டும் இல்ல உறவும் இல்ல.. இனி நம்ம வழி தனி வழி" என்றவாறு சோமதாஸ் வேட்டியை தூக்கி கட்டி கிளம்புகிறார்.

"வேட்டியேஏஏ கிழிந்தாலும்
தாங்கி கொள்ளும் இதயம்..
சிறு பழி தாங்க கூடலியேஏஏ "
என்ற சோகப் பாடல் முடிகிறது..
***
காட்சி மாறுகிறது..அப்போது.. மாங்காமணி தம் பிடிக்கிறார். சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, தீக்குச்சியை அங்கே வேலை செய்யும் பெண்ணின் கொண்டையில் உரசி நெருப்பு வரவழைத்து பற்ற வைக்கிறார்.
"மாங்காமணி என்ன இது.. எங்கே கற்றுகொண்டாய் இதை.. நீ ஒரு டாக்டர்.. மறந்து விட்டாயா?"

மாங்காமணி அவசரமாய்..

"அப்பா அப்பா... இது ஒண்ணும் தப்பு இல்ல, தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் இருக்கார்ல, அவரே இப்படி தான் செய்வார்.. கண்டுக்காதீங்க"
என்று சொல்லி விட்டு தன் பாட்டுக்கும் தம் அடிக்க ஆரம்பித்தார்.
சோமதாஸ் முகம் சிவக்கிறது
...........................................................
துண்டுகள் வரும்....

Friday, August 13, 2004

மரணதண்டனை

தனஞ்செய்க்கு மரணதண்டனை அவசியமாக தேவை. மனித உரிமை காக்கிறேன் பேர்வழி என்று, தீவிரவாதிகளுக்கும், கொலை பாதகர்களுக்கும், காம வெறி பிடித்த மிருகங்களுக்கும் காவடி தூக்கி பிரபலம் ஆவதென்பது வெட்ககேடு.

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் வரும் கடைசிக் காட்சியை நினைவுப் படுத்திப் பாருங்கள். தன் மகளுக்கு ஆபத்து என்னும் போது, நீதிபதியே துப்பாக்கி எடுப்பார். அது ஒன்றும் சினிமாவுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்பது என் கருத்து. எதுவும் தனக்கென்று நடக்கும் போது தான் வலி தெரியும். காம வெறி பிடித்த அரக்கனால் கொடூரமாக சிதைக்கப்பட்டு தன் உயிரை இழந்த அந்த சிறுமி, இன்று மனித உரிமை பேசும் மடமக்கள் ஒருவரின் மகளாக இருந்தாலும் இப்படி தான் பேசுவாரா? தான் செய்வது என்னவென்றே தெரியாத ஒருவனை தண்டிப்பது தவறு என்றால் அந்த ஒன்றும் தெரியாத பச்சை மண்ணை கொண்டு போய் மனித உரிமை பேசும் யாராவது ஒருவர் வீட்டில் வைத்து வளர்க்க சொல்ல வேண்டும். அப்போது தெரியும் மிருகம் தன்னை அறியாமல் என்ன செய்யும் என்று.

என்னை கேட்டால் அவர்களுக்கு தரப்படும் வலியில்லாத மரண தண்டனையும் குறைவு தான். தான் செய்த கொடூரத்தின் வலி என்னவென்றே அறியாமல் சாவது அவர்களுக்கு தரப்படும் தண்டனை அல்ல விடுதலை.

வலை பதிப்பதற்க்கு காரணங்கள்

எதுக்கு வலை பதிக்கிறீர்கள் என்று நாமக்கல் பாலா - ராஜாவிடம் கேட்டு இருக்கிறார். யாரும் என்னை கேட்கும் முன் நானே சொல்லி விடுகிறேன் :-)

இதோ நான் வலை பதிப்பதற்க்கு காரணங்கள்
- என் எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள
- என் எழுத்தில் உள்ள குறைகளை தெரிந்து கொள்ள
- என்னால் எழுத முடியுமா என்று தெரிந்து கொள்ள
- என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள
- என் அனுபவங்களை சொல்லி புலம்ப
- நான் ரசித்ததை சொல்லி கொள்ள (கொல்ல)

எல்லாவற்றிக்கும் மேல் இதை எல்லாம் செய்து பார்க்க/பரிசோதிக்க "வலைப்பூவானது இலவசம்" என்பது தான் நான் விடாமல் பதிப்பதற்க்கு காரணம்.

ஒருவேளை இது கட்டணம் ஆக்கப்பட்டால் அதுவும் என் வரவுக்கு தக்கவாறு இருந்தால் நான் தொடருவேன். இல்லையென்றால் ஞானதேவன் அவன் பாட்டுக்கு இதை நிறுத்தி விட்டு, தனக்கு எழுதும் வேலை சரி படாது என்று நினைத்துக் கொண்டு சும்மா இருப்பான்.

வலைபதிப்பது ஒரு முயற்சி அல்லது பயிற்சி, இந்த முயற்சி/பயிற்சி இலவசம் என்பது தான் துணிந்து நிறைய பேரை(என்னை போல் உள்ளவர்களை) எழுத வைத்திருக்கிறது. மற்றப்படி வலைபதிவு என்பது புகழை அள்ளிதரும், பிரபலம் ஆக்கும் என்பதெல்லாம் எளிதில் சாத்தியப்படக் கூடியதன்று. எனக்கு தெரிந்து, வலை பதிப்பதால் 10-20 பேர்கள் நண்பர்களாக கிடைக்கலாம். அது போதும் எனக்கு.

Thursday, August 12, 2004

சில காதல்கள்

கி.பி.1980

முத்து அவன் காதலிக்கு காதல் கடிதம் எழுதுகிறான். அன்பே, உன் நினைவு என்னை கொல்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறாய். நன்றாக சாப்பிடு. அப்போது தான் நல்ல தூக்கம் வரும். கனவு வரும். கனவில் நாம் காதலிக்கலாம். சொல்ல மறந்து விட்டேன். நீ அன்று போட்டு வந்திருந்த நீல நிற சேலை அற்புதம். அதையே நாளையும் கட்டிக்கொண்டு வா.. அன்பு முத்தங்களுடன்...முத்து..

(இதை எழுதிவிட்டு, அவன் தம்பி/தங்கை அல்லது அவளின் தம்பி/தங்கை அல்லது யாரோ ஒரு சின்ன பையன்/பையி?(பொண்ணு) மூலமாக அவன் தன் காதலியிடம் சேர்ப்பிக்கிறான்)

கி.பி.1990
முத்து அவன் காதலிக்கு தொலைபேசுகிறான்.

ஹாய் டார்லிங். என்ன பண்றே. சாப்பிடுறியா?? ஒழுங்கா சாப்பிடு. அப்போ தான் நல்லா தூங்க முடியும், நாமளும் கனவு பாட்டு பாடலாம். ... சீ சீ சொல்லாதேடி செல்ல குட்டி.. பேசு... என்ன வெட்கமா?... கனவு பாட்டுக்கேவா... ஆங் சொல்ல வந்ததை மறந்துட்டேன் பாரு... நாளைக்கு காலேஜ் வரும் போது ப்ளு சாரி கட்டிகிட்டு வா. அதுலே உன்னைப் பார்த்தா .... சொல்ல மாட்டேன்... இப்போவே சொல்லனுமா... ம்ஹூம்.. இப்போ இல்லே.. நீ கட்டிகிட்டு வா அப்போ சொல்லுறேன்.. சரியா.. ம்ம்ம்ம்ச்ச்ச்ச் ம்ம்ச்ச் ம்ம்ம்ச்ச்ச்... (முத்தச் சத்தம்).. சரி சரி வைக்கிறேன்... நாளைக்கு பார்ப்போம்... ம்ம்ச்ச்.(ரிஸீவர் வைக்கப்படுகிறது)

கி.பி.2003
முத்து அவன் காதலிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான்.

ஆய்.என பண்ற.ஒழுங் சாப்டு.தூங்.நாளை காலேஜ்கு ப்ளு சாரிலே வா.சூடான அன்பு :-* முத்து


பின்னூட்டம்

இது சாகரனின் பின்னூட்டத்திற்க்கு பின்னூட்டம். பெரிதாக இருக்கிறது என்று நான் இதை ஒரு பதிவாக போட்டு விட்டேன்.

பாதிக்கப்பட்ட நண்பன் இப்போது இதையெல்லாம் படிக்கும் நிலையில் இல்லை. அவனுக்கும் இணையத்துக்கும் தொலைவு அதிகம். அப்படியே படித்தாலும் ஒன்றும் பெரிதாய் எடுத்துக்கொள்ள மாட்டான் என்றே நினைக்கிறேன்.. காலம் அவன் காயத்தை மறைத்து இருக்கும்...

இந்த ஓரினசேர்க்கையாளர்களின் தொல்லை, பேருந்து, சினிமா கொட்டகைகளில் அதிகம். ஒருமுறை நான் இரவு நேர பேருந்தில் செல்லும் போது (சென்னையிலிருந்து சேலம்) என் அருகில் ஒரு ஓரின சேர்க்கையாளன், நான் கண் அசந்தால் மெதுவாக தொடையில் கை வைப்பதும், முறைத்தால் எடுப்பதுமாக இருந்தான். நடத்துனரிடம் சொல்லி அவனை கடைசி சீட்டுக்கு துரத்தினேன். மற்றொரு முறை (இதுவும் சென்னையிலிருந்து சேலம்) கடைசி சீட்டில் அவனும், அதற்கு முந்தின சீட்டில் நானும் இருந்தேன். 1 முறை என் இடுப்பில் கை வைத்தான், திரும்பி முறைத்ததற்கு, தெரியாமல் பட்டுவிட்டது சார் என்று இளித்தான். இரண்டாம் முறை கை வைத்த போது எழுந்து கத்தி விட்டேன். அவன் கொஞ்சம் மிரண்டு கடைசி சீட்டின் அடுத்த முனைக்குப் போனான். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். எனக்கு தூக்கம் வர ஆரம்பித்த நேரம். பட் பட் மடார் என்று ஒரு சத்தம்"தே... மகனே, கை வைக்கிறியாடா கேன... " என்று ஒரு கூச்சல். கடைசி சீட்டின் அந்த முனைக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த இருவர் அவனை சுற்றி வளைத்து அடிப் பின்னிக் கொண்டிருந்தனர். வலி தாங்காமல் அவன் அழுது கொண்டிருந்தான். அவன் சட்டையை பிடித்து தர தரவென இழுத்துக்கொண்டு போய், நடத்துனரிடம் சொல்லி, பேருந்தை நிறுத்தி திண்டிவனம் அருகே எங்கேயோ இறக்கி விட்டார்கள். பின்னர் தான் நிம்மதியாக தூங்க முடிந்தது...

இதை எல்லாவற்றையும் விட மிக கொடுமையான ஒன்று என் தோழிக்கு நிகழ்ந்தது. அதை இன்னொரு சமயம் பதிக்கிறேன். இப்போவே தொடர்ச்சியா அதை பதித்தால் ஏதோ பாலியல் சம்மந்தப்பட்ட வலைப்பதிவுன்னு எல்லாரும் நினைச்சிட போறாங்க. :-)

Wednesday, August 11, 2004

"வலி" - PART - 3

****
இந்த குறிப்பிட்ட பதிவு சில அருவெருப்பான நிகழ்வுகளை சொல்லப்போகிறது. தயவு செய்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்த்து விடவும்
****


இவ்வளவு தூரம் சொன்ன வசந்த் அந்த இடத்தில் தடுமாறினான். கண்கள் வேகமாக கலங்கின.

"சொல்லு அதுக்கு மேல" என்றேன் இறுக்கத்துடன்.

வசந்த் தொடர்ந்தான்

"சொல்லவே அசிங்கமா இருக்குடா. அந்த ஆள் மடியிலே உட்கார்ந்ததும் தான் ஒரு வித்தியாசம் கவனிச்சேன். பைஜாமாக்குள்ளே ஜட்டி, அண்டர்வேர் எதுவும் இல்லை. அந்த ஆளோட ----- என் பின் பக்கம் உறுத்திச்சி.... உடனே எந்திரிக்க பார்த்தேன்... அப்போ சேட் சொல்றான்"

சேட் " என்ன வசந், பயம்மா இருக்கா? இது தப்பில்லே, அது உன்கிட்ட இருக்குற மாதிரி தான். பயப்படாதே. வேணா தொட்டு பாரு"ன்னு சொல்லிகிட்டே என் கை எடுத்து அந்த கண்றாவி மேல வச்சிட்டான். விலுக்குன்னு என் கையை உருவி அவன் மடி விட்டு எந்திரிச்சி ..

"சேட்ஜி எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. விட்டுடுங்க.. எனக்கு வேலை வேண்டாம், மெட்ராஸ், நடிகை யாரும் வேண்டாம், வீட்டுக்கு போறேன் விட்டுடுங்க"ன்னு கெஞ்சினேன்.
ஆனா அவன் கேட்கலேடா. கதவு நல்லா பூட்டி இருந்திச்சி. சாவி அவன் பைஜாமாவுல இருந்திச்சி. எனக்கு அழுகை வந்து அழுதேன். பொறுமையா பார்த்துகிட்டு இருந்தான். அப்புறம்

"வசந், நீ அழுறதுல எந்த உபயோகமும் இல்லே.. நீ இப்படியே வெளியே போக முடியாது.. நான் சொல்லுற படி செய்.. போலாம்" என்றான் சேட்.

அதுக்கு அப்புறம், நான் கையால தொடவே அருவெருப்பா நினைச்சுது என் உடம்பு பூரா ஊர்ந்து போச்சு.. என் வாயிலே அசிங்கம் பண்ணிட்டான்.. 2 நாள் வாந்தியா வந்துச்சி. பின் பக்கம் வலி தாங்க முடியாம 2 நாள் கக்கூஸ் கூட போகலடா.." என்று அவன் குலுங்கி குலுங்கி அழுததை பார்த்து எனக்கும் அழுகை வந்து விட்டது.

இரவு, நேரம் ஆகி விட்டதால் இருவரும் திரும்பி வந்தோம். வரும் போது அவன் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருந்தான். பாரத்தை இறக்கி வைத்த திருப்தி இருந்தது அவனிடம். நான் மௌனமாக வந்து கொண்டிருந்தேன். இப்போது எனக்கு பாரமாக இருந்தது. அவன் இப்போது பேசினான்

"என்ன உம்முன்னு வர்றே? நானும் இதை நினைச்சி 3 நாள் அழுதேன். அப்புறம், சீ தூன்னு துப்பிட்டு சகஜம் ஆயிட்டேன். இனி அந்த ஆள் முகத்துல முழிக்காத வரை எனக்கு அந்த ஞாபகம் வராது. நீ ஏன் இப்போ சைலென்டா வர்றே. சொல்லு" என்றான்

சைக்கிளை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தேன். அவனும் நிறுத்தினான்.

"நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கே தெரியுமா?" என்று கேட்டேன்.

"என்ன உதவி, யாருக்கு, எப்படி" என்றான்.

"எனக்கு தான்.. நீ வேலையை விட்டு போனதாலே, நான் எங்க வீட்டுல பேசி, நாளையில் இருந்து அந்த சேட்டுகிட்டே வேலைக்கு போறதுக்கு ஒப்புதல் வாங்கிட்டேன். வீட்டுல ஒத்துகிட்டாங்க. சேட்டும் ஒத்துக்கிட்டான்."

"வேண்டாம்டா போகாதே" என்றான் பதற்றத்துடன்.

"போக மாட்டேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கிளம்பினோம்.

இப்போது அவனுக்கு பெருமையாய் இருந்திருக்கும், தன் நண்பனை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி விட்ட சந்தோசம் அப்போதே அவனுக்கு தெரிந்தது.

***********

ஒரு கொடூரமான ஓரின சேர்க்கையாளனால் இத்தகைய கொடூரமான அபாயம் இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். .மனைவி, மகள், மகன் என அனைத்தும் இருந்தும், அந்த சேட்டுக்கு ஓரின கவர்ச்சி இருந்தது... அதனால் உரிமை கேட்கும் ஓரினத்திற்க்கு சலுகை அளிப்பது நல்லதா கெட்டதா என்பது யோசிக்கப் பட வேண்டிய விஷயம். எனக்கு இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இத்துடன் இதை முடிக்கிறேன்.

Tuesday, August 10, 2004

கருத்து கணிப்பு முடிவு:

"வசூல்ராஜா எம்.பி.பி.ஸ்" திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டுமா?

மொத்த ஓட்டுகள் : 7
மாற்ற வேண்டும் என்றவர்கள் : 2
மாற்ற வேண்டாம் என்றவர்கள் : 5
தெரியாது என்றவர்கள் :0

ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி

(பி-கு) முதல் தடவையா இப்போ தான் 7 பேர் ஓட்டு போட்டு இருக்காங்க :)

"வலி" - PART - 2

அடுத்த 1 வாரம் அவனை காணவில்லை. பள்ளி காலாண்டு விடுமுறையானதால் அவனை தினமும் பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. சரி வேலையில் பிசி ஆகிவிட்டான் போல இருக்கு என்று சேட் வீட்டுக்கு சென்றேன். அவரிடம் கேட்டதற்க்கு நான் விட்டு போன சிறிது நேரத்தில் வேலை பிடிக்க வில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டதாக சொன்னார். எனக்கோ கடும் கோபம். இவ்வளவு நல்ல வேலையை விட்டுவிட்டு போய்விட்டானே பாவி. கையில் கிடைக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று கறுவி கொண்டு, அவன் முன்பு வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு போனேன்.

அவனை அங்கே பார்த்தேன். என்னைப் பார்த்தும் பார்க்காதவனாய் உள்ளே போய் விட்டான். கடை முதலாளி எனக்கு தெரிந்தவர் தான், எனவே வசந்தை அழைத்தார். வேறு வழியே இல்லாமல் வெளியே வந்தான். 5 நிமிடம் அனுமதி கேட்டு பக்கத்து டீ கடைக்குப் அழைத்துப் போனேன்.

அவன் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். நான் கோபத்தில் இருந்தேன். ஆரம்பமே ஏக வசனத்தில் ஆரம்பித்தேன்.

"என்ன மயிருக்கு அந்த வேலையை விட்டு வந்தே? நல்ல சம்பளம், படிப்பு செலவுக்கு பணம் எல்லாம் குடுக்குற இடத்தை விட்டு ஏண்டா இங்கே வந்து சீரழியிறே? என்ன ஆச்சு உனக்கு. பைத்தியமா? அதான் அங்கே சைட் அடிக்க சேட் பொண்ணுங்க வேற இருக்காங்கலேடா? அப்புறம் என்னடா குறைச்சல். ஜொள்ளு விட்டுகிட்டு அங்கேயே இருக்குறதுக்கு என்ன" என்றேன்.

" டேய் அப்புறம் பேசலாம். சாயங்காலம் ஆத்துக்கு போலாம் அங்கே பேசலாம், இப்போ ஒண்ணும் வேண்டாம்" என்றான்.

" சரி, இப்போ வேண்டாம், ஆனா சாயங்காலம் உன்னை சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காதே.. சொல்லிட்டேன்" என்று மிரட்டி விட்டு வந்தேன்.

மாலை நேரம், இருவரும் காவிரி ஆற்றுக்கு சைக்கிளில் போனோம். காவிரி ஆற்றில் தண்ணீர் இருந்த காலம் அது. ஆறு மெதுவாய் சலசலத்து ஓடியது. நாங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆற்றின் மறுமுனையில் திருவரங்கம் ராஜகோபுரம் தெரிந்தது. இருவரும் ஒரு படித்துறையில் அமர்ந்தோம். அவன் சைக்கிள் ஓட்டி வரும்போதே அமைதியாகத்தான் இருந்தான். படித்துறையில் அமர்ந்த பின்னும் அமைதியாகவே இருந்தான். நான் அப்போது கொஞ்சம் சூடு தணிந்து இருந்தேன். கோபம் இல்லை. மெதுவாக அரம்பித்தேன்

"என்னடா வசந்த் சொல்லு.. என்ன ஆச்சு ஏன் அந்த வேலையை விட்டு வந்தே?" என்றேன். அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தது. எனக்கு கொஞ்சம் பயம் வந்தது. எதற்காக இவன் அழுகிறான். என்ன ஆனது இவனுக்கு.. இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று, மனதிற்க்குள் ஒரு வித பயம் பரவியது.

"எதுவா இருந்தாலும் சொல்லு வசந்த்.. " என்றேன்.
நிமிர்ந்து பார்த்தவன்

" உனக்கு தெரிஞ்சி தான் அங்கே என்னை வேலைக்கு சேர்த்தியா?" என்றான் மொட்டையாக.

" எது தெரிஞ்சி உன்னை அங்கே வேலைக்கு சேர்த்தியானு கேட்குறே, எனக்கு ஒண்ணும் புரியலே, முழுசா சொல்லு.. என்ன ஆச்சு.." என்றேன் பதற்றத்துடன்.
சில விநாடிகள் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தவன்... அப்படியே பேச ஆரம்பித்தான்.

"நீ நினைக்கிற மாதிரி அந்த ஆள் அவ்வளவு நல்லவன் இல்லே டா.. அவ்வளவு தான் சொல்ல முடியும்.. போலாமா" என்றான்.

எனக்கு அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாவிட்டால் மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. விடாமல் கேட்டேன்.

"இப்போ சொல்லு, அவன் எப்படி பட்டவனா இருந்தாலும் சரி. நீ சொல்றதை நான் நம்புறேன். நடந்ததை சொல்லு" என்றேன்.

"வேண்டாம்.. தெரிஞ்சிகிட்டா நீ ரொம்ப வருத்தப்படுவே.. அப்படியே விட்டுடு.போலாம் வா" என்றான்.

"மண்ணாங்கட்டி, இப்போ சொல்ல போறியா இல்லையா..சொல்லுடா ஒழுங்கா என்றேன்"
அமைதி காத்தான்

"என்ன அந்த ஆள் கள்ள கடத்தல் செய்யிறானா? உன்னையும் கூட வர சொன்னானா?" என்றேன்.
இளக்காரமாய் சிரித்தான்.பின்

"தெரிஞ்சிக்காம போக மாட்டே. அப்படிதானே"

"ஆமாம் சொல்லு. அப்படித்தான்" நான்.

ஒரு பெருமூச்சுக்கு பிறகு,

"சரி நான் சொல்றேன். ஆனா நீ வேற யார் கிட்டேயும் சொல்ல கூடாது சரியா" என்றான்.

"சரி.. யார் கிட்டேயும் சொல்லல நான். நீ சொல்லு" என்றேன்.

வசந்த் சொல்ல ஆரம்பித்தான்..........

"நீ போனதும், சேட் என் முழு விபரமும் கேட்டான். நானும் சொன்னேன். என் குடும்பம். என் படிப்பு. என்ன கஷ்டம், அத்தனையும் சொன்னேன். எல்லாத்துக்கு உதவி செய்யிறதா சொன்னான். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. அப்புறம் எனக்கு பால் கொண்டு வந்து குடுத்தாங்க சேட்டம்மா... குடிச்சிட்டு வேலை என்னான்னு கேட்டேன்..."

"வசந்.. நீங்க என் கூட அஸோஸியேசன் வாங்கோ.. அங்கே நிறைய பேரு இருக்காங்கோ.. அங்கே வியாபாரம் பார்த்து வந்துட்டு.. அப்புறமா உங்களுக்கு வேலை சொல்லி தர்றோம்" என்றான் சேட்.

ரெண்டு பேரும் கிளம்பி போனோம். அஸோஸியேசன் கட்டிடம் ரொம்ப பெரிசா இருந்தது. 3 மாடி ஏறி கடைசியிலே ஒரு ரூமுக்கு கூட்டிகிட்டு போனான். உள்ளே போனதும், கதவை சாத்தி பூட்டு போட்டுட்டான். அங்கே ஒண்ணும் இல்லே, ஒரே ஒரு பாய் மட்டும் இருந்தது. அதை கீழே விரிச்சான். அது மேல ரெண்டு பேரும் உட்கார்ந்தோம்

"வசந்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. நான் உன்னை மெட்ராஸ் கூட்டிகிட்டு போறோம். உனக்கு எந்த நடிகை பிடிக்கும் சொல்லுங்கோ, அவ கூட நீங்க ஜாலியா இருக்கலாம் என்ன சொல்லுறீங்க? செலவு பத்தி நீ கவலை படாதே நான் பார்த்துக்குறேன்" என்றான் சேட்.

எனக்கு திகைப்பா இருந்திச்சி, எதுக்கு இந்த சேட் இவ்வளவு பண்றேன்கிறார். எனக்கு ஒண்ணும் புரியலே. வீட்டுல இருந்தவரை வாங்கோ போங்கோன்னு சொன்னவன் இங்கே வந்து சரளமா தமிழ் பேசுறார்ன்னு ஒரே ஆச்சரியம்.

"வசந்.. பேரே எவ்வளவு ஸ்வீட்டா இருக்கு.. உனக்கு நைகி ஷூ வாங்கிகோங்க. உனக்கு எந்த நடிகை வேனும்னாலும் நான் ஏற்பாடு பண்றேன். என்ன சொல்லுறீங்க" என்றான். சேட்டுக்கு வாங்கிகோங்க, சொல்லுறீங்க மட்டும் மரியாதையா வந்தது.

நான் எல்லாத்துக்கும் தலை ஆட்டினேன்.
சேட் "வசந்... நீங்க எனக்கு புள்ளை மாதிரி.. வாங்க என் மடியிலே உட்காருங்க" என்றான்.
இந்த இடத்துல தான் எனக்கு சந்தேகம் வந்தது.

எதுக்காக மடியிலே எல்லாம் உட்கார சொல்றான்னு. இருந்தாலும் தயக்கமா உட்கார்ந்தேன் டா... அங்கே அங்கே.."

எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்:
"வலி" PART 3
இந்த குறிப்பிட்ட பதிவு சில அருவெருப்பான நிகழ்வுகளை சொல்லப்போகிறது. தயவு செய்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்த்து விடவும்

Monday, August 09, 2004

"வலி" - PART - 1

ராஜாவின் "உரிமை கேட்கும் ஓரினம்" பற்றிய பதிவை படித்தேன். இது என் சிறு வயது நினைவினை ஞாபகமூட்டியது. இந்த பதிவில் நான் சொல்லப்போகும் சம்பவம் நிஜம். நெஞ்சை சுடும். இந்த வடுவை சுமந்து கொண்டு என் கண்படா இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பனின் பெயரினை மட்டும் மாற்றி இருக்கிறேன். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற அவன் வார்த்தையை மீறி நான் இதை எழுதுகிறேன். அவன் என்னை மன்னிக்கட்டும்.

திருச்சியில் தான் நான் வளர்ந்தேன். 1995ம் வருடம். என் நண்பன் வசந்த் என்னை விட 2 வயது பெரியவன். ஆனால் என்னை விட 1 வகுப்பு தான் அதிகம் படித்தான். அதாவது நான் +1 அவன் +2. ஒன்றாக தான் பள்ளிக்கு போவோம். அந்த வயதினருக்கு தேவையான துடுக்கு தனம், அரும்பு மீசை, குறும்பு எல்லாம் இருந்தது. எனக்கும் அவனுக்கும் சில வித்தியாசங்கள் இருந்தது. நான் வளர்ந்த சூழ்நிலை வேறு. நான் ஏழை நடுத்தர குடும்ப பிண்ணனியில் வளர்ந்தேன். காலேஜ் முடித்த பின் தான் நான் வேலைக்கு போனேன். ஆனால் அவன் அப்படி இல்லை.

அவன் குடும்பம் ஏழை. அவன் அப்பா ஒரு சாதாரண கடையில் சாதாரண குமாஸ்தா.எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியாமல் அவனை கல் பட்டறைக்கு அனுப்பி வைத்தனர். எட்டாம் வகுப்பு முடிந்து அந்த கோடை விடுமுறையில் உழைத்து சம்பாதித்த பணத்தை மிச்சம் செய்து 9 ம் வகுப்புக்கு பணம் கட்டினான். அதன் பிறகு, பள்ளி முடிந்து வேலைக்கு போய் சம்பாதித்து அவனுக்கு தேவையானவற்றை வாங்கி படித்தான். இப்படித்தான் அவன் 9,10 11ம் வகுப்புகளை கடந்தான். படிப்பில் பெரிய சூரப்புலி இல்லை என்றாலும் 60% மதிப்பெண்கள் வாங்குவான். இப்படியாக போய் கொண்டிருந்த அவன் வாழ்க்கை, அவன் +2 படிக்கும் போது என்னால் (நானும் ஒரு காரணம்) ஒரு அடி விழுந்தது.

எங்களின் குடும்பத்திற்க்கு தெரிந்த ஒரு சேட் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தது. தினமும் பூஜை செய்யாமல் சாப்பிட மாட்டார். அவருக்கு வைரக்கல் வியாபாரம். சொல்ல வேண்டாம், நிறைய சேர்த்து வைத்து இருந்தார். அவருக்கு 2 பையன்கள், 2 பெண்கள். அழகான மனைவி. அவர் நெற்றியில் இருக்கும் கலர் கலர் குங்குமம், வார்த்தைக்கு வார்த்தை கடவுளை அழைக்கும் பாங்கு, அவர் மீது மிக மிக நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கி வைத்திருந்தது.

ஒருமுறை, அவர் வீட்டுக்கு என்னை அழைத்தார். நான் போன போது என்னிடம், என் கடையில் வேலை செய்ய ஒரு நல்ல பையன் வேண்டும் என்றார். நல்ல சம்பளம் கொடுப்பதாகவும், படிக்கவும் உதவி செய்வதாகவும் கூறினார். எனக்கு உடனே வசந்த் ஞாபகம் தான் வந்தது. அவனுக்குத் தான் இந்த வேலையை சிபாரிசு செய்ய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன். அன்று மாலையே அவனைப் பார்த்து விஷயத்தை சொல்லி அவனுடைய சம்மதத்தை வாங்கினேன். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை அவன் விட்டுவிடுவதாக சொன்னான்.

அடுத்த நாள் அவனை சேட்டிடம் அழைத்துச் சென்றேன். அறிமுகம் செய்து வைத்தேன். அவரும் ரொம்ப சந்தோஷமாக அவனை சேர்த்துக்கொண்டார். அன்றே வேலையை அவன் ஆரம்பிக்கட்டும் என்று என்னை அனுப்பிவிட்டார். நான் பெரிய உதவியை செய்தவனாய் என்னைப் பற்றி பெருமையாய் எண்ணிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அவனை மீண்டும் பார்க்கும் வரையில் தான் இந்த சந்தோஷம்/பெருமை எல்லாம் நிலைக்கும் என்று தெரியாமல்.


Saturday, August 07, 2004

வசூல்ராஜா - சபாஷ்ராஜா

அடிச்சாங்கய்யா ஆப்பு.. வசூல்ராஜா பேரு நல்லா தான் இருக்கு... டாக்டருங்க மானம் கப்பல் ஏறாதுன்னு கோர்ட் சொல்லிடிச்சி... இனிமேலாச்சும் டாக்டருங்க "ராமதாஸ், கிருஷ்ணசாமி" பேச்சை கேட்காம ஒழுங்கா அவங்க வேலையை பார்க்கலாம்.

(முன்)எச்சரிக்கை

என் அடுத்த பதிவு கொஞ்சம் ஸீரியஸாக இருக்க போகிறது. ராஜாவின் "உரிமை கேட்கும் ஓரினம்" பதிவு, மறந்து போய் இருந்த, மறக்கப்பட வேண்டிய ஒரு கெட்ட சொப்பனத்தை நினைவூட்டிவிட்டது. அதில் சில அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சிகளும் அடக்கம். எனவே தயவு செய்து 15 வயதுக்குட்பட்டவர்கள் யாரேனும் என் பதிவை படித்துக்கொண்டிருந்தால், வரப்போகும் "வலி" பதிவை படிக்காமல் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் திங்கட்கிழமை சந்திப்போம்.
Have a very nice weekend.

Friday, August 06, 2004

சின்ன வாழ்க்கை

நான் லண்டன் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, என்னுடைய நிறுவனத்திலேயே வேலை செய்யும் இன்னொரு நண்பனும் அங்கே இருந்தான். அவனை பார்த்ததும், புன்னகைத்து அவன் அருகில் சென்று அமர்ந்தேன். பேச்சின் போது இது தான் அவனுக்கு முதல் விமான அனுபவமாய் அமையப் போகிறது என்பதை தெரிந்து கொண்டேன். விமானம் கிளம்பும் போது எப்படி இருக்கும், இறங்கும் போது எப்படி இருக்கும், என்று ஆர்வமாய் கேட்டுக்கொண்டான். இருவருக்கும் வேறு வேறு இருக்கைகள் கிடைத்தும், விமான பணிப்பெண்ணிடம் சொல்லி அருகருகே அமர்ந்து கொண்டோம். விமானம் கிளம்பும் முன் அதன் பாதுகாப்பு முறைகள், அவசர கால நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு, படங்கள் அனைத்தும் முடிந்த போது, பெரிய சப்ததுடன், விண்ணை கிழித்து விடும் ஆவேசத்தில் விமானம் புறப்பட்டது. என் நண்பன், என் கையை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தான். 300 மைல் வேகம் பிடித்து விசுக்கென்று மேலே ஏறிய போது, கண்ணை மூடிக்கொண்டு உடம்பை உதறினான்.

"என்ன ஆச்சுடா, வாந்தி வருதா ?" என்று கேட்டவாறு அவனுக்கு தலை பிடித்தேன். இல்லை என்பது போல் தலை ஆட்டியவன், விமானத்தின் மேல் நோக்கிய நிலையை பார்த்துவிட்டு,

"இப்படி தான் போகுமா" என்றான் பயத்துடன்.
நானும் அவனை கிண்டல் செய்யாமல்,

"இல்லைடா விமானம் பறப்பதற்க்கு குறிப்பிட்ட உயரம் வேண்டும், அதை தொடும் வரை இப்படி தான் போகும்" என்றேன்.
மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.விமானம் நேர் நிலைக்கு வந்ததும், விளக்குகள் போட்டார்கள்.

"என்னா பயம்மா இருந்திச்சா?" என்று கேட்டேன்.

"ம்ம்ம் கொஞ்சம் " என்றான்.

" முதல் தடவை தானே, இப்படி தான் இருக்கும், அடுத்த தடவையில் இருந்து ஒண்ணும் தெரியாது" என்றேன்.

"அதுக்கில்லைடா, ப்ளைட்டுங்கிறது என்னா?" என கேட்டான்.

"எனக்கு கேள்வியே புரியலே, நீயே சொல்லிடு" என்றேன்.

" சரி.. ப்ளைட்டுங்கிறது, நட்டும், பொல்ட்டும், சக்கரமும், கலர் கலர் ஒயரும் சேர்ந்த ஒரு உலோக பறவை.. சரியா" என்றான்.

" ம்ம் " ஆமோதித்தேன்.

" அப்படின்னா, வெறும் நட்டையும், பொல்ட்டையும் நம்பி, முப்பதாயிரம் அடி உயரத்துல பறந்து கிட்டு இருக்கோமே.. இது சரியா??" என்றான்.
அவன் சொல்வது புரிந்தும், புரியாமலும் போனது..

"என்னதான்டா சொல்ல வர்ற நீ" என்றேன்.

"ஒண்ணும் இல்லை, ப்ளைட்ல பாராசூட் எங்கே இருக்கும் " என்று அடுத்த கேள்வியை வீசினான்.

"அப்படி எல்லாம் இருக்குமான்னு தெரியலே" என்றேன்.

"சரி அப்படியே இருந்தாலும், இத்தனை பேஸஞ்சருக்கு எப்போ எப்படி மாட்டி விடுவாங்க"ன்னு கேட்டான்.

"தெரியலே" என்றேன் ஒரே வார்தையில்.
சில விநாடிகள் யோசித்தவன்..

"அப்போ நாம எவ்வளவு அபாயத்துல இருக்கோம்ன்னு யோசிச்சு பாரு" என்றான்.
ஒன்றும் புரியாமல் அவன் முகத்தை வினோதமாய் பார்த்தேன்.

" ஒரு போல்ட், ஒரு நட்டு, லூசா இருந்து, நடு வானத்துல கழண்டு விழுந்தா என்னடா பண்ணுவாங்க? " என்றான் சீரியஸாக.

"அடுத்த ஏர்போர்ட்டுல இறக்கி மாட்டுவாங்க " என்றேன்.

" அடுத்த ஏர்போர்ட்டு வர இப்போதைக்கு வாய்ப்பே இல்லேன்னா?"

"கடல்ல இறக்குவாங்க"

" சரியா இறங்காட்டி???"என்றான் .

எனக்கு கோபம் தான் வந்தது, இவன் நிஜமாகவே கேட்கிறானா இல்லை, வேண்டும் என்றே பயமுறுத்துகிறானா என்று தெரியாததால்.

யாராவது தேவர்கள் இவன் இப்படி எல்லாம் பேசும் போது "ததாஸ்து" சொல்லி விடுவார்களோ என்று பயம் வேறு.
அதனால் ,

"சரிடா, இது போதும், எனக்கு தூக்கம் வருது" என்று முடித்தேன்.
அவனும் விடாமல்

"கடைசியா ஒரு கேள்வி.. அப்புறம் நீ தூங்கு" என்றான்.

என்ன குண்டு போட போகிறானோ என்ற பயத்தில்

"ம்ம் கேளு " என்றேன் குருட்டு தைரியத்தில்,

"ஒரு வேளை ஏதாச்சும் நட்டு கழண்டு விழுந்து, ப்ளைட் கீழே போச்சுன்னா, அது தரை அல்லது கடல் மட்டத்தை தொட எவ்வளவு நேரம் ஆகும்" என்றான்.

இவனை அடக்க வழி தெரியவில்லை எனக்கு..

"நல்ல கேள்வி கேட்டே.. இரு கணக்கு பண்ணி சொல்கிறேன்"
என்று இரு வினாடி தாமதித்து..

"உன் வாழ்க்கையின் மிச்ச நேரம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நேரம் ஆகும். " என்றேன்.

அவன் திகிலாய் பார்த்தான்.. எனவே சமாதானப்படுத்த..

"அதுனாலே இருக்குற வாழ்க்கையை இனிமையா தூங்கி, இல்லை சாப்பிட்டு, இல்லை இந்த சின்ன TV'ல் படம் பார்த்து சந்தோசப்படு"
என்று சொல்லிவிட்டு,

"ததாஸ்து" சொல்லிடாதீங்க தேவர்களே என்று பிரார்தித்துக்கொண்டே தூங்கினேன்.

Thursday, August 05, 2004

இன்னும் சில நிமிடங்களில்.... - PART 3

முற்றியது தொடர்கிறது....

நெகடிவ் முடிவை விரும்பாதவர்களுக்காக, பின் இணைப்பு..

ஓ ஓ ஓ ஓ என்று ஓலமிட்டு கதறி அழுத என்னைப் பார்த்து சித்திர குப்தன்
"சே நிறுத்து.. அழாதே.. என்னை முழுசா பேச விடு... " என்றார்.

அழுகையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன்..அவர் என் முகத்தையும், கலங்கி போய் இருந்த என் கண்மணி மீராவின் முகத்தையும் பார்த்து விட்டு, மெதுவாய்..

"கண்ணா கலங்காதே.. எப்போது நீயும் அவளும் ஒருவருக்கொருவர் மனமுவந்து காதலிக்க ஆரம்பித்தீர்களோ, அன்றே இருவரின் எண்ணங்களும் ஒன்றாகி விட்டது. எண்ணங்கள் ஒன்றானதால் ஆசைகளும் ஒன்றாகி விட்டது. எனவே அவளது ஆசை நிறைவேறியது என்றால், உன் ஆசையும் நிறைவேறியதாகவே அர்த்தம். போ கண்ணா, உன் இனிய காதல் வாழ்க்கையை சொர்க்கத்தில் தொடங்கு" என்று புன்முறுவலுடன் ஆசிர்வதித்தார்.....

அப்புறம் நிஜமாகவே எங்கள் கல்யாணம், முப்பது முக்கோடி தேவர்கள் பூச்சொரிய இனிதே நடந்தது. :-)

நிஜமாகவே முற்றும்..

Wednesday, August 04, 2004

இன்னும் சில நிமிடங்களில்.... - PART 2

தொடர்கிறது....

திடீரென என் தலையை இரு கைகள் பிடித்து திருப்பின, அதன் மென்மையில் என் கண்கள் சொக்கியது, தேனில் மட்டுமே 18 வருடங்களாக ஊறிக்கிடந்த, கெட்டி சர்க்கரைப்பாகில் இருந்து எடுத்த செர்ரி பழம் போன்ற இரு உதடுகள், என் உதடுடன் இணைந்தது, அதன் ஈரம், என்னுள் இதமாய் இறங்கியது. பைக் என் பிடியில் இருந்து தானே நழுவி தரையில் விழுந்து மீண்டும் அதன் உறக்கத்தை துவங்கியது.

கண்ணை திறக்காமலே அந்த உதடுகளின் சொந்தக்காரியின் இடையை கட்டிப் பிடித்தேன். சத்தியமாய் இது என் மீராவே தான். அவள் இடை, என் பைக் ஹேண்டில்பாரை விட சின்னதாயிற்றே, இன்னும் இறுக்கிப்பிடித்து அவள் உதடுகளில் ஒட்டிக் கொண்டேன். நிமிடங்கள் ஓடின.. இல்லை பறந்தது.. இல்லை மின்னலாய் மறைந்தது.. கண் விழித்து பார்த்தேன்.. நெருப்பு துண்டு வெகு பக்கமாய் தெரிந்தது.

விலகிப் போ டெர்மினேட்டரே.. சில விநாடிகள் கழித்தாவது வா என்று சபித்தேன்.. என் முனகலில் அவள் விழித்து தன் உதடுகளை என்னிடம் இருந்து பிரித்து எடுத்து..
"கண்ணா.. ஐ லவ் யூ" என்று சொல்லிவிட்டு, அடுத்த மைக்ரோ விநாடியில் மீண்டும் என் உதட்டில் ஒட்டிக் கொண்டாள்.

கண் சிமிட்ட நேரம் இல்லை, டெர்மினேட்டர் தன் மொத்த எடையையும், பூமியின் மீது இறக்கியது. பூமியே பெரிய அடுப்பாய் மாறி தகிக்க ஆரம்பித்தது. நானும் என் மீராவும் கட்டி அணைத்தப்படி சாம்பலாகி விட்டோம்.

மேலுலகம்.
சித்திர குப்தன் அலுவலக வாசல்:
நம்ம ஊர் அரசு அலுவலகம் போய், கச கசவென்று இருந்தது.. பின்னே எல்லாரும் ஒட்டு மொத்தமா வந்தா இப்படி தான் இருக்கும். நானும் மீராவும் கை கோர்த்துக் கொண்டு தான் நின்றிருந்தோம். முன்னே Q போய்க் கொண்டிருந்தது. எங்கள் முறை வந்தது. வயசான சித்திர குப்தன் இருந்தார். 2004ம் வருச மாடல் கம்ப்யூட்டர் ஒன்றை வைத்து இருந்தார். ஸ்கிரீனை பார்த்தேன். அது ஆரக்கிள் 10ஜி டேட்டா பேஸ்.

"உன் பேரு மீராவா" என்றார்.

"ம் " என்றேன் நான்.

என்னை பார்த்து விட்டு,

"உன்னிடம் கேட்கவில்லை.. நீ பேசாதே" என்று சொல்லிவிட்டு அவள் பக்கம் திரும்பினார்.

"உன் கடைசி ஆசை நிறைவேறிச்சா" என்றார்.

அவள் சிறிது வெட்கத்துடன்"ம்" என்றாள்

"நல்லது, நீ அந்தப்பக்கம் போ" என்றார்.

அவளும் சிறிது தள்ளிப் போய் நின்றாள்.

"உன் பேரு கண்ணன் சரியா" என்றார்.

"ம்" என்றேன்.

" உன் கடைசி ஆசை நிறைவேறிச்சா" என்றார்.

"ம் " என்றேன்.
நிமிர்ந்து பார்த்தார்

"பொய்" என்றார் அழுத்தமாய்

"இல்லை, உண்மை தான். நிறைவேறிச்சி" என்றேன்.

"மீண்டும் பொய்.. நீ அந்தப் பெண்ணிடம் உன் காதலை சொல்லப் புறப்பட்டாய், ஆனால் நீ சொல்வதற்க்கு முன் அவள் முந்திக் கொண்டாள். நீ அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் முன் அவள் சொல்லி உன் உதட்டை கவ்வி பிடித்துக் கொண்டாள், எனவே நீ உன் கடைசி ஆசையான உன் காதலை அவளிடம் சொல்லும் முன், பிரளயத்தில் சிக்குண்டு, சிதறி இறந்து போய் இங்கே வந்திருக்கிறாய்..."

நான் பிரமை பிடித்து நின்றிருந்தேன்

"...நிறைவேறாத ஆசையுடன்" என்று அழுத்தமாய் முடித்தார்.

"எனவே... " தொடர்ந்தார்.

"நீ உன் காதலியுடன் போக முடியாது.. நிறைவேறாத ஆசையுடன் நீ ஆவியாக அலைவாயாக" என்று என்னை.... என்னை... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.....

முற்றும்..

கதை இத்துடன் முடிகிறது... இருந்தாலும் PART 3 தொடரும் :-)

Tuesday, August 03, 2004

இன்னும் சில நிமிடங்களில்.... - PART 1

கி.பி. 2025.
தமிழ் உலக தொலைகாட்சியில் செய்திகள். மேக்கப் இல்லாமலே ஒரு அழகான 3D பெண் உருவம் பேசத் தொடங்கியது

"நேயர்களுக்கு வணக்கம். இது தான் மனித இனத்தின் கடைசி நாள் என்று கூறப்படுகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் வந்துள்ள "டெர்மினேட்டர் 1" என்று அழைக்கப்படும் எரி கல்லானது இன்னும் 10 நிமிடங்களில் பூமியின் மீது மோதி, மனித இனம் வாழக்கூடிய இந்த பூமியை பல கோடி துகள்களாக சிதறடித்து, நம் அனைவரையும், முடிவற்ற பால்வெளி மண்டலத்தில் ஒன்றாய் கலக்க வைக்கப்போகிறது. எந்த விஞ்ஞானமும் இந்த அழிவில் இருந்து யாரையும் காப்பாற்ற முடியாமல் கை கட்டி நிற்கிறது. கடைசியாக செய்யப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. மக்கள் அனைவரும், தங்களின், கடைசி ஆசை, பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். கடவுளின் அருள் இருந்தால் மீண்டும் உங்கள் முன் தோன்றுவேன். வணக்கம்"
என்று சொல்லிவிட்டு அந்த பெண் மறைந்தாள்.

செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சில மாதங்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் இது. ஆனால் விஞ்ஞானம் தோற்று விடும் என்று எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு தான். எல்லாம் முடிந்து விட்டது. இதோ இன்னும் 10 நிமிடம் தான். பிறகு .... வெறும் புகை அல்லது நெருப்பு தான் இருக்கும், நான் இருக்க மாட்டேன். அப்படியே அமைதியாய் உட்கார்ந்தேன். என்ன செய்வது என்று யோசித்தேன்? என் கடைசி ஆசை என்ன என்று யோசித்தேன். ஒன்றும் தோணவில்லை.

எனக்கிருக்கும் ஒரே ஆசை என் கூட காலேஜ் படிக்கும் மீராவை கல்யாணம் செய்து கொள்வது மட்டும் தான். அதற்கும் இப்போது வழி இல்லை. நான் அவளை காதலிப்பது கூட அவளுக்கு இன்னும் தெரியாது. நல்ல நண்பனாய் நினைத்து பழகுகிறாள், காதலை சொன்னால் ஏற்பாளோ மாட்டாளோ என்று தான் மௌனம் சாதித்து வருகிறேன். இப்போது போய் சொல்லிப் பார்க்கலாமா? "ம்" என்றால் சொர்க்கத்திலாவது கல்யாணம் செய்து கொள்ளலாம்,"இல்லை" என்றால், சும்மா செத்து போய்விடலாம். முடிவு செய்து விட்டேன். மீராவை போய் பார்க்க வேண்டியது தான்.

சுறுசுறுப்பாய் எழுந்தேன், இன்னும் முழுதாய் 6 நிமிடங்கள் இருந்தது. பைக் எடுத்தால் 2 நிமிடத்தில் அவள் வீடு. 1 நிமிடம் போதும் காதலை சொல்ல.மீதி 3 நிமிடம் ரொமான்ஸ் செய்யலாம். இல்லை கடைசி பிரார்த்தனை செய்யலாம். சே இந்த வண்டி சாவி எங்கே வைத்தேன்? கட்டில்.. மேஜை.. டிவி.. டைனிங் டேபிள், சோபா.. ஐய்யோ எங்கேயும் இல்லை.. இனியும் தாமதிக்க கூடாது.. விறுவிறுவென்று வாசலுக்கு வந்தேன்.

வானம் சிவப்பாய் தெரிந்தது, பக்கத்தில் ஒரு பெரிய நெருப்பு பந்து சிறிது சிறிதாய் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போய்விடும், காரியம் தான் முக்கியம். பைக்கின் ரிமோட்கண்ட்ரோல் லாக்கின் வயர்களை பிடுங்கினேன். அபாய மணி ஒலிக்கத் துவங்கியது. அதையும் பிடுங்கி வீசிவிட்டு, காலால் உதைத்து கிளப்பினேன். எஞ்சின் உறுமிவிட்டு தூங்கியது. சனியனே, இப்போது காலை வாரி விடாதே.. தயவு செய்து கிளம்பு... மீண்டும் உதைத்தேன்.. உறுமல் பின் தூக்கம்... எனக்கு இயலாமையில் கோபம் மட்டும் தான் வந்தது.

என் காதலையும் சொல்ல விடாமல் செய்யும் கெட்ட மனம் கொண்ட என் வாகனமே எழுந்திரு... என்று திட்டிக் கொண்டே மீண்டும் உதைத்தேன்... ரோஷம் கொண்டு சீறியது அது.. வேகம் பொங்க அதை திருப்பினேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி.....

தொடரும்...

Monday, August 02, 2004

தைரியம் வேண்டும்

தமிழ்நாட்டுல அற்புதமா ஓடின படம், ஆஹான்னு ஓடின படம், அது இதுன்னு சொன்னாங்கன்னு சொல்லி "ஜெயம்" படம் பார்த்தேங்க..... :( VCDல தான்.மனுஷனை எப்படி எல்லாம் படுத்தலாம்ன்னு யோசிச்சி யோசிச்சி படுத்தி எடுத்து இருக்காங்க..படமாங்க அது... அறுவை படம், பிளேடு படம், ரம்பம், போர் அப்படி இப்படி சொல்லுவாங்க... இது... அறுவை மில் படம். கதை ஒரு குப்பை, ஹீரோ....எனக்கு பிடிக்கல... ஹீரோயின்... போய்யா போ போ.. இந்த படத்தை எப்படி எல்லாரும் தலையில் தூக்கி வச்சி ஆடினாங்கன்னு தான் புரியல. தமிழ்நாட்டு மக்கள் ரசனை அவ்வளவு மோசம் ஆயிடிச்சா...??

அடுத்து "எங்கள் அண்ணா" கேப்டனின் லேட்டஸ்ட் ஹிட் படம்ன்னு சொல்லி அதை பார்த்தேன். வீட்டுல சொன்னாங்க, படம் பயங்கர காமெடிடா, படம் பார்த்து வயித்து வலியே வந்துடுச்சின்னு. நானும் ரொம்ப ஆர்வமா பார்க்க உட்காந்தேன்.... கடைசியிலே அது ஒரு புதிர் படம்.. காமெடி எங்க இருக்குன்னு தேடி தேடி பார்த்து, எதுவும் கிடைக்காம ரொம்ப நேரம் அழுதேன் :( பிரவுதேவா ஒரு கொடுமைன்னா, விஜயகாந்த் இன்னும் கொடுமை... ஏதோ ஹீரோயின் கொஞ்சம் அழகா இருந்ததாலே அதை பார்த்து ஆறுதல் பட்டுகிட்டேன்.

கடைசியா... சூப்பர் ஹிட் மூவின்னு சொன்ன "ஆட்டோகிராப்" பார்த்தேன். எனக்கு படத்துல மனசு எங்கேயும் ஒட்டலை. ரொம்ப கம்மியான ஸீன் மட்டும் தான் ரசிக்கிற மாதிரி இருந்துச்சி.. அதுவும் அந்த ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாப்பிடுற காட்சி.. ரியலி சூப்பர். அந்த ஒரு ஸீன் மட்டும் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது..

மறந்தவங்களுக்காக அந்த வசனம்
ஹீரோவும் ஹீரோயினும் ஆதாம் ஏவாளா இருக்காங்க.ஆதாம் ஆப்பிள் எடுத்து சாப்பிடுறான். ஏவாளை பார்த்து சொல்கிறான்

"ஏவாள் ஆப்பிள் சாப்பிடு ஏவாள்.. என்ன நான் தமிழ் பேசுறேன்னு பார்க்குறியா.. நீயும் பேசலாம் ஏவாள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தத் தமிழ் இது, ம்ம் ஆப்பிள் சாப்பிடு"
என்று வசனம் பேசுவான்..

நக்கலும், நகைச்சுவையும் கலந்து கட்டிய காட்சி இது.. இதைதவிர மற்றபடி அந்த படத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.
இன்னும் நான் ஆய்த எழுத்து, குத்து, கில்லி எதுவும் பார்த்ததில்லை.. பார்க்க பயம்மா இருக்கு..

புஷ் புஷ் புஷ்...

http://homepage.mac.com/krousen/Bush%20site/index.html

இங்கே போய், இஷ்டத்துக்கு புஷ்ஷை மாத்துங்க.