தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, October 11, 2006

ஒரு அழகிய திகில் இரவு - தொடர்ச்சி..

ஒரு அழகிய திகில் இரவு - 1
என் கழுத்தில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததும், உயிர் துடிக்க ஆரம்பித்தது, உயிர் பிரியும் பயத்தில் உடல் துடிக்கத்தொடங்கியது. பலம் பெருகியது. திமிறி எழுந்தேன். 'வால்நட் கிரீக்' என்றது ஸ்பீக்கர் குரல். கனவு. நான் கண்ட அத்தனையும் கனவு. அடுத்த ஸ்டாப் என்னுடையது. சுதாரிக்க முயன்றேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. திரும்பி அருகில் பார்த்தேன். அங்கே பாதிரியார் இல்லை. திடுக்கிட்டு சன்னல் வழியே பார்த்தால், அவர் அங்கே நின்று கொண்டு எனக்கு டாடா சொல்லி கொண்டிருந்தார். ரயில் வேகமாய் ஸ்டேசன் கடந்தது. உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. ஒரே குழப்பம். ரயில் ஏறியது, பாதிரியார் அருகில் அமர்ந்தது அனைத்தும் நிஜம். பாதிரியார் என் ரத்தம் குடித்தது கனவு. கனவா? ஒருவேளை அந்த ஆவி கழுத்து வழியாக என்னுள்ளே நுழைந்து விட்டதோ? இதய துடிப்பு எகிறியது.

சந்தேகமாய் கழுத்தை தொட்டுப்பார்த்தேன். விரல்களில் பிசுபிசுப்பாய் ஒரு திரவம். படபடக்கும் இதயம். அதன் துடிப்பு நான்கு மடங்கானது. விரல்களை எடுத்து பார்த்தேன். அது ரத்தம். என் ரத்தம். வாய் வழியே இதயம் வெளியே வந்து விடும் போல இருந்தது. "ப்ளிஷண்ட் ஹில்ஸ்" என்றது ஸ்பீக்கர் குரல். அவசரமாய் எழுந்தேன். கதவு மூடும் முன் வெளியே வந்தேன். ஓடினேன். யாருக்கோ பயந்து ஓடினேன். கண்களில் கண்ணீர். என்னுள்ளே யாரோ? எப்போது வெளிவந்து என்னை என்ன செய்வானோ? என்று ஏகப்பட்ட கேள்விகள். கடவுளே ஏன் இந்த சோதனை என்று வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.

கண் விழித்த போது விடிந்திருந்தது. வாசலிலேயே படுத்திருந்திருக்கிறேன். இப்படி ஒருமுறை கூட ஆனதில்லை. நான் நானாக இல்லாத போது எப்படி தூங்கி இருந்து என்ன? வெளிச்சத்தின் காரணமாக பயம் கொஞ்சம் தெளிந்திருந்தது. குளித்து தயாராகி அலுவலகம் கிளம்பினேன். அதே ரயில், ஆனால் இப்போது ஜன நெருக்கடி. ஆவி பயம் இல்லை எனக்கு. எனக்குள்ளேயே அது இருக்கும் போது தனியாக அதற்காக எதற்கு பயம்? விரக்தியான சிரிப்பு மட்டும் எனக்குள் எழுந்தது. அலுவலகத்தில் அனைவரும் கேட்டார்கள். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று. எப்படி சொல்வது நான் மனுஷி அல்ல. பேய் புகுந்த வீடு என் உடம்பு என்று. அலுவலகத்தில் யாரிடம் பேசவும் எனக்கு பயமாகவே இருந்தது. தன்னிலை மறந்து என்னுள் இருக்கும் ஆவிக்கு இடம் குடுத்து யாரையாவது ஏதாவது செய்து விடுவேனோ என்று பயம். தனிமை தேவை பட்டது. ஒதுங்கியே இருந்தேன்.

இன்றும் நேரம் ஆகி விட்டது. அலுவலகம் விட்டு வெளியே வந்தேன். இருள். இருளை பார்த்தால் பயமாக தான் இருக்கிறது. ஆவி கொண்டவள் என்றாலும் நான் ஒரு பெண். பயம் இருக்கத்தான் செய்தது. இன்று ரயிலுக்கு என்னை போல் பலரும் காத்து கொண்டிருந்தனர். ரயில் வந்ததும் ஏறிக் கொண்டேன். கால்கள் தானாய் நடந்து காலியாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தேன். கண்ணை மூடலாம் என்று நினைத்து சாய்ந்த போது, பக்கத்தில் ஒரு குரல்
"ஹலோ"
திரும்பினேன். அலற நினைத்து அடக்கி கொண்டேன். அதே பாதிரியார். இது பிரமையா இல்லை நிஜமா? யாரிடம் கேட்ப்பது என்று புரியவில்லை. அதற்குள் அதே குரல் மீண்டும்
"நேற்று மாதிரி தூங்கிவிடாதீர்கள். அப்புறம் என் பாடு திண்டாட்டம்" என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன" என்றேன்.
லேசாய் சிரித்து விட்டு தொடர்ந்தார்.
"நேற்று நீங்கள் நன்கு தூங்கிவிட்டீர்கள். நான் இறங்கும் இடம் வந்ததும் உங்களை எழுப்பினேன். ஆனால் நீங்கள் அசைந்து கொடுப்பதாய் இல்லை.. கடைசியில் என்ன செய்தேன் தெரியுமா?" என்று நிறுத்தினார். கேள்வியாய் அவரை பார்த்தேன்.
"சீட்டின் மீது ஏறி, முன் சீட்டில் தாவி இறங்கினேன்.. ஹ ஹ ஹ" என்று சிரித்தார்.
எனக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. ஓ அதனால் தான் நான் கண் விழித்த போது அவர் வெளியே இருந்தாரா. என் பயம் கொஞ்சம் விலகியது.. வழிசலாய் முறுவலித்தேன். அவர் தொடர்ந்தார்.
"நீங்கள் தூங்குவதாய் இருந்தால், இதோ ஜன்னல் ஓர சீட். இதில் தூங்குங்கள். வழி விடுகிறேன். இன்றும் என்னால் தாவ முடியாது" என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.

எனக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. அப்படி என்றால் ரத்தம். கழுத்தை மீண்டும் தடவி பார்த்தேன். ரத்தம் வந்த இடத்தில் இடறியது. பாதிரியார் தாவியது உண்மை என்றால் இந்த ரத்தத்திற்க்கு காரணம்?. கழுத்தில் இருந்த என் தங்க செயினை தடவிப் பார்த்தேன். தமிழ் பெண்களின் ஆதர்ஷ "ஊக்கு" அங்கே இல்லை. எல்லாம் புரிந்து நான் சிரிக்க ஆரம்பித்த போது பாதிரியார் அவருடைய தாவலை நினைத்து சிரிப்பதாக நினைத்து கொண்டு அவரும் என் சிரிப்பில் பங்கு கொண்டார்.
*****

ஒரு அழகிய திகில் இரவு

ஒரு சாதாரண பெண்ணுக்கு இது தேவையா? என்று நான் என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இடம் சான் ப்ரான்ஸிஸ்கோ. இரவு காலம். நடுநிசியை தொடலாமா என்று யோசிக்கும் நேரம். தனியாய் நான் பாதாள ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ஐயோ என்று அலறி கத்தினால் கூட யாருக்கும் கேட்க்காது. அவ்வளவு வெறிசோடி இருந்தது. இன்னும் 5 நிமிடம் ஆகும் ரயில் வர. என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் இருந்த MP3 ப்ளேயரில் பேட்டரி தீர்ந்து போய் இருந்தது. படிக்க ரயில் அட்டவணை மட்டும் தான் இருந்தது. ரயில் வரும் திசையை நோக்கினேன். வெறும் இருட்டு குகை தான் தெரிந்தது. இந்தப் பக்கமும் ஒரு குகை, ரயில் போகும் திசை. சே என்ன வாழ்க்கை என்று நினைக்கும் போது அமைதியாய் இருந்த அறிவிப்பு ஸ்பீக்கர், கர கர குரலில், 6 பெட்டிகள் கொண்ட பிட்ஸ்பர்க் போகும் ரயில் இன்னும் 2 நிமிடங்களில் வந்து விடும் என்று அறிவித்தது. சுற்று சுவர்களில் அந்த குரல் எதிரொலித்து. கொஞ்சம் திகில் பட பாணியில் ஒலி தேய்ந்து அந்த இருட்டு குகையில் கரைந்தது. இரு தண்டவாளத்துக்கு பக்கத்தில் இன்னும் ஒரு ஒற்றை தண்டவாளம் இருந்தது. அதற்க்கு ஒரு குடை போல ஒரு தகரம் மூடி இருந்தது. அதில் தான் மின்சாரம் வருகிறது போலும், தொட்டால் வீழ்ந்து விடுவாய் என்பது போல் ஒரு அறிவிப்பு படம் சின்னதாக இருந்தது.

லேசாய் தண்டவாளம் தட தடக்கும் சத்தம் கேட்டது. அதுவரை அமைதியாய் இருந்த என் கூந்தல் லேசாய் பட படத்தது. பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த ராட்ச மின் ரயில், இருட்டு குகையில் இருந்த காற்றை தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரித்தது. நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். புயல் போல வந்து பூ மாதிரி நின்றது. சத்தமில்லாமல் கதவு திறந்தது. உள்ளே கொஞ்சம் ஆட்கள் இருந்தார்கள். தைரியமாய் உணர்ந்தேன். கதவு என் பின்னே தானாய் மூடியது. காலியாக இருந்த இருக்கைகளின் அருகில் கறுப்பர்கள் இருந்தனர். எனக்கு அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. அதனால் அவர்களை தவிர்த்தேன். சுற்றும் முற்றும் பார்த்த போது ஒரு பாதிரியார் இருந்தார். அவருடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. பாதிரியார் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்ததும் திரும்பி சினேகமாய் சிரித்தார்.

நானும் சிரித்து விட்டு, கூந்தலை பின் தள்ளிவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்தேன். ரயில் மெதுவாய் என்னை தாலாட்ட ஆரம்பித்தது. நான் இறங்க வேண்டிய இடம் வர எப்படியும் ஒரு 40 நிமிடம் ஆகும். ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று இமைகளுக்குள் இருட்டை கொண்டு வர முயற்ச்சித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் போய் இருக்கும், பக்கத்தில் இருந்த பாதிரியார் ஏதோ சொல்வது போல் கேட்டது. என்ன என்று பார்த்தேன். சத்தியமாய் நான் என் கனவிலும் அப்படி ஒரு உருவத்தை பார்த்தது இல்லை, மிக கோரமாய் ரத்தம் குடிக்கும் பற்களுடன், வாயோரம் ஒழுகும் எச்சிலுடனும், கண்களில் கொலை வெறியுடன், நீளமான நகங்களுடன் அவர் என் கழுத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். தூக்கத்தில் இருந்து எழுந்ததால் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க நேரம் இல்லை, அந்த அருவெருப்பான கை என் வாயை மூடியது. என்ன பலம்? என்னை திமிர விடாமல் மற்றொரு கை வளைத்து பிடித்தது. வசமாய் மாட்டிக்கொண்டேன். என் கழுத்தை ஒரு பக்கமாய் சாய்த்து, அது என்னை இன்னும் நெருங்கி வந்தது. என் முனகல்கள், காதில் "ஹூ ஹூ" என்ற பாடல்களை கேட்டு கொண்டிருந்த, என் பய மரியாதைகுரிய கறுப்பர்களின்("ர்") காதில் விழவில்லை.

பரிதாபமாய் வீழ்ந்தேன். கூரான இரு பற்கள் என் கழுத்தில் மிக ஆழமாய் இறங்கியது. பூனையில் வாயில் சிக்கிய எலி முரண்டு பிடிக்காதாம். எலிக்கு தெரியும் தப்பிக்க முடியாது என்று. அதனால் எந்த பிரச்சினையும் பண்ணாமல் தன் சாவுக்கு காத்திருக்குமாம். அப்படி தான் நான் இருந்தேன். என் சாவை எதிர்பார்த்து...

தொடரும்...

Sunday, August 20, 2006

திடீரென்று தமிழ்மணம்

திடீரென்று தமிழ்மணம் இப்படி வருகிறது எனக்கு. எல்லோருக்கும் இது போல் வருகிறதா? அல்லது என் கணினி பிரச்சினையா?
Photobucket - Video and Image Hosting

நான் சொல்ல வந்தது (ங்)தமிழ்மணம் பற்றி அல்ல. இப்போது புதிதாய் இமேஜ் இணைத்துள்ளேன். பாருங்கள்.
ஹெட்டரில்(Header) ரஷ்ய எழுத்துக்கள் மாதிரி தெரிந்தது
Photobucket - Video and Image Hosting

Friday, July 28, 2006

இலவச கலர் டிவி

"இலவச கலர் டி.வி வழங்கபட்டவர்களுக்கு அவர்கள் டி.வி பார்க்கும்போது கொறிக்க இலவச 'ஸ்னாக்ஸ்' ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் - (தற்போதைய) தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அறிவிப்பு"

இப்படினு ஏதாவது செய்தி வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை! மாடு தரேன், கயிறு குடுக்க மாட்டேனானு, மொதல்ல இலவச கேபிள், அடுத்தது குடிசைகளுக்கு பல்புக்கும், டி.விக்கும் சேர்த்து இலவச மின்சாரம்னு சொன்னவங்க தானே? அடுத்ததா மேலே சொன்னது நடந்தாலும் நடக்கும்.

ஐயா நீங்க ஏற்கனவே போட்டிருக்கறது பற்றக்குறை பட்ஜெட். இதுக்கு மேலயும் இந்த சுமை எல்லாம் அரசுக்கு தேவை தானா? நாட்டுல பிள்ளைங்கள படிக்க வைக்கவே கஷ்டப்படற எத்தனையோ மக்கள் இருக்காங்க. இந்த டி.வியும் இன்னபிறவும் குடுக்கற காசுல அவங்களை படிக்க வையுங்க, இல்லை இன்னும் நம்ம ஊர் பள்ளி, கல்லூரிகளோட infrastructure டெவலப் பண்ணுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். அதை விட்டுட்டு இப்படி உங்க கட்சி தேர்தல் அறிக்கைல வந்துடுச்சுங்கற ஒரே காரணத்துக்காக முழுக்க இது மேல தான் கவனம் செலுத்துவேன்னு, அதையும் மக்களோட வரிப்பணத்துல தான் செய்வேன்னு சொன்னா அது என்னங்க நியாயம்?

நம்ம ஊர்ல முன்னேற்ற வேண்டிய, அரசோட கவனம் தேவைபடற விஷயங்கள் எத்தனையோ இருக்கும்போது இந்த ஒரு விஷயத்து மேல இத்தனை அக்கறை தேவைதானா?

இந்த பொண்ணும், தமிழ்நாடும் இப்போ ஒண்ணு. கொஞ்சம் உத்து பாருங்க...

Friday, July 14, 2006

பத்து மடங்கு கிடைக்கும்

ஒரு கணவனும் (அவன்)மனைவியும் அவர்கள் புதிதாக வாங்கிய காரில் சுற்றுலா சென்றனர். அது ஒரு பெரிய மலை பிரதேசம். ஒரு அழகான இடம் வந்ததும், மனைவி சொன்னாள்,

"அத்தான் வண்டியாய் ஓரமா நிறுத்துங்க கொஞ்ச தூரம் நடக்கலாம்"

மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சா?? வண்டியை கணவன் ஓரமாய் நிறுத்தினான். இருவரும் இறங்கி சோம்பல் முறித்தனர்.

எல்லோருக்கும் ஆவது போல், மலை உச்சி, குளிர் எல்லாம் சேர்ந்ததால் கணவனுக்கு இயற்கை அழைப்பு வந்து விட்டது. அவன் மனைவியிடம் ஜாடை செய்து விட்டு சிறிது தள்ளி நடந்தான்.

நடந்து கொண்டிருந்த மனைவி, ஓரத்தில் பாறையை ஒட்டி விழும் சிறிய நீர்வீழ்ச்சி அருகில் நின்றாள். அவளின் காலுக்கு கீழே ஒரு அருவெருப்பான தவளை இருந்தது. அதை பார்த்ததும் 2 அடி பின்னால் போனாள். உடனே தவளை பேசியது.

"பெண்ணே, பயப்படாதே, நான் ஒரு முனிவனின் சீடன். குரு கோபம் கொள்ளுமாறு நடந்து கொண்டேன். அதனால் கோபம் கொண்ட அவர் என்னை தவளையாய் போ என்று சபித்து விட்டார். உன் போன்ற பெண் என்னை முத்தமிட்டால் எனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்றது

தவளை பேசுவதை கேட்டு ஆச்சரியம் அடைந்தவள், தவளையிடம்

"நீ சொல்லுவது நிஜம் தானா?" என்றாள்

" ஆம் பெண்ணே, நான் சொல்லுவது அத்தனையும் நிஜம். நான் பழைய நிலைக்கு திரும்பியதும் உனக்கு 3 வரங்களை தருகிறேன். நீ
வேண்டியதை கேட்கலாம்" என்றது.


ஒரு சில விநாடிகள் யோசித்த அந்த பெண், குனிந்து அந்த தவளைக்கு முத்தமிட்டாள். உடனே அந்த தவளை, ஒரு மனிதனாக மாறியது.

" நன்றி பெண்ணே. உன்னால் நான் மனிதன் ஆனேன். நான் சொன்னபடி உனக்கு 3 வரங்களை தருகிறேன். என்ன வேண்டுமோ கேள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை....." என்று இழுத்தான்.

பெண் கொஞ்சம் கோபமாகவே.. " என்ன நிபந்தனை சொல்.." என்றாள்

"நீ திருமணம் ஆன பெண் என்பதால், நீ என்ன கேட்க்கிறாயோ, அது உன் கணவனுக்கு பத்து மடங்காய் போய் சேரும். அதாவது, நீ உனக்காக 100 பவுன் தங்கம் கேட்டால், உன் கணவனுக்கு 1000 பவுன் தங்கம் சேரும். பரவாயில்லையா? "

"பரவாயில்லை.. நான் அவரின் மனைவி தானே. அவர் சொத்து என் சொத்து போல். அதனால் ஒன்றும் பாவம் இல்லை. அவருக்கு என்னை விட 10 மடங்கு சேரட்டும்" என்றாள்.

"சரி உன் வரங்களை கேள்" என்றான் சீடன்.

"நான் தான் இந்த உலகத்தின் அழகான பெண்ணாக இருக்க வேண்டும். இது தான் என் முதல் வரம்" என்றாள்.

"உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு அழகாக ஆகி விடுவான். மற்ற பெண்கள் எல்லாம் அவன் மேல் மையல் கொண்டு சுற்றி வருவார்கள். பரவாயில்லையா?" என்றான் சீடன்.

"பரவாயில்லை. நான் தானே அத்தனை பெண்களையும் விட அழகாக இருப்பேன். அதனால் எனக்கு கவலை இல்லை. என் கணவன் எனக்கு தான்" என்றாள்.

"சரி. தந்தேன். உம்.. என்ன உன் 2வது வரம்" என்றான் சீடன்.

"நான் தான் உலகத்தில் பெரிய பணக்காரியாக இருக்க வேண்டும்" என்றாள்.

"மீண்டும் சொல்கிறேன். உன் கணவன் உன்னை விட 10 மடங்கு பணக்காரனாய் இருப்பான். ஒத்துக் கொள்கிறாயா?" என்றான் சீடன்.

"ம். கவலை இல்லை. அவர் பணம் என் பணம் எல்லாம் ஒன்று தான்." என்றாள்.

" சரி தந்தேன். என்ன உன் 3 வது வரம்" என்றான் சீடன்.

பெண் சிறிது யோசித்து விட்டு..
"எனக்கு மிக லேசான ஹார்ட் அட்டாக் வர வேண்டும்"
என்று சொல்லி விட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

" சரி தந்தேன்" என்றான் சீடன். உடனே மறைந்தான்.

கதையின் உட்கருத்து:
பெண்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை லேசாக எடை போட கூடாது.

பின் குறிப்பு 1:
இத்துடன் இந்த கதை முடிகிறது. எல்லா பெண்களும் சந்தோஷமாய் அடுத்த வேலையை பார்க்க செல்லலாம். நன்றி.


பின் குறிப்பு 2:
ஆண்களே நீங்கள் மட்டும் இந்த கதையை தொடருங்கள்...

கதை தொடர்ச்சி...

மனைவியின் 3வது வரம் இப்படியாக வேலை செய்தது.அவள் கேட்ட லேசான ஹார்ட் அட்டாக் போல் பத்து மடங்கு லேசான ஹார்ட் அட்டாக் கணவனுக்கு ஏற்பட்டது. அதனால் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. இயற்கை அழைப்புக்கு போய் விட்டு சந்தோசமாய் மனைவியை நோக்கி வந்தான்.

கதையின் உண்மையான உட்கருத்து:
பெண்கள் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்..:-)

பின் குறிப்பு 3:
இக்குறிப்பை யாரேனும் பெண்கள் படித்துக் கொண்டிருந்தால்.. கீழ்க்கண்ட பொன்மொழி உண்மையாகிறது.

"பெண்கள் சொல் பேச்சைக் கேட்பதில்லை."

பின் குறிப்பு 4:
இது மொழி மாற்றம் செய்யப்பட்டது. சொந்த சரக்கல்ல.