தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, August 18, 2004

ஒரு ரயில் பயணமும், பிஸ்கட் பாக்கெட்டும்.. PART-2

ரயில் "தடக் தடக்" என்று ஒரே சீராய் போய்க் கொண்டிருதது.. பெட்டி லேசாய்இழுபடுவது போல் ஒரு உணர்ச்சி.. மெல்ல கண் இமை திறந்து பார்த்தேன்... முடிவு செய்து விட்டேன்.. அவன் தான்.. திருடன் தான் அவன்.. நிச்சயம்.... பெட்டியை லேசாய் இழுக்க பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒரு விநாடி தாமதிது வெடுக்கென்று எழுந்தேன். பதறிப்போய் பின் வாங்கி அமர்ந்தான் அவன்.

"என்ன சார், ஏதாச்சும் கெட்ட கனவா?? இப்படி திடீர்ன்னு எந்திரிச்சிட்டீங்க" என்றான் ஒன்றும் தெரியாதவனாய்..

இந்த முறை நான் சிரிக்கவில்லை, லேசான முறைப்புடன்..
"என் பெட்டி மேல உஙகளுக்கு என்ன கை?? என்ன பார்த்துகிட்டு இருந்தீங்க?" என்றேன்.

" ஓ அதுவா சார்.. பெட்டி மேல உங்க பேரு இருந்திச்சி.. சார் சார்ன்னு கூப்பிடுறதை விட பேரு சொல்லி கூப்பிடலாம்ன்னு தான் பார்த்தேன்.. தப்பா நினைச்சிட்டீங்களா?" என்று சொல்லிவிட்டு அரை விநாடி தாமதித்து "...பயந்துட்டீங்களா.. " என்று சொல்லி திரும்பியும் அதே சிரிப்பை ஆரம்பித்தார். . பற்றிக்கொண்டு வந்தது எனக்கு.. இருந்தும் அதை மறைத்துக்கொண்டு சன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தேன்.

"பிஸ்கட் சாப்பிடுறீங்களா சார்" என்றார் இந்த முறை..

உங்களுடன் பேச்சு குடுத்தவாறு அவர்கள் பையிலிருந்து மயக்க மருந்து தடவப்பட்ட பிஸ்கட் அல்லது வேறு ஏதேனும் உணவு பொருட்களை நீட்டுவார்கள்.

அவசரமாய் தினத்தந்திஐ உதறி விட்டு..

"வேண்டாம் என்கிட்ட பிஸ்கட் இருக்கு" என்று சொன்னேன்.

அவரும் விடவில்லை.
"அட பயப்படாதீங்க சார். நான் ஒண்ணும் இதுலே மயக்க மருந்து எல்லாம் தடவலே. பாருங்க நான் தைரியமா சாப்பிடுறேன்." என்று சொன்னவாறு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அவர்கள் சாப்பிடும் பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து எடுத்து தந்தாலும் சாப்பிடவேண்டாம். ஏனென்றால் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை அவர்களுக்கு அடையாளம் தெரியும். எனவே நல்லவற்றை சாப்பிட்டு விட்டு உங்களுக்கு மாற்றி கொடுத்து விடுவார்கள்.

தினத்தந்தி மீண்டும் எச்சரித்தது.

"வேண்டாம் " என்று பிடிவாதமாய் மறுத்து விட்டு என் பையில் இருந்த அந்த வெளிநாட்டு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தேன். அவரிடம் காட்டி..

"பாருங்க என்கிட்டேயும் இருக்கு. நான் என்னோடதையே சாப்பிட்டுக்குறேன்" என்று சொல்லிவிட்டுஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன்.

"அது எந்த கம்பேனி சார்" என்றார் பிஸ்கட் பாக்கெட்டை காட்டி.

"இது பாரின் பிஸ்கட்.. நான் போன வாரம் லண்டன் போன போது வாங்கிட்டு வந்தது" என்றேன் பெருமையாக.

"ஒண்ணு குடுங்க சாப்பிட்டு பார்க்குறேன்" என்றார் சிறிதும் தயக்கம் இல்லாமல், பின் அவரே

"நான் லண்டன் போய் இதை எல்லாம் வாங்க முடியாது சார். அவ்வளவு படிப்பு இல்ல. நீங்க ஒண்ணு குடுத்தா ஊருல போய் பெருமையா சொல்லிக்குவேன்.. லண்டன் பிஸ்கட் சாப்பிட்டதா" என்றார்..

எனக்கே பாவமாக இருந்தது.. ஒன்று தானே கேக்கிறார் குடுத்துவிடலாம் என்று பாக்கெட்டை நீட்டினேன். 3 பிஸ்கட் எடுத்துக்கொண்டு.. லேசாக இளித்தார்.

"தப்பா நினைச்சிக்காதீங்க.. சம்சாரத்துக்கு ஒண்ணு.. என் பொண்ணுக்கு ஒண்ணு..அதான் சேர்த்து எடுத்துகிட்டேன்.."

"பரவாயில்லை வேணா இன்னும் 2 எடுத்துகங்க" என்றேன்.

"இருக்கட்டும் சார்.. மனுஷனுக்கு நாக்கு முக்கியம்.. அதை அடக்கனும்... " என்றார் ஒரு பிஸ்கட்டை சாப்பிட்ட படி...அடுத்த 2 நிமிடத்தில் மூன்றையும் காலி செய்து விட்டு..

"சில சமயம் நாக்கை அடக்க முடியறதில்லீங்க" என்று சிரித்தார்.

எனக்கு பாத்ரூம் வருவது போல் இருந்தது.

" கொஞ்சம் என் பெட்டியை பார்த்துகங்க.. நான் பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன்" என்றேன்.

"தாராளமா போய்ட்டு வாங்க சார்.. நான் ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டேன். நீங்க வந்ததும் நான் போகனும்.. " என்று சொல்லி சிரித்தார்.

நான் போய் 5 நிமிடத்தில் திரும்பி வரும் போது அவர் நன்றாக உறங்கி போய் இருந்தார். தொட்டுப் பார்த்தேன்.. லேசாக உலுக்கியும் பார்த்தேன். முழிக்கவில்லை..பிஸ்கட் தன் வேலையை சரியாக செய்து விட்டது. என் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை. அந்த ஏமாந்தவனின் பெட்டியை தூக்கி கொண்டு.. அடுத்த 5வது நிமிடத்தில் வந்த வேலூர் ஜங்ஷனில் இறங்கி மக்களோடு மக்களாய் கலந்துபோனேன்.

நாளைய தினத்தந்தியை அவசியம் பாருங்கள். இதே கதை கட்டாயம் வரும்.
***

3 Comments:

  • At Thu Aug 19, 11:07:00 AM EDT, Blogger Boston Bala said…

    நீங்க பெட்டி திருடன் என்று சொல்லவே இல்லையே... நல்ல அனுபவப் பதிவு :-)

     
  • At Thu Aug 19, 11:16:00 AM EDT, Blogger Gyanadevan said…

    இனிமே இந்த மாதிரி கதை எழுதும் போது "நான்" போட்டு எழுதக் கூடாது.. "பாஸ்டன் பாலா"ன்னு போட்டு எழுதணும்... ;-)

     
  • At Sat Aug 21, 09:55:00 AM EDT, Blogger சாகரன் said…

    நான் இப்படி ஒரு முடிவு எதிர்பார்த்தேன் :-)

     

Post a Comment

<< Home