தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, July 31, 2004

சுப்புலட்சுமி டீச்சர் in 3rd standard - PART 2

தலைமையாசிரியர் அறை.
"என்ன சுப்புலட்சுமி டீச்சர், இப்போ தான் 3ம் வகுப்புக்கு போனீங்க அதுக்குள்ள வந்துட்டீங்க. ஏதாவது பிரச்சினையா" என்று கேட்டார்.

சுப்புலட்சுமி ஒரு பெருமூச்சு விட்டு,
"ஆமாம் சார், ஒரு பிரச்சினை தான். உங்களுக்கு ஞானம்'ங்கிற பையனை தெரியுமா சார்?" என்றார்.

"ஓ நல்லா தெரியுமே, ரொம்ப புத்திசாலி பையன்னு கேள்வி பட்டு இருக்கேன்" என்றார்.

"அவன் தான் சார் இப்போ பிரச்சினை பண்றான்"

"அவனா?? என்ன பண்றான் சொல்லுங்க" என்றார் சந்தேகத்துடன்.

"அவனுக்கு இருக்குற அறிவுக்கு 5ம் வகுப்பு படிக்கணுமாம், அவனை 3ம் வகுப்புல இருந்து மாத்தி 5ம் வகுப்புல போடணுமாம். இதெல்லாம் நடக்குற காரியமா சார். க்ளாஸ் எடுக்க விடாமல் இம்சை பண்றான் சார். என்ன பண்ணலாம் சொல்லுங்க" என்றார் ஆயாசத்துடன்.

தலைமையாசிரியர் சிறிது நேரம் சிந்தித்து விட்டு
"நீங்க அவனை கூட்டிகிட்டு வாங்க. 5ம் வகுப்பு பசங்களை கேட்க்குற மாதிரி கேள்வி கேளுங்க. நிஜமாவே அவன் புத்திசாலியா இருந்தா 5ம் வகுப்புல போட்டுடலாம்"னு சொன்னார்.
........
ஞானமும், சுப்புலட்ச்சுமி டீச்சரும் இப்போது தலைமையாசிரியர் அறையில்.

டீச்சர் சொல்றார்
"ஞானம், இப்போ நான் உன்கிட்ட கேள்வி கேட்பேன், நீ எல்லாத்துக்கும் சரியா விடை சொல்லிட்டா, உன் விருப்பப்படி நீ 5ம் வகுப்புக்கு போகலாம், இல்லை 3ம் வகுப்பு தான், சரியா?" என்றார்.

ஞானமும் அதற்கு ஒப்புக்கொண்டு தலையாட்டினான்.

டீச்சர்:"10ஐ 5ஆல் வகுத்தால்?"

ஞானம் :"2"

டீச்சர்:"1000ஐ 10ஆல் பெருக்கினால்?"

ஞானம்: "10000"

டீச்சர்:"12 பெருக்கல் 12"

ஞானம்: 144

டீச்சர்:"100ஐ 4ஆல் வகுத்தால்"

ஞானம்: 25

எல்லாவற்றிர்க்கும் விடை உடனே உடனே வந்தது. டீச்சர் அசந்து போனார்.

தலைமையாசிரியர் உடனே,
"டீச்சர் வேற சப்ஜெக்ட்ல கேளுங்க" என்றார்.

டீச்சர் யோசித்து

"1 கிலோ மீட்டர் என்பது?"

"1000 மீட்டர்"

"பிராணவாயு எனப்படுவது?"

"ஆக்சிஜன்"

இப்படியே நிறைய கேள்விகள் .. எல்லாவற்றிர்க்கும் சரியான விடை கூறி அசத்தினான்.

தலைமையாசிரியர் மீண்டும் குறுக்கிட்டு
" பொதுவா கேளுங்க இப்போ" என்றார்.

டீச்சர் 1 நிமிடம் யோசித்து

" பசுமாட்டுக்கு 4 இருக்குறது எனக்கு 2 மட்டும் இருக்கு. அது என்ன?"
என்றார்.
ஞானம் சிறிதும் யோசிக்காமல் உடனே கூறினான்.
" கால்கள் டீச்சர் " என்றான்.

" சரி, உன் டவுசர்ல இருக்குறது என்கிட்ட இல்லே. அது என்ன?" என்று கேட்டார்.

ஞானம் ஒரு சில வினாடிகள் யோசித்தான், பிறகு
" பாக்கெட் டீச்சர் " என்று பதிலளித்தான்.

டீச்சர் அடுத்த கேள்வி தொடங்கும் முன், தலைமை ஆசிரியர் நடுவில் புகுந்து

"போதும் கேள்விகள். பையன் பாஸ் பண்ணிட்டான். அவனை 8ம் வகுப்புக்கு மாத்திடுங்க" என்றார்.

சுப்புலட்சுமி திடுக்கிட்டு போய்

"என்ன சார் சொல்றீங்க? இவனை 8ம் வகுப்பில போடணுமா ஏன்? 5ம் வகுப்பு போகணும்ன்னு தானே கேட்டான்?" என்றார்.

தலைமை ஆசிரியர் மெதுவான குரலில்
"கடைசி 2 கேள்விகளுக்கு நானே தப்பான பதில் தான் யோசிச்சேன்" என்றார்.

Friday, July 30, 2004

சுப்பு லட்சுமி டீச்சர் in 3rd standard - PART 1

மயக்கம் போட்டு விழுந்த சுப்பு லட்சுமி டீச்சர் ( பார்க்க "மழை மல்லிகை" ) , மயக்கம் தெளிஞ்சி நேரா தலைமை ஆசிரியர் கிட்ட போய்,
"சார் என்னால இந்த பசங்களுக்கு பாடம் சொல்லித்தர முடியாது. வேற வகுப்புக்கு மாத்துங்க"ன்னு கேட்டுகிட்டாங்களாம்.

தலைமை ஆசிரியரும் சரின்னு சொல்லிட்டு 3ம் வகுப்புக்கு அனுப்பி வச்சாரு. இப்போ 3ம் வகுப்புக்கு போலாமா?

"மை டியர் குட்டி பசங்களா, என் பேரு சுப்பு லட்சுமி, நான் தான் இனிமேல் உங்க க்ளாஸ் டீச்சர், உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும், இல்லை, என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க. சரியா"
என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

குழந்தைகள் குசு குசு வென்று பேசிக்கொண்டன. அப்போது ஒரு சிறுவன் எழுந்தான்.

"டீச்சர்.. என் பேரு ஞானம், எனக்கு உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றான்.

"சொல்லு ஞானம் என்ன வேண்டும் உனக்கு. தைரியமா சொல்லு" என்றார் டீச்சர்.

"டீச்சர்.. எனக்கு இந்த 3ம் வகுப்பு தேவை இல்லை டீச்சர். எனக்கு இருக்குற அறிவுக்கு நான் 5ம் வகுப்பு படிக்கனும் டீச்சர். நீங்க தான் எப்படியாச்சும் என்னை 5ம் வகுப்புக்கு அனுப்பி வைக்கனும் டீச்சர்"ன்னு கேட்டான்.

இதென்னடா புது தலைவலின்னு டீச்சர் நினைச்சாங்க. அப்புறம் இவனை சமாதானம் பண்ணலாம்ன்னு
"5ம் வகுப்பு போக நிறைய தெரியணும் ஞானம், நீ 3ம் வகுப்புல நிறைய மார்க் எடு, நேரா 5ம் வகுப்புக்கு போக வைக்கிறேன்"ன்னு சொன்னார்.

"இப்படி தான் டீச்சர் 2ம் வகுப்புலேயும் சொன்னாங்க. நான் நிறைய மார்க் எடுத்தும் என்னை 4ம் வகுப்புக்கு மாத்தலே. அதுனாலே என்னை நீங்க உடனடியா 5ம் வகுப்புக்கு மாத்துங்க"ன்னு அடம் பிடிச்சான்.

டீச்சருக்கு குழப்பமா போயிடிச்சி
"சரி ஞானம், நீ எப்படி 5ம் வகுப்புக்கு போக தகுதியானவன்ன்னு நினைக்கிறே" என்று கேட்டார்.

" என் அக்கா 5ம் வகுப்பு தான் படிக்கிறா, நான் தான் அவளுக்கு தினமும் வீட்டுபாடம் செஞ்சிக் கொடுப்பேன். கணக்கு போட்டுக் காட்டுவேன். எல்லாம் நான் தான் சொல்லிக் கொடுப்பேன். இப்போ சொல்லுங்க டீச்சர், நான் 5ம் வகுப்பு போக தகுதி இருக்குறவன் தானா இல்லையா?" என்று பதிலளித்தான்.

டீச்சருக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. நேராக தலைமை ஆசிரியரிடம் போனார்.

தொடரும்...

Thursday, July 29, 2004

இது :-) மட்டும்!

இது புன்னகைக்க மட்டும்!!!!
***
சேலத்தில் இருந்து தர்மபுரி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறம் படித்தது
" அனைவருக்கும் ஆரம்ப கல்வியை அழிப்போம் "
***
திருச்சியில் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட வாசகம்(கி.பி. 1992 ல்)
" ணக்க "
"மீண்டும் வருக"
(பி-கு)அது வணக்கம் - 'வ' மற்றும் 'ம்' அழிந்திருந்தது
***
சேலம் - மாலை முரசு - தலைப்புச் செய்தி
" ராணுவம் வருகை - வீரப்பன் பிடிக்க"

(பி-கு) எனக்கு தேதி ஞாபகம் இல்லை.
***
உதவியாளருக்கும், அந்தரங்க உதவியாளருக்கும் என்ன வித்தியாசம்.
உதவியாளர் : "குட்மார்னிங் சார்" சொல்லுவார்
அந்தரங்க உதவியாளர் : "மார்னிங் ஆயிடிச்சி சார்"ன்னு சொல்லுவார்.
***
அது ஒரு அரசு அலுவலகம்.
" சப்தம் எழுப்பாதீர் " என்று எழுதப்பட்டு இருந்தது.
ஒரு குறும்பன் அதற்கு கீழே
" சப்தம் எழுப்பினால் தூக்கம் கலைந்து விடும்"
என்று எழுதி இருந்தான்.
***

Wednesday, July 28, 2004

மழை மல்லிகை

அது இருபாலர் படிக்கும் பள்ளி. எட்டாம் வகுப்புக்கு புதிதாய் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவருக்கு அது முதல் நாள். எனவே வகுப்புக்குள் சென்று
"என் அன்பு மாணவ மாணவியரே, என் பெயர் சுப்புலட்சுமி, நான் தான் இனி உங்கள் வகுப்பு ஆசிரியை. நீங்கள் எல்லோரும் உங்கள் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை சொல்லுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக எனக்கு பாரதியார் கவிதைகள் பிடிக்கும், பூரி பிடிக்கும், பூக்கள் பிடிக்கும். இது போல் உங்கள் விருப்பம் எதுவோ அதை இங்கே சொல்ல வேண்டும். சரியா?" என்று முடித்தார்

" சரி டீச்சர்.. " என்றனர் கோரஸாக.

" நல்ல பசங்க.. சரி, நான் வருகைபதிவு பார்த்து கூப்பிடுவேன், அவங்க எந்திரிச்சி, அறிமுகம் செஞ்சிக்கணும். சரியா?" என்றார்.

பிறகு வருகைபதிவை திறந்து வாசித்தார்.
" அனுபமா..."

" எஸ் டீச்சர்.."

" சொல்லு அனுபமா, உன்னை பத்தி சொல்லு" என்றார் ஆசிரியர் அன்புடன்.

" என் பெயர் அனுபமா. எனக்கு ரோஜாப்பூ பிடிக்கும், அப்புறம் இட்லி... அப்புறம்.. " என்று சொல்லிவிட்டு ..

" அவ்வளவு தான் டீச்சர்" என்று உட்கார்ந்து விட்டாள்.

" சமத்து அனுபமா.. அடுத்து அன்புசெல்வம்"

அன்புசெல்வம் கடைசி பெஞ்சில் இருந்து எழுந்து நின்றான்.

" டீச்சர் எனக்கு மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் " என்றான்.

ஒரு நிமிடம் டீச்சர் அசந்து போனார். இவ்வளவு சின்ன பையன் மனதில் இப்படி ஒரு ரசனையா, இவன் கட்டாயம் பிற்காலத்தில் பெரிய கவிஞனாக வருவான் என்று நினைத்து உள்ளுக்குள் சிலிர்த்து போனார்.

"வித்தியாசமான ரசனை உனக்கு அன்புசெல்வம். குட்" என்று பாராட்டிவிட்டு,

 "அடுத்து... சந்திரிகா" என்றார்.

" எனக்கு தோசை பிடிக்கும் டீச்சர், ரஜினி காந்த் பிடிக்கும் டீச்சர்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தாள்.

" சந்திரசேகர்" என்று அழைத்தார்

" டீச்சர்.. எனக்கும் மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று சொல்லி அமர்ந்தான். ஆசிரியர் நினைத்தார், அவனுக்கு "குட்" சொன்னதால் தான் இவனும் அதே போல் சொல்கிறான் என்று. எனவே ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அடுத்த பெயரை அழைத்தார்.

" தன லட்சுமி.."

" டீச்சர் எனக்கு பட்டாசு பிடிக்கும், திருக்குறள் பிடிக்கும்" என்று அமர்ந்தாள்.

" வெரி குட், திருக்குறள் பிடிக்குமா உனக்கு? நல்லது தன லட்சுமி" என்று பாராட்டிவிட்டு அடுத்த பெயரை அழத்தார்

"தன சேகர்"

தன சேகர் எழுந்து
"எனக்கு கொட்டும் மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்றான்.

இப்போது ஆசிரியருக்கும் லேசாக எரிச்சல் வந்தது. என்ன இந்த பசங்க, ஒரு தடவை குட் சொன்னா எல்லாரும் அதையே சொல்லுறாங்க என்று. இருந்தும் ஒன்றும் சொல்லாமல் அடுத்தடுத்து பெயர்களை அழைத்துக் கொண்டே போனார்.

" இளங்கோ"

" மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.

" கமலா "

" குதிரை, பூனை அப்புறம் கொழுக்கட்டை பிடிக்கும் டீச்சர்" என்றாள்.

" லாவண்யா "

" பிள்ளையார் அப்புறம் லட்டு பிடிக்கும் டீச்சர்" என்றாள்.

"லட்சுமணன்"

" மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.

" மதிவாணன் "

" மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.ஆசிரியரின் பொறுமை இப்போது எல்லை கடந்து இருந்தது. எல்லா பசங்களும் ஒரே மாதிரி சொல்லுறாங்க என்று வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். எனவே

"அடுத்த ஆள் யார்?? நீங்களே வரிசை படி உங்க பேர் சொல்லி, விருப்பத்தை சொல்லி அறிமுகம் பண்ணிகோங்க" என்று சொல்லிவிட்டு கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்தார்.

" என் பேர் மதியரசன் டீச்சர்... எனக்கு மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும்" என்று அமர்ந்தான்..

ஆசிரியர், உச்சபட்ச கோபத்தில் நிமிர்ந்து பார்தார்.. அடுத்து இன்னொருவன்

" என் பேர் மதுகுமார் டீச்சர். எனக்கு கொட்டும் மழை அல்லது சாரல் மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.

கோபத்தை அடக்க முடியாமல், அறிமுக வகுப்பை நிறுத்தி விடும் நோக்கில் டீச்சர் தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.அப்போது, அடுத்ததாக ஒரு அழகான பெண் எழுந்து நின்றாள்

" டீச்சர் என் பெயர் மல்லிகை. எனக்கு மழையில் சொட்ட சொட்ட நனைய பிடிக்கும்" என்று சொல்லி விட்டு அமர்ந்தாள்.

ஆசிரியர் மயக்கம் போட்டு விழுந்தார்.

Tuesday, July 27, 2004

டுபாக்கூர்

www.themobilematrix.com
www.q4it.com
www.mymobiletrix.com

இங்கே நான் குடுத்திருக்கிற சுட்டியை என்னுடன் வேலை செய்யும் சிலர் 185 பவுண்டு  குடுத்து வாங்கி இருக்காங்க. அவங்களை ஏமாத்தினது ebay.co.uk வலைதளத்தில் வந்த விளம்பரம் தான் காரணம். ebay மேல எந்த தப்பும் இல்லை. ஆனா குடுக்கப்பட்ட விளம்பரத்தை ஒழுங்கா படிக்காம பணம் கட்டியது, வாங்கினவன் தப்பு தான். ஏமாற்றவன் இருக்கும் வரை ஏமாத்துறவன் இருப்பான். US, UK'la இருக்குற நிறைய பேரு ebay உபயோகிப்பாங்க. இங்கேயே இருக்குறவங்களுக்கு இந்த டுபாக்கூர் விளம்பரம் பத்தி நல்லா தெரியும் அதுனாலே தப்பிச்சிடுவாங்க. ஆனா புதுசா இந்த ஊருக்கு வர்றவங்க, என்னடா வெறும் £20 பவுண்டுக்கு £500 பவுண்டு விலை உள்ள பொருளை தர்றாங்கன்னு, அவசரப்பட்டு காசு குடுத்து ஏமாந்துடுவாங்க. உங்களுக்கு நேரம் இருந்தா இந்த வலை தளங்களுக்கு போய் எப்படி இவங்க அட்டகாசமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருங்க.

Monday, July 26, 2004

எல்லாம் 1 பவுண்டு

"நண்பா, இங்க பாருடா, எந்த புத்தகம் வாங்கினாலும் 1 பவுண்டுதான் விலையாம். இன்னைக்கே அப்ளை பண்ணப்போறேன்... உனக்கு வேண்டுமா? எல்லா புத்தகமும் இருக்கு.."
என்று சொன்ன என் நண்பன் கையில் ஒரு துண்டு பிரசுரம் இருந்தது.. சந்தேகமாய் பார்த்தேன்..
"நீ அப்படி பார்க்காதே.. இந்த பேப்பர்ல இருக்குறது அவங்க விலாசம், அப்புறம் கிப்ட் நம்பர். அவ்வளவு தான். புத்தக லிஸ்ட் நாம நெட்ல தேடலாம். வாடா கனெக்ட் பண்ணு"
என்று பரபரத்தான். நான் அவனுடைய ஆர்வத்தை குலைக்க விரும்பாமல்
"கனெக்ட் ஆகி தான் இருக்கு, போய் தேடு"
என்று சொல்லி விட்டு டிவியில் மூழ்கினேன்.
"சூப்பர்... நண்பா.. இங்கே வா, வந்து பார்.. புத்தக லிஸ்ட் பார்த்தா நீயும் உடனே உறுப்பினர் ஆயிடுவே.." என்றான்
ஆர்வம் உந்தி தள்ள எழுந்து சென்று பார்த்தேன். புரிந்தது என் நண்பனின் விழிகள் விரிந்ததற்கு காரணம். செக்ஸ் லைப்.. காமசூத்ரா.. லவ்வர்ஸ் பொசிசன்ஸ் என்று விவகாரமான புத்தகங்களின் அணிவகுப்பாய் இருந்தது.
"இதையா வாங்க போறே?? " என்றேன்.
" ஆமாம்டா இந்த வயசுல இதை வாங்காம வேற என்ன வாங்குறது" என்றான். சரி என்று நானும் அவனுக்கு உதவி செய்து 3 புத்தகங்கள் தேர்வு செய்தோம். மொத்தம் 3 பவுண்டு + தபால் செலவு 3 பவுண்டு சேர்த்து காசோலை அனுப்பினோம்.

1 வாரத்தில் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ஒவ்வொன்றும் 20 பவுண்டு விலையாவது இருக்கும். படித்தோமோ இல்லையோ, படம் மட்டும் பார்த்து தூக்கி போட்டுவிட்டோம், எல்லாம் வெறும் ஓவியங்களாக இருந்தது. 2 நாளில் அவை ஏதோ ஒரு மூலைக்கு போய்விட்டது.

20 நாள் கழித்து அந்த புத்தக மையத்தில் இருந்து ஏதோ கடிதம் வந்தது. வாங்கிய புத்தகங்களுக்கு ரசீதும், மேலும் பல புத்தகங்களின் விவரங்களும் அடங்கி இருந்தது. அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை. 20 நாள் கழிந்தது. திடீரென ஒரு பார்சல் வந்தது. பிரித்துப் பார்த்தால், இங்கிலாந்தின் அரசியல் வரலாறு அடங்கிய தலையணை சைஸில் உள்ள ஒரு புத்தகமும் அதற்கு 30 பவுண்டு கட்ட வேண்டும் என்ற ஆணையும் இருந்தது. உடனே அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். இது போல நாங்கள் எந்த புத்தகமும் ஆர்டர் செய்ய வில்லை, தவறுதலாக அனுப்பி விட்டீர்கள் என்று. ஆனால் அவர்களின் பதில் வித்தியாசமாய் இருந்தது.

அவர்கள் முன்னமே அனுப்பிய கடிதத்தில் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்து இருந்தார்களாம். அதை "தேவை" அல்லது "தேவை இல்லை" என்று குறியிட்டு நாம் அவர்களுக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டுமாம். அப்படி பதில் சொல்லத் தவறினால் "தேவை" என்று அவர்களே நினைத்துக் கொண்டு அந்த  புத்தகத்தை அனுப்பி விடுவார்களாம். இது நல்ல கதையாய் இருக்கிறதென்று உறுப்பினர் பதிவை ரத்து செய்ய சொன்னால்.... " 1 வருடம் இந்த புத்தக மையத்தில் உறுப்பினராக இருந்து, குறைந்த பட்சம் 2 புத்தகமாவது வாங்குவேன்" என்ற விதியை ஒத்துக் கொண்டு தான் சேர்ந்திருப்பதால் ரத்து செய்ய முடியாது என்றும், அப்படியே செய்ய வேண்டுமென்றால் வாங்கிய எல்லா புத்தகங்களுக்கும் உண்மையான விலையை குடுக்க வேண்டுமாம். உண்மையான விலை 100 பவுண்டுக்கு மேல் போனது.

மாதாமாதம், பொறுப்பாக அவர்களின் கடிதத்திற்க்கு என் நண்பன் பதில் போட்டுக் கொண்டிருக்கிறான்.

Sunday, July 25, 2004

கதவை மூடு - பகுதி 2

ஆனந்த் தொடர்கிறான்..
"உங்க கிட்ட சொல்லிட்டு நான் நைட் ஷோ முல்லைக்கு கிளம்பினேன். ஆட்டோலே தான் போனேன். அது ஒரு ஹிந்தி படம். பேர் 'தர்வாஜா பந்த் கரோ'. அதாவது கதவை மூடு - சாத்துன்னு கூட வச்சிக்கலாம். பேர் பாத்ததும் எனக்கு ஒரே கிளுகிளுப்பாய் போச்சு.. செம படம் போல இருக்கு, பேரே ரொம்ப செக்ஸியா வச்சு இருக்கான்னு குஷியா பர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனேன். நைட் ஷோ, அதுனால கூட்டம் கம்மியா தான் இருந்திச்சி. பர்ஸ்ட் க்ளாஸ்லே மருந்துக்கு கூட யாரும் இல்லே. எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிடிச்சி. தனியா தியேட்டர்ல உட்கார்ந்து செக்ஸ் படம் பார்க்குற பாக்கியம் எனக்கு தான் கிடைச்சி இருக்குன்னு பெருமை பட்டுகிட்டேன். சரியா 10 மணிக்கு படம் ஆரம்பிச்சான். ஒரே கும்மிருட்டு, என் கையே எனக்கு தெரியல அப்படி ஒரு இருட்டு, ஸ்கிரீன்லயும் ரொம்ப வெளிச்சம் இல்ல. நான் பிட் ஸீனுக்கு ரொம்ப ஆவலா காத்திருந்தேன்...." என்று சொல்லி நிறுத்தினான்...
"மேல சொல்லுடா.. அப்புறம் என்ன ஆச்சு.. " என்றேன் ஆர்வம் தாங்காமல்..
" நான் நினைச்ச மாதிரி படம் போகலேடா மச்சி.. அப்போ ஸ்கிரீன்ல ஒரு திகில் சீன்.. பேய் ஒண்ணு பின்னாடியே வர்ற மாதிரி.. சுத்தி இருட்டு.. ஒண்ணும் தெரியலே.. பேய் ஒரு ஆள் தோளை தொடுது. அதே நேரம்.. அதே நேரம்..."
மீண்டும் நிறுத்தினான்.
"அதே நேரம்.. என்ன ஆச்சு...?????"
" அதே நேரம், ஒரு புறம்போக்கு நாய்...(பல்லை கடித்து கொண்டான்) என் தோளை தொட்டு, - சார் படம் போட்டு எவ்வளோ நேரம் ஆச்சுன்னு கேட்டான்.. மனுசனாடா அவன்.. கால நேரம் தெரியாம, அந்த இருட்டுல என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேட்பானாடா? நானே பயந்து நடுங்கி போய் உட்கார்ந்து இருந்தேன். உங்களுக்கே தெரியும் நான் பேய் படம் எல்லாம் பார்க்க மாட்டேன்னு.. அந்த ஆள் என் தோளை தொட, நான் படத்துல இருக்குற பேய் தான் வந்துடிசின்னு நினைச்சி பயந்து ஓ'ன்னு கத்தி கலவரப்பட்டுப் எந்திரிச்சி ஓடி போனேன். ரூமுக்கு வந்துடலாம்னு கதவை தொறக்கப் பார்த்தேன். அதுவும் பூட்டி இருந்தது.. எனக்கு பயம். சரி எப்படியும் இண்டெர்வெல் சமயம் தொறந்து விடுவாங்கன்னு கதவுக்கு பக்கமாவே உட்கார்ந்தேன். படம் கொஞ்சம் நஞ்சம் திகில் இல்லேடா.. கண்ணை மூடிகிட்டாலும் ஸ்பீக்கர்லே வர்ற வசனம், எபெக்ட் எல்லாம் என்னை ரொம்ப படுத்திடிச்சி. படம் பார்க்கவும் முடியாம, ஓடவும் முடியாமா.. அவஸ்தை பட்டேன். ஒரு நிமிஷம் கூட அந்த படத்துல வெளிச்சம் வரலேடா.. அப்படி ஒரு இருட்டு திகில்... திகில் திகில்...."
"சரிடா.. இடைவேளை விட்டப்போ கதவை தொறந்தாங்க தானே?" என்றேன்.
"அந்த கதை ஏன் கேட்குற, பயத்துல நான் தப்பான கதவை தொறக்கப் பார்த்து இருக்கேன். இடைவேளை விட்டதும், இன்னொரு கதவு தொறந்து இருந்தது, நானும் வெளியே வந்து பார்த்தேன்.. என் நேரத்தை பாரு.. அந்நேரம் கரண்ட் கட்.. முல்லை இருக்குற ஏரியா தான் தெரியும்லே.. ஆள் நடமாட்டமே இருக்காது.. படம் விடும் போது தான் ஆட்டோகாரங்க வருவாங்க. ஏற்கனவே பயத்துல இருக்குற எனக்கு வெளியே போக மனசு வரலே.. வராந்தாவுல உட்கார தியேட்டர்காரங்க விடல.. கடைசிலே முழு படமும் பார்த்துட்டு பயம் உறைஞ்சி போய் ரூமுக்கு வந்து படுத்தேன்.. காய்ச்சல் வந்து.. டாக்டர்கிட்ட போய்.. ஊசி போட்டுகிட்டு.. இப்போ பரவாயில்லே.. நாளைக்கு வந்துடுவேன் காலேஜுக்கு" என்று முடித்தான்.
(பி-கு) அவனுக்கு உடம்பு சரியாகவில்லை, எனவே கும்பகோணத்திற்கு நாங்கள் ட்ரெய்ன் ஏற்றி விட்டோம். 1 வாரத்திற்க்கு பின் தெளிவாக வந்தான். அதன் பின் அவன் முல்லைக்கு போகவே இல்லை :-)

Saturday, July 24, 2004

அன்புள்ள அருண்...

ஆசிரியர்களை பார்த்து நான் பரிதாபப்படவில்லை. பல பேரின் உயிர் காக்கும் சந்தர்ப்பத்தில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல், குழந்தைகளை, அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிர் தான் பெரிதென்று ஓடி ஒளிந்த ஆசிரியர்களை(ஆசிரியர்கள் மட்டுமல்ல - சம்பந்தப்பட்ட அனைவரையும்), மன்னிக்க கூடாது. கட்டாயம் தண்டிக்க வேண்டும். அத்தனை குழந்தைகளின் சாவுக்கு தாங்களும் ஒரு காரணம் ஆகி விட்டோம் என்று அவர்கள் உணர வேண்டும். இதில் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

சாகசம் செய்துதான் குழந்தைகளை காப்பற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை,(ஒரு வேளை, அந்த ஆசிரியர்களின் குழந்தை அங்கே படித்து கொண்டிருந்தால், இப்படி தான் தங்கள் உயிர் முக்கியம் என்று, குழந்தையை கருக விட்டு போவார்களா?) அவசரம், ஆபத்து என்று ஊரை கூட்டி இருக்கலாம். நான் கேள்வி பட்ட வரை, தீ பிடித்ததும், குழந்தைகளை வகுப்பிலே இருக்க சொல்லி விட்டு இவர்கள் மட்டும் ஓடி இருக்கின்றனர். ஒருவேளை உதவி கேட்டு வெளியே வந்து இருக்கலாம், தீ பெரிதாக பிடித்ததும்  ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஓடி இருக்கலாம். எங்கிருந்தோ வந்த ஒரு கொத்தனார், குழந்தைகளை காப்பாற்றும் போது இறந்து போய் இருக்கிறார். படிக்காத அவருக்கு இருந்த மனிதாபிமானம் கூட, சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? விபத்து நடந்த போது அருகில் இருந்து பள்ளியை பற்றி அதன் அமைப்பை பற்றி, சில ஆலோசனை சொல்லி இருக்கலாம் அல்லவா? "அய்யா குழந்தைங்க உள்ளே மாட்டிகிட்டங்கய்யா.. காப்பாத்துங்க " என்று கதற கூட முடியாமலா போகும்?? அப்படி அவர்கள் எவ்வளவு பெரிய தவறை தீ பிடிக்கும் போது செய்து இருந்தால், இப்படி ஓடி ஒளிந்திருப்பார்கள்.
நடந்த துயருக்கு எல்லாரும் தான் காரணம், ஆனால் சில உயிர்களையாவது காப்பாற்ற வாய்ப்பிருந்தும், அநியாயமாய் ..... போதும்.. இதற்கு மேல் வேண்டாம்.

Friday, July 23, 2004

கதவை மூடு - பகுதி 1

நான் திருச்சியில இருக்குற பிஷப் ஹீபர் காலேஜ்ல தான் யு.ஜி (இளம்கலை) படிச்சேன். என் கூட படிச்ச ஆனந்த் கொஞ்சம் விளைஞ்ச பையன். எனக்கு திருச்சி ரொம்ப தெரிஞ்ச ஏரியா. அதுனால நான் ரொம்ப வால் தனம் எல்லாம் செய்யாம அமைதியா காலேஜ் போனோமா வந்தோமான்னு இருப்பேன். ஏன்னா யாராச்சும் பார்த்துட்டு வீட்டுல போட்டு குடுத்துடுவாங்கன்னு பயம். அவன் கும்பகோணத்துல இருந்து வந்து இருந்தான். ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாவே போடுவான். செக்ஸ் ஜோக் நிறைய சொல்லுவான். எப்பவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

காலேஜ் பக்கத்துல ஒரு மேன்ஷன்ல ரூம் போட்டு தங்கி இருந்தான். அவன் ரூமுக்கு போனா நல்லா பொழுது போகும். மெத்தைக்கு அடியில குறிஞ்சி, முல்லை, மருதம், சரோஜாதேவி புத்தகமா இருக்கும். அதை எடுத்து சரவுண்ட் எபெக்ட்டோட(effect) படிப்பான். நாங்க படிச்சது மாலை நேர கல்லூரி. பகல் எல்லாம் வெட்டியா சுத்திகிட்டு இருப்பான் (நான் சமத்து. வீட்டுல தான் இருப்பேன்). வாரத்துக்கு எப்படியும் 2 தடவை பிட் படம் ஓட்டுற தியேட்டருக்கு போயிடுவான். படம் பார்த்து வந்துட்டு கதை சொல்லுவான். நிஜமாவே படம் நல்லா இருக்கோ இல்லையோ அவன் சொல்ற கதை நல்லா இருக்கும்.

அப்போ திருச்சியில முல்லை தியேட்டர்ன்னு ஒண்ணு இருந்திச்சி (இப்போ இருக்கா தெரியலே). அங்கெ எப்பவும் பிட் படம் தான் போடுவாங்க. அவன் அந்த தியேட்டருக்கு வார வாடிக்கையாளன். ஒருசமயம் என்ன ஆச்சு, பையன் 3 நாள் காலேஜ்க்கு வரல. என்னடான்னு விசாரிக்க அவன் ரூமுக்கு போனோம். கட்டில படுத்துகிட்டு மூஞ்சி வரை மூடிகிட்டு தூங்கி இருந்தான். மெதுவா தொட்டு எழுப்பினேன். அவன் உடம்பு லேசாய் சுட்டது. காய்ச்சல் என்று யூகித்தேன்.
"ஆனந்த்.. நான் தாண்டா.. எந்திரிடா"
புரண்டு படுத்து பின் முனகியவாரே எழுந்து அமர்ந்தான். தாடி லேசாக முளைத்து இருந்தது. கண்ணில் களைப்பு தெரிந்தது. தண்ணீர் எடுத்து குடுத்தேன். வாய் ஈரம் ஆகும் வரை குடித்தவன் அதை கீழே வைத்தான்.
"சொல்லுடா ஆனந்த்.. ஏன் திடீர்னு காய்ச்சல்?"
 காலை மடக்கி, நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தான். பின் மெதுவாக சுவற்றில் சாய்ந்து களைத்த கண்களால் எங்களை பார்த்தான்.
"மனுஷன் 3 நாளா காலேஜ் வரல, இப்போ தான் எனக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க தோணுச்சாடா உங்களுக்கு" என்று கேட்டான்.
"இல்ல மச்சி, முல்லைக்கு போறேன்னு சொன்னியா நீ.. படம் ரொம்ப பிடிச்சி போய் தினமும் 4 காட்சி பார்க்குறியோன்னு நினைச்சிட்டோம் நாங்க.. அதான்" என்று இழுத்தேன்.
முறைத்து பார்த்து விட்டு.."கொழுப்புடா உங்களுக்கு.. திமிர்பிடிச்ச பயல்களா" திட்டு ஒன்றை உதிர்த்தான்.
"சரிடா எங்களை திட்டுறதை விடு.. உனக்கு என்ன ஆச்சு?? படத்துல படு பயங்கர சீன்?? பார்க்கக்கூடாதது எதையாச்சும் பார்த்துட்டியா?? காய்ச்சலே வந்துடிச்சி?" என்று சொல்லி கண்ணடித்தேன்.
சட்டென்று அவன் முகம் மாறியது. கிட்டதட்ட அழும் நிலைக்கு போனான். நாங்களும் கொஞ்சம் சிரிப்பை நிறுத்தி விட்டு அவனை பார்த்தோம். "ஆமாம்டா, அந்த படம் தான் என் காய்ச்சலுக்கு காரணம்.." என்று தொடங்கினான். இனி அவன் சொல்வதாய் இந்த கதை தொடர்கிறது...


Thursday, July 22, 2004

கரப்பான் பூச்சி - சுண்டெலி

நம்மூர் கரப்பான் பூச்சி போட்ட கூல்டிரிங்ஸ் கதை எல்லாருக்கும் தெரியும். எலி விழுந்த பீர் கதை தெரியுமா?? இது நடந்தது பெரியண்ணன் ஊருல (அதாம்பா அமெரிக்கா!!) ராண்டி ஏஞ்சலின்'னு ஒரு ஜட்ஜய்யா. மிசோரி'ல இருக்குற ஹோலிஸ்டர் ஊருல வேலை பார்க்குறாங்க. ஒருநாள் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து "மில்லர்" ப்ராண்ட் பீர் குடிச்சி இருக்காங்க. அது தீர்ந்ததும் தூக்கி போட பார்த்தாங்க, உள்ளே ஏதோ இருக்குற மாதிரி தெரிஞ்சதும் அது என்னான்னு பார்த்து இருக்காங்க. செத்துப் போன சுண்டெலி அவங்க கண்ணுல பட்டு இருக்கு, உடனே கத்தி, கூச்சல் போட்டு அமர்க்களம் பண்ணிட்டாங்க. இதுக்கு நிவாரணம் தரணும்'னு இப்போ கேஸ் போட்டு இருக்காங்களாம்.
( இவங்களையே இந்த கேஸை விசாரிக்க சொல்லிட்டா... உடனே தீர்ப்பு வந்துடாது??)

பெய்ஜிங்(சீனா) ஊருல ஒரு சம்பவம். பொண்டாட்டி இறந்த துக்கத்துல ஒரு ஆள், கரப்பான் பூச்சி வளர்க்க ஆரம்பிச்சிட்டாராம். பக்கத்து வீட்டுக்காரனுக்கு நாத்தம் தாங்க முடியாம போலிஸ்க்கு போயிட்டார். போலிஸ் வந்து வீட்டை பார்த்தா.. பயந்துட்டாங்களாம். வீடெல்லாம் கால் வைக்க முடியாத அளவுக்கு கரப்பான் பூச்சிகளாம். எண்ணி பார்த்தா கிட்டதட்ட 200,000 ( 2 லட்சம்) இருந்ததாம். ஹெல்த் ஆபிசர்ஸ் வந்து  சுமாரா 2 மணி நேரம் போராடி, அத்தனை பூச்சிகளையும் கொன்னு, வீட்டையும் க்ளீன் பண்ணி குடுத்தாங்களாம்.
 
(சீனாகாரங்க கரப்பான் பூச்சி சாப்பிடமட்டாங்களா? ஏன் கொன்னாங்க? )

Wednesday, July 21, 2004

அது ஒரு அழகிய நிலாக்காலம்

10 வருடங்களுக்கு முன்பு,  அது ஒரு ஆடி மாதம். காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நான் அப்போது திருவரங்கத்தில் இருந்தேன். ஊரிலிருந்து உறவினர்கள் எல்லாரும் வந்து இருந்தார்கள். எல்லாருக்கும் அம்மா மண்டபம் சென்று குளிக்க வேண்டும் என்று ஆசை. அங்கு தான் குளிக்க பாதுகாப்பாய் கம்பி போட்டு இருப்பார்கள். தண்ணீர் எவ்வளவு வேகமாய் வந்தாலும் சரி, அதிகபட்சம் கம்பி வரை தான் இழுத்துக்கொண்டு போகும், அதற்கப்புறம், கம்பியை பிடித்துக்கொண்டு தப்பி விடலாம்.
 
மாருதி ஆம்னி வண்டியில் 7 பேர் கிளம்பினோம். பத்தாவது நிமிடத்தின் முடிவில் நாங்கள் படித்துறையில் இருந்தோம். நான், என் நண்பர்கள் சிலரை அங்கே பார்த்தேன். அதனால் உறவினர்களை அங்கேயே விட்டு, தனியே குளிக்க சென்றேன். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், எனக்கு இடுப்பளவு மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் மனம் மாறியது, கம்பியை தாண்டி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். யாரும் அறியாமல், நீருக்குள் மூழ்கி, உடலை வளைத்து கம்பிக்கு நடுவில் புகுந்து மறுபக்கம்  வந்தோம். ஏதோ சுதந்திரமே கிடைத்து விட்ட சந்தோசம். இருந்தாலும் கம்பியை விட மனசில்லை, காரணம் எங்களில் யாருக்கும் நீச்சல் அவ்வளவாக தெரியாது.
 
கம்பியை தாண்டியதும் தான் கவனித்தேன், அங்கே இன்னும் ஆழம் குறைவாக இருக்கிறது என்று. தைரியமாக கம்பியை விட்டு நடக்க ஆரம்பித்தேன். நினைத்தது போல் அங்கே ஆழம் குறைவாகவே இருந்தது. என்னைப் பார்த்து தைரியமாய் என் நண்பர்களும் என்னை நோக்கி வர ஆரம்பித்தார்கள். நண்பன் ஒருவன் கரைக்கு போய் சோப் எடுத்துக்கொண்டு வந்தான். நான் தண்ணீர் பாயும் திசைக்கு எதிர்த்து நின்றிருந்தேன். நீரின் வேகம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் காலை நன்றாக ஊன்றியிருந்தேன்.
 
எனக்கு முன்னே சோப் போட்டுக் கொண்டிருந்த நண்பன், திடீரென சோப்பை தவற விட்டான். "டேய் சோப் டா.. பிடி..டா" என்று கத்தினான். நானும் குனிந்து அதை பிடிக்க முற்பட்டேன். "கிடைக்கலே" என்று சொல்லி நிமிர்ந்தேன். ஒரு அடி பின்னே வைத்து மீண்டும் குனிந்தேன். ஏதோ வித்தியாசமாய் பட்டது, கால் புதைவதாய் ஒரு உணர்வு. எச்சரிக்கை மணி அடிக்க அடுத்த காலை எடுக்க பார்த்தேன். அதுவும் புதைந்திருந்தது. பயத்தை மனதில் ஒளித்துக்கொண்டு "டேய் கை குடுடா" என்று முன்னே இருந்தவனிடம் கேட்டேன். "சோப் கிடைச்சிடுச்சா" என்றவாறு கையை நீட்டியவன் கத்த ஆரம்பித்தான். நான் மார்பு வரை தண்ணீருக்குள் போய் இருந்தேன். சத்தம் கேட்டு எல்லாரும் உஷாரானார்கள்.
 
கை நீட்டிய நண்பனும், கம்பி நோக்கி சென்று விட்டான். கரை வரை அவர்களது கத்தல் கேட்டது போல, அங்கே ஒரே பரபரப்பு, அவ்வளவு தான் பார்த்தேன், அதற்குள் நான் முழுதும் நீருக்குள் மூழ்கி இருந்தேன். கால் இப்போது சுதந்திரமாய் இருந்தது, ஆனால், 3 ஆள் ஆழத்தில் இருந்திருப்பேன். கதை முடிந்தது என்று எனக்கு தோன்றவில்லை, தரையை தொட்டதும் உதைத்து மேலே எழும்பினேன். தண்ணீர் மட்டத்திற்கு வந்தேன், நான் குளித்துக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவு அடித்து வரப்பட்டு இருந்தேன்.
 
"அதோ அங்கே" என்று ஒரு குரல். மீண்டும் தண்ணீருக்குள் பயணம், இந்த முறை லேசாக பயம், மூச்சு திணறலாய் வேறு உணர்ந்தேன். ரொம்ப ஆழத்திற்க்கு வந்துவிட்டது போல் இருள், பலமெல்லாம் திரட்டி உடம்பை மேலே கொண்டு செல்ல முயன்றேன், மீண்டும் தரை தட்டுபட்டது, உதைத்துக் கொண்டு மேலே வந்தேன், முக்கால்வாசி நான் மேலே வந்ததும், ஒரு கால் தெரிந்தது, எம்பி அதை கெட்டியாக பிடித்தேன். காலுக்கு சொந்தகாரன் கத்த ஆரம்பித்தான்.
" ஓய் விடுடா காலை, நானும் உள்ளே போயிடுவேன்" என்று சொல்லி என்னை உதற பார்த்தான். நானா விடுவேன்?? பிடித்த பிடியாய் இறுக்கி பிடித்துக் கொண்டேன். முடிவில் என் மார்பில் ஓங்கி உதைத்தான். இந்த முறை என் பிடி தளர்ந்தது. நான் கொஞ்சம் தள்ளப்பட்டேன். என்னை உதறும் முயற்சியில் அவன் என்னை அந்த நீர் சுழியில் இருந்து  வெளியேற்றி இருந்தான். அவன் விட்ட உதையில் முற்றிலும் வெளியே வந்து இருந்தேன்.
 
 அப்போது என்னால் காலை ஊன்ற முடிந்தது, இடுப்பளவில் தண்ணீர் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு கால் குடுத்தவன், "அயோக்கிய பயலே கொல்லவா பார்குற" என்று திட்டி கொண்டே சென்றான். நீச்சல் தெரிந்த இருவர் என் பக்கத்தில் வந்து "ஒண்ணுமில்லையே தம்பி" என்று என்னை பாதுகாப்பாய் கம்பிக்கு பக்கத்தில் விட்டு சென்றனர்.

இப்போதும், நான் கம்பிக்கு இந்த பக்கம் தான் இருந்தேன், நண்பர்கள் அந்த பக்கம் பாதுகாப்பாய் நின்றிருந்தனர். உடம்பு கொஞ்சம் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. "சோப் கிடைச்சதாடா" என்று ஒருவன் ஆரம்பித்தான், வந்ததே கோபம் எனக்கு, கம்பி மேல் ஏறி, அவன் மீது குதித்தேன். சிரிப்பும் கும்மாளமாய் கரைக்கு வந்தோம்.
 
உறவினர் ஒருவர் அருகில் வந்தார், "என்னடா ஆச்சு? ஏன் தண்ணிகுள்ளே விளையாடிட்டு இருந்தே இவ்வளோ நேரம்?? அங்கே ஒரு பையன் உள்ளே போய்ட்டானாம், காப்பாத்த போய் இருக்காங்க. நீ தான் உள்ளே போயிட்டேன்னு பயந்து போனேன்" என்றார்.
"ஏன் பயந்தீங்க? " என்றேன்.
அவர் என்னை பார்த்து ரொம்ப ஸீரியஸாக சொன்னார்
" மாத்து துணி எல்லாம் கார்லே இருக்கு, கார் சாவி உன் டவுசர் பையிலே இருக்கு. ஈர துணியோட பஸ்ஸுல எப்படி போறதுன்னு எனக்கு பயம் வந்துடிச்சி"
 
நான் என்னையே நினைத்து சிரித்துக்கொண்டேன். நான் தண்ணீரில் மூழ்கி தப்பித்தது இன்னும் யாருக்கும் தெரியாது என் நண்பர்களை தவிர. சொல்லி இருந்தால் தினமும் நான் காவிரியில் குளிக்க  சென்றிருக்க முடியாது :-) அது ஒரு அழகிய நிலாக்காலம்.

Tuesday, July 20, 2004

நாளை மறுநாள்

"நாளை மறுநாள்" (day after tomorrow) திரைப்படம் உண்மையாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. போன வாரம் பிபிசியில் ஒரு விவரணப்படம் காட்டப்பட்டது. அதில் உலகம் பிறந்ததில் இருந்து இன்றுவரை அது அடைந்துள்ள மாற்றங்களை தெள்ள தெளிவாக காட்டி, எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்றும் கணித்து சொல்லியது. கிட்டதட்ட திரைப்படத்தில் சொன்னதை தான் இதிலும் சொன்னார்கள் ( இதிலிருந்து தான் அவர்கள் சுட்டார்களா தெரியாது :-). மொத்தத்தில் சாராம்சம் இது தான், இப்போது சுற்றிகொண்டிருக்கும் உலகம் எப்போது வேண்டுமானாலும் பேரழிவுகளை நிகழ்த்தலாம்.

தூங்கி கொண்டிருக்கும் எரிமலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வாழ்க்கையை கடன் வாங்கி இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இயற்கை ஜப்தி செய்யும். எரிமலைகள் முழிக்கும் போது லட்சகணக்கான மக்கள் மாள்வது உறுதி :-( ஆயிரம் செயற்கை கோள்கள் இருப்பினும் இயற்கையின் இயல்புகளை கவனிக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாமல் மனிதன் தடுமாறுகிறான் என்பது உண்மை. பொதுவாக இப்போது உலகம் எங்கிலும் பல இயற்கை சீரழிவுகள், புது புது உயிர் கொல்லி நோய்கள் வந்த வண்ணம் உள்ளது. உயிர்களை பறிப்பதிலும் அது இரக்கம் காட்டுவதில்லை.
 
விபத்துகள் பெருகி விட்டன. தற்கொலைகளும், கொலைகளும் கூட எண்ண முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டன. என்னதான் புது தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறையவில்லை. நாமும் சும்மா இல்லாமல், அது வேண்டும், இது வேண்டும் என்று, அடுத்த நாட்டுடன் போரிட்டு மடிகிறோம். உயிர் இப்போது மதிப்பில்லாமல் போய்விட்டது. உயிர் போய் விடுமோ என்ற பயத்தில் தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறோம். எதுவும் நிரந்தரமில்லை என்ற சூழல் வந்து கொண்டிருக்கிறது. நம்மை நாமே அழித்து கொள்வதை தவிர்த்துப் பார்த்தாலும், வாழ்க்கையின் நீளம் மிக குறைவாகவே இருக்கிறது.

மிதக்கும் கண்டங்கள் எல்லாம் பிரிந்து மேலும் புதிய கண்டங்களை உருவாக்கும் என்று சொல்கிறார்கள். அது நடக்க சில ஆயிரம் வருடங்கள் ஆகலாம். ஆனால் எதுவும் நிச்சயம் இல்லை என்றே நம்புகிறார்கள். பூமிக்கு அடியில் எதுவும் நடக்கலாம், நாளைக்கே ஆப்பிரிக்கா அறுந்து வந்து இந்திய நிலப்பரப்பில் மோதலாம். மோதலின் வேகத்தில் இமயமலை இன்னும் சில கிலோ மீட்டர்கள் உயரம் கூடலாம். இந்தியாவில் 5 முதல் 6 தென்மாநிலங்கள் இல்லாமல் போய் விட கூடும். ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு சாலை ஓர விரிசல் இந்த கண்டம் பிரிதலை விளக்குகிறது. அந்த விரிசல் 3 நாடுகளை கடந்து நீள்கிறதாம். இன்றில்லாவிடாலும்  என்றேனும் இது பிரிந்து விடும் என்று கருதுகிறார்கள்.

வருங்கால முதல்வர்கள் எல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

(பி-கு) இதற்கெல்லாம் சுட்டி கேட்காதீர்கள். நான் படித்ததின்/பார்த்ததின்  தொகுப்பு இது. அவ்வளவு தான்.

Monday, July 19, 2004

நாங்கள் சொன்னது போல்

தினமும் காலை நான் அலுவலகம் கிளம்புவதற்கு முன் தொலைகாட்சியில் பிபிசி-யின் "காலைஉணவு" பார்ப்பேன் (breakfast :-)). முக்கால்வாசி நேரம், ஈராக் பற்றியும், புஷ் பற்றியும், டோனி பற்றியும் பேசி கழுத்தறுப்பார்கள். வானிலை அறிக்கைகாகவும், சாலையின் போக்குவரத்து நிலைமை/மாறுதல் பற்றியும் தெரிந்து கொள்ளவும் மட்டும் அதை பார்க்கலாம். சில சமயத்தில் நம்மை பயமுறுத்தும் விதமாக ஏதாவது சொல்லி கலவரப்படுத்தவும் செய்வார்கள். இப்படித்தான் நேற்று காலை இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பற்றி ஒரு செய்தி வாசித்தார்கள்.

பொதுவாக பாதுகாப்பு சரி இல்லை என்றால் என்ன சொல்வார்கள்? " இந்த மாதிரி, இந்த முக்கியமான இடத்துல, இந்த மாதிரி இந்த மாதிரி பாதுகாப்பு இல்லை, இந்த மாதிரி செஞ்சா நல்லா இருக்கும் - இதை பத்தி அரசு யோசிச்சா நல்ல இருக்கும்" இப்படி சொல்லலாம். அதை விட்டுட்டு அவர்கள் சொல்கிறார்கள்

பாராளுமன்ற பாதுகாப்பு மிக மோசமாக இருக்கிறது. இந்த சுவர் வெறும் கான்கிரீட், எந்த நேரமும், ஒரு தற்கொலை படை ஆள் வந்து தாக்கினால் இதை மிக சுலபமாக உடைத்து விடலாம். பிக்பென்(bigben) மணி கோபுரம் பலமிழந்து உள்ளது, அதை உச்சியில் தட்டினால் நேராக பாராளுமன்றம் மேல் தான் விழும். பிக்பென் மணி கோபுரம் இங்கு சரி இல்லை, சுவர் இங்கே வெடிப்பு விட்டுள்ளது என்று இஷ்டத்திற்கு படம் காட்டுகிறார்கள்.

தெரியாமல் தான் கேட்கிறேன், பாதுகாப்பு சரி இல்லை என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டு அரசை எச்சரிக்காமல், அல்லது நேரடியாக தெரிவிக்காமல், தொலைகாட்சியில் காட்டுவது அவ்வளவு பாதுகப்பானதா? என்ன தான் பிபிசி, பாராளுமன்றத்தின் பாதுகாப்பில் ஓட்டை கண்டுபிடித்திருந்தாலும், அதை இப்படியா வெளிப்படையாக அறிவிப்பது?? நாளைக்கு யாரேனும் இதை பார்த்து விட்டு பாம் போட்டால் அப்போது பிபிசி சொல்லும் "நாங்கள் முன்னமே சொன்னது போல்...."

Friday, July 16, 2004

வெந்ததை பெற்றவளே!!

வெந்ததை பெற்றவளே!!
உனக்கில்லை ஆறுதல்!!
மார்பில் அடித்துக்கொள்!
தலையை முட்டிக்கொள்!
ரத்தம் வெளியேற அழுவு!
சித்த பிரமையில் சிலையாகு!
நெஞ்சம் வெடிக்க குமுறு!
மண்வாரி இறைத்து தூற்று!
மனமாற வசை பாடு!
எச்சில் வற்ற துப்பு!
கல்நெஞ்சம் எனக்கில்லை.
உனக்கு ஆறுதல் சொல்ல !!
நீ மயங்கி வீழும் போது
என் கனத்த மார்பில் தாங்குகிறேன்
இல்லை
என் மடியில் தாங்குகிறேன்
சேர்ந்து நானும் அழுகிறேன்!!

சுத்தத் தமிழ் நடிகர்

என் இனிய தமிழ் மக்களே என முழங்கும் பாரதிராஜா அவர்களே உங்களை விட மிகப் சிறந்த நகைசுவையாளர் தற்போதைக்கு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். காரணம் உங்களது பேட்டி ( குமுதம் ஜூலை 10 - 16 2004)..

"தென்னிந்திய நடிகர் சங்கம்" என்ற பெயரை "தமிழ்த் திரைபட நடிகர் சங்கம்" என்று மாற்றியதற்கு பிறகு தான் உங்கள் மகன் மனோஜ் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவான் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களாமே? இப்படிப் பட்ட ஒரு உறுதிமொழி உங்களை தவிர வேரு யாரும் எடுக்க முடியாது. மனோஜ் உறுப்பினர் ஆகாததால் தமிழ் திரை உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. மனோஜ் போன்ற அதி அற்புத நடிகன் உறுப்பினர் ஆகாதது நடிகர் சங்கத்துக்கு எவ்வளவு அவமானம்? நடிகர் சங்கம் இருந்து என்ன பிரயோசனம்? மனோஜ் இல்லாத நடிகர் சங்கம் தலை இல்லாத முண்டம் தானே? அதற்கு விஜயகாந்த் தலைவராய் இருந்தென்ன, இல்லாமல் போனால் என்ன? எத்தனை பேர் தினமும் உங்களை போனிலும், நேரிலும் அழைத்து மனோஜை உறுப்பினர் ஆக்க சொல்லி கெஞ்சுகிறார்கள்? நீங்கள் உறுதியாய் இருப்பதை கண்டு எவ்வளவு பெருமை கொள்கிறார்கள்? உங்களுக்கு ஒரு ஐடியா.. பேசாமல் மனோஜை தலைவராக்கி பாரதிராஜவின் "சுத்தத் தமிழ் நடிகர் சங்கம்" என்று ஒன்றை ஆரம்பித்து, விஜயகாந்தை மண்ணை கவ்வ வைக்கலாமே?? என்ன நான் சொல்றது?

Thursday, July 15, 2004

"சி.த.ஆ.க"

ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரியிலே,
பைத்தியத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்குற
ஒரு பைத்தியகார வைத்தியருக்கே
பைத்தியம் பிடிச்சதுன்னா அவர்
எந்த பைத்தியகார ஆஸ்பத்திரியிலே,
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்குற
இன்னொரு பைத்தியகார வைத்தியருக்கிட்ட
தன் பைத்தியத்துக்கு
வைத்தியம் பார்த்துப்பார்.

இது விசு பட டயலாக் தான். அவர் ஜோக்குக்கு சொன்னார், இப்போ அது உண்மையாகிட்டே வருது. ஊருல வைத்தியம் பார்த்துட்டு இருந்த வைத்தியருங்க நிறைய பேருக்கு இப்போ சினிமா தலைப்பு பைத்தியம் பிடிச்சி அலையிறாங்க(லேட்டஸ்ட் தனுஷின் "டாக்டர்ஸ்" பட தலைப்புக்கு எதிர்ப்பு). சினிமா தலைப்பை ஆராய்ச்சி பண்றதுக்குனே டாக்டர் பட்டம் வாங்கி இருக்காங்க போல....!

பேச்சு, நடவடிக்கை எதுவும் சரி இல்லை....இப்படியே விட்டா ஒரு "சி.த.ஆ.க" (சினிமா தலைப்பு ஆராய்ச்சி கழகம்) ஆரம்பிச்சி கறுப்பு சிகப்புக்கு நடுவுல ஒரு ஸ்டெதெஸ்கோபும் ஒரு தெர்மாமீட்டரும் போட்டு, அண்ணா சாலைலே நர்சுங்கள முன்னாடி நடக்க விட்டு, ஒரு சாலை மறியல் செஞ்சாலும் செய்வாங்க. எப்படியும் நம்ம டாக்டர் ராமதாஸும் கிருஷ்ணசாமியும் சிறப்பு விருந்தினரா கலந்து விழாவுக்கு அழகு சேர்ப்பாங்க. டாக்டர் கலைஞர்கிட்ட இதைபத்தி கேட்டா செந்தமிழில் "நோ கமெண்ட்ஸ்"னு சொல்லுவார்.

இப்போதைக்கு அலோபதி டாக்டர்ஸ் மட்டும் தான் போராடப் போறாங்க... ஆதரவு இருக்குன்னு தெரிஞ்சா நாட்டு மருத்துவர், சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஹோமியோபதி மருத்துவர், யுனானி மருத்துவர் எல்லாத்துக்கும் மேல நம்ம சிட்டுகுருவி மருத்துவர், லாட்ஜ் மருத்துவர் எல்லாரும் ஓர் அணியில் திரண்டு.. சினிமா உலகத்தை ரெண்டு பண்ணுவாங்க.

போங்கய்யா பொழப்பத்தவங்களா.. வேலையை பார்க்காம வெட்டியா சினிமா பேரை நோண்டிகிட்டு இருக்கீங்க. எதெதுக்கு போராடுறதுன்னு விவஸ்தை இல்லாம போயிடிச்சி. ரொம்ப போர் அடிச்சா சொல்லுங்க, இன்னும் நிறைய விஷயம் எடுத்து தர்றேன்... அதையெல்லாம் வச்சிகிட்டு அடுத்தடுத்து போராட்டம் பண்ணுங்க.. எனக்கும் வலைபதிய விஷயம் கிடைச்சிகிட்டே இருக்கும் ;-)

Wednesday, July 14, 2004

அசரீரி

ஞானம் ஒருமுறை ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தான். மரங்கள் அடர்ந்து, சூரிய வெளிச்சம் உள்ளே புக முடியாத அளவிற்கு இருட்டு. கையில் இருந்த டார்ச் உபயோகித்து நடந்தான். திடீரென அவனை சுற்றி சலசலப்பு கேட்டது. ஒரு நிமிடம் நின்று உன்னிப்பாக கேட்டான். அமைதி மட்டும் சூழ்ந்திருந்தது. ஆசுவாசமாய் அடுத்த அடி எடுத்து வைத்தான், அவ்வளவு தான், புற்றீசல் போல் வித விதமாய் சப்தமிட்டுக்கொண்டு மனிதகறி சாப்பிடும் ஆதிவாசி கூட்டம் ஒன்று அவனை சுற்றிக்கொண்டது. ஞானத்தை சுற்றி சுற்றி வந்து "ஓஓ ஆஆ" என்று ஓலமிட்டது.. ஞானம் செய்வதறியாது திகைத்துப் போனான்.
" ஐயோ கடவுளே!! நான் நல்லா மாட்டிகிட்டேன். செத்தேன், செத்தேன்" என்று திருவிளையாடல் நாகேஷ் போல் புலம்பினான்.
" இல்லை, சாகவில்லை நான் இருக்கிறேன்" என்று ஒரு அசரீரி வானத்தில் ஒலித்தது, ஒரு ஒளிகற்றை அவன் முகத்தில் அடித்தது, பின் பேசியது
"ஞானம் நீ இன்னும் சாகவில்லை.. பயப்படாதே, உன் காலுக்கு கீழே ஒரு கல் இருக்கிறது பார், அதை எடுத்து, மண்டை ஓட்டை குச்சியின் உச்சியில் சொருகி, அதை வைத்துக் கொண்டு உன் முன்னால் ஒருவன் இருக்கின்றானே, அவன் மண்டையில் ஓங்கி அடி" என்று சொல்லி விட்டு நிறுத்தியது.
என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், யார் சொல்லி செய்கிறோம் என்று ஒன்றும் யோசிக்காமல், ஞானம் குனிந்தான்..கல் எடுத்தான்.. ஆதிவாசி தலைவனின் மண்டையில் ஓங்கி அடித்தான்.. அது வரை கத்திக் கொண்டிருந்த கும்பல் அப்படியே உறைந்து நின்றது.. அப்போது அசரீரி மீண்டும் பேசியது..
"ஞானம், உன் கவலை தீர்ந்தது. இப்போது நீ நிஜமாகவே செத்தாய்"
சுற்றி இருந்த ஆதிவாசி கும்பல் ஆக்ரோசமாய் ஞானத்தின் மேல் பாய்ந்தது.

Tuesday, July 13, 2004

IT அதிகாரம்

திருக்குறளில் விடுபட்டுப் போன IT அதிகாரம் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிலிருந்து....

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.
***
Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் Codingகெழுதியே சாவார்.
***
எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Job இல்லை "C"யை மறந்தார்க்கு.
***
Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.
***
Netஇல் தேடி Copy அடிப்பதின்
மூளையிலிருந்து Logic யோசி.
***
பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.
***
எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.
***
எது தள்ளினும் Projectல் requirements
தள்ளாமை மிகச் சிறப்பு.
***
Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.
***
Bench, Project, e-mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.
*---------------*
(பி-கு) இது சத்தியமாய் என் கற்பனை அல்ல :-)

Monday, July 12, 2004

இந்தியாவிலும்.. இங்கிலாந்திலும்...

கை கால் ஊனமுற்ற ஒருவருக்கு ஓட்டுனர் உரிமம் எடுத்து கொடுத்து ஆர்.டி.ஓ அலுவலகத்தின் முகத்திரையை கிழித்து இருக்கிறது ஜூவி. பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்துல் கலாமுக்கே அரெஸ்ட் வாரண்ட் குடுத்த நாடு இது. ஓட்டுனர் உரிமம் எடுப்பது ஒரு பெரிய விஷயம் இல்லை தான். இருந்தாலும், இது எவ்வளவு அபாயகரமானது. நீதிதுறை ஊழல் ஒரு தனிப்பட்ட நபரை பாதிக்கும் என்றால், இது எத்தனை மக்களின் உயிரை பாதிக்கும்??? இதை படித்ததும் நான் இந்த ஊர் ஓட்டுனர் உரிமம் வாங்க பட்ட பாடு தான் ஞாபகம் வருகிறது. 1996லேயே நான் இந்திய ஓட்டுனர் உரிமம் வாங்கி இருந்தாலும் 1 வருடத்துக்கு மேல் அதை வைத்து இங்கே ஓட்ட கூடாது. எனவே நான் ப்ரவிஷனல் உரிமத்திற்க்கு விண்ணப்பித்தேன். அதற்கு 30 பவுண்டுகள்(கிட்டதட்ட 1 பவுண்டு=80 ரூபாய் தற்போது). பிறகு எழுத்து தேர்வுக்கு 29 பவுண்டுகள் கட்டினேன். எழுத்து தேர்வு என்பது கணினியில் எழுதுவது தான், 34 கேள்விகள் இருக்கும் 30 பதில்கள் சரியாக இருந்தால் தான் தேர்ச்சி பெற முடியும். அது முடிந்ததும், "Hazard Perception" என்று ஒரு பகுதி, அதில் கேள்விகள் வித்தியாசமாக இருக்கும். கணினி திரையில் நாம் கார் ஓட்டுவது போல் காட்டப்படும், அதில் எங்கெல்லாம் அபாயம் ஏற்படும் என்று கணித்து நாம் க்ளிக் செய்ய வேண்டும். இஷ்டத்திற்க்கு க்ளிக் செய்தாலும் மார்க் கிடையாது. தாமதமாக க்ளிக் செய்தாலும் மார்க் கிடையாது. அதில் 75க்கு 50 எடுத்தால் தான் பாஸ். இப்படியாக தியரி டெஸ்ட் முடித்தேன் வெற்றிகரமாக :-)

பிறகு தியரி டெஸ்ட் சான்றிதழ் வைத்து ப்ராக்டிகல் தேர்வு நேரத்தை முன்பதிவு செய்தேன், இதற்கு 40 பவுண்டுகள் :-(. அது கிடைக்க 2 மாதம் ஆனது. தேர்வுக்கு தயார் செய்து கொள்ள அருகில் இருக்கும் பயிற்சி பள்ளியில் வாரம் ஒரு வகுப்பு எடுத்துக் கொண்டேன். நான் சொந்தமாக கார் வைத்து தினமும் ஓட்டி கொண்டிருந்தாலும், என் பயிற்சியாளர் சுட்டிகாட்டிய தவறுகளை எண்ண முடியவில்லை. அத்தனை விதிகளை, முறைகளை சொல்லி தந்தார். ஒரு வகுப்பு என்பது 1 மணி நேரம், 20 பவுண்டு கட்டணம் :-( இப்படியாக 5 வகுப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு, 6ம் வகுப்பு நேரத்தில் தேர்வுக்கு சென்றேன். 45 நிமிடம் கார் ஓட்டினேன், ஏகப்பட்ட கேள்விகள் கேட்டார், நான் ஓட்டும் விதத்தில் உள்ள குறைகள் ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டார். சாலையில் "யு" வளைவு எடுக்க சொன்னார், பின்புறமாக வந்து 2 கார்களுக்கு நடுவே பார்க் செய்ய சொன்னார், மிக நெரிசலான பகுதிக்கு அழைத்து சென்று என் திறமையை சோதித்தார். முடிவில் "சாரி யு ..." என்று தேர்வாளர் ஆரம்பித்தார். அவர் சாரி சொல்லும் போதே எனக்கு 40 பவுண்டு போச்சே என்று தான் நினைத்தேன் :-) என் பயிற்சியாளரிடம் சில அறிவுரைகளை சொல்லி விட்டு போனார். எனக்கு கேவலமாக இருந்தது. 12 வருடமாக கார் ஓட்டுகிறேன், 8 வருட இந்திய உரிமம் வைத்து இருக்கிறேன், அதுவும் இல்லாமல் இந்த நாட்டில் 1 வருடமாக அனைத்து பகுதிகளுக்கும் காரில் சென்று வந்துள்ளேன், ஒவ்வொரு முறையும் காரை வாடகைக்கு எடுத்தால் 1000 மைல்களுக்கு குறைவாக ஓட்டியதில்லை. அப்படி பட்ட என்னைப் பார்த்து கார் ஓட்ட தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். 1 வாரம் புலம்பிக்கொண்டே இருந்தேன் 40 பவுண்டு போச்சே போச்சே என்று :-(.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் திரும்பவும் 40 பவுண்டுகள் கட்டி அடுத்த மாதத்தில் ஒரு நாள் முன்பதிவு செய்தேன். 1 மாதம் சும்மா இருக்க முடியுமா? 60 பவுண்டுகள் கட்டி 3 வகுப்புகளுக்கு சென்றேன். தேர்வு நாளன்று அதே போல் 45 நிமிடம் வண்டி ஓட்டி காட்டி, முடிவில் பாஸ் செய்தேன். ஆக மொத்தம் ஓட்டுனர் உரிமம் வாங்க நான் படித்தது 4 புத்தகங்கள், 3 சிடி ராம்கள், 9 வகுப்புகள், கிட்டதட்ட 300 பவுண்டுகள்.

இதே தான் இங்கு இருக்கும் எல்லாருக்கும் நடக்கிறது. படிப்பு, முறையான பயிற்சி இவையெல்லாம் இல்லாவிட்டால் சத்தியமாக ஓட்டுனர் உரிமம் வாங்கவே முடியாது. 4 முயற்சிகளுக்கு பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஆனால் இந்தியாவில்?? ஜூவியே சாட்சி..

(பி-கு) 1996 ல் நான் கார் மற்றும் பைக் ஓட்டி காட்டித் தான் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெற்றேன்.

Sunday, July 11, 2004

பிச்சை மந்திரி

இந்த வாரத்(9-ஜூலை - 2004) திண்ணையில் அக்கினிபுத்திரனின் (சிங்கப்பூர்) கடிதம் படித்தேன். ஞானியின் போன வார கடிதத்திற்கு எதிர்வினையாம்... சிரிப்பு தான் வருகிறது. கொஞ்சமும் அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. கருணாநிதியின் செயல்களை நியாயப்படுத்த மட்டுமே பார்க்கிறார். ஞானியின் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஏதோ திமுகவில் உள்ள அத்தனை பேரும் கருணாநிதியின் வாக்கை வேதவாக்காய் நினைப்பது போல் எழுதி இருக்கிறார். சத்தியமாய் அவர் சொல்வது போல் திமுகவில் உள்ள அத்தனை பேரும் முட்டாள்கள் அல்ல, அதாவது கருணாநிதியின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பதற்கு.

ஞானியின் கடிதம் எவ்வளவு தூரம் இவரை சுட்டிருந்தால் இப்படி புலம்பி இருப்பார்?? மூளை மழுங்கி போய் இருக்கும் சில தொண்டர்களுக்கு வேண்டுமானால் கருணாநிதி செய்வது எல்லாம் சரியாக படலாம். நானும் திமுக காரனாக இருந்தேன். ஆனால் என்னால் கருணாநிதியின் குடும்பத்தை வளர்க்க முடியாது. எப்போது கருணாநிதிக்கு பேரன், பையன் முக்கியம் ஆனதோ அப்போதே நான் அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அக்கினி புத்திரனுக்கு வேண்டுமானால் கருணாநிதியின் குடும்பம் முக்கியமாக படலாம். ஆனால் எனக்கு இல்லை. தயாநிதி மாறன் மந்திரி ஆனது இவருக்கு தப்பாய் படவில்லையாம். இதுவே இவருக்கு உறைக்கவில்லை என்றால் இனி என்ன நடந்தாலும் உறைக்க போவதில்லை.

திமுக என்னவோ மத்திய அரசின் தூண் போல நினைத்துக்கொண்டு அவர்களை பற்றி உயர்வாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்த முறை காங்கிரஸ் மட்டும் தனி பெரும்பான்மை பெறட்டும், அப்போது இருக்கிறது, திமுகாவுக்கு. பதவி வேண்டாம் என்று ஒரு பேச்சு, தந்தால் இந்த துறை தான் வேண்டும் என்று அடம். சின்ன குழந்தை பல்பம் கேட்பது போல், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மிரட்டி, இன்னொருவர் போட்ட பிச்சையில் மந்திரி சுகத்தை அனுபவித்து வரும் திமுக......
இது எப்படி என்றால், வீட்டுக்குள்ளே கூட்டி வந்த நாய்க்கு பிஸ்கட் போட்டு அமைதியாய் இருக்க சொன்னால், அது விருந்தாளிக்கு குடுத்த பிஸ்கட் தான் வேன்டும் என்று விடாமல் குரைத்து அதை பிடுங்கி தின்று ஏப்பம் விட்டு கொண்டு, வீட்டுக்கு தானே ராஜா என்று சுற்றி வருகிறது... அதையும் உண்மை என்று சிலர் நம்பி ஏமாந்து வக்காலத்து வாங்குவது....... வேண்டாம்... ரொம்ப கேவலமாக வருகிறது...

கருணாநிதியின் வயதிற்கு தான் மரியாதை தருகிறார்கள் என்பதை இவர்கள் எப்போது தான் புரிந்து கொள்ள போகிறார்களோ????????????

Friday, July 09, 2004

சின்ன மீன் - பெரிய குழி

ஞானம் ஒரு நாள் தோட்டத்தில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தான். கையில் ஒரு சிறிய கடப்பாறை இருந்தது. அதை வைத்து கொத்தி கொத்தி குழி வெட்டிக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒரே ஆச்சரியம். ஞானத்துக்கு என்ன ஆச்சு? என்று யோசித்துக்கொண்டே வந்து, மெதுவாக அவன் முதுகில் கை வைத்தார். ஞானம் திரும்பி பார்த்தான். அவன் கண்கள் சிவந்து இருந்தது. அழுகையும் பலம் ஆகியது.
"என்ன ஆச்சு ஞானம் ஏன் அழுவுற சொல்லு"
"என்னோட தங்க மீன் செத்துப் போச்சு சார்..."என்றான் விசும்பலுடன்
"அதுக்காக??? "
"அதுக்காக தான் நான் குழி வெட்டுறேன். புதைக்கிறதுக்கு" என்று சொல்லி அழுகையை தொடர்ந்தான்.
பக்கத்து வீட்டுக்காரர் குழியை பார்த்து விட்டு, மெதுவாக கேட்டார்
"சின்ன மீன் தானே அது, எதுக்கு 2 அடி அகலம், 2 அடி ஆழத்துக்கு குழி வெட்டிகிட்டு இருக்கே??"
ஞானம் திரும்பி பார்த்து...சொன்னான்..
"உங்க வீட்டு பூனை தான் என் மீனை சாப்பிட்டது, அடிச்சி கொன்னுட்டேன். அதுக்கு தான் பெரிய குழி"

Thursday, July 08, 2004

பிக்கினி கேப்டன்

நடுநிசி நேரம். மிகப்பெரிய போர் கப்பல் கடலை கிழித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கப்பலின் கேப்டன், பாதை காட்டும் திரையை கண்டு அதிர்ச்சி ஆனார். அங்கே ஏதோ ஒன்று அவர்கள் பாதையின் குறுக்கே இருந்தது. உடனே வயர்லெஸ் கருவி எடுத்து
" ஹலோ இது பிக்கினி போர் கப்பல் கேப்டன் பேசுறேன். நீ எங்க பாதையிலே இருக்கே. ஒழுங்கா வழி விட்டு விலகிடு. புரியுதா?" என்றார் மிரட்டும் தோரணையில். பதிலுக்கு எதிர்முனை,
" ஹலோ நீ யாரா இருந்தாலும் சரி, நான் வழி விட முடியாது, நீ உன் பாதையை மாத்திக்கோ" என்றது.
கேப்டன் கோபமாக,
" நீ விளையாட இது ஒண்ணும் சாதா கப்பல் இல்லை, போர் கப்பல், மரியாதையா வழி விட்டு போ" என்றார்.
" திருப்பியும் சொல்றேன், நீ யாரா இருந்தாலும் சரி, நான் வழி விட முடியாது, நீ உன் பாதையை மாத்திக்கோ" என்றது எதிர்முனை.
" உன் விதி இதுதான்னா யாராலும் மாத்த முடியாது.. தயாரா இரு இன்னும் 2 நிமிஷத்துல உன்னை தூள் தூள் ஆக்குறேன்." என்று போர் கப்பல் கேப்டன் திரும்பவும் எச்சரித்தார்.
அதற்கு மறுமுனை சிரித்தது.. பிறகு
"அடப்பாவி.. நல்லா கண்ணை துடைச்சிகிட்டு பாரு, இன்னும் 1 நிமிஷத்துல் நீ உன் பாதையை மாத்தாட்டி பாறை மேல வந்து முட்டிடுவே, ஏன்னா நான் லைட் ஹவுஸ் கண்ட்ரோல் ரூம்லே இருந்து பேசுறேன்"

Wednesday, July 07, 2004

ஹைடெக் நரகம்

மிக சிறந்த அறிவாளியான ஒரு எஞ்சினியர் இறந்து போனான். தவறுதலாக அவனை சொர்க்கத்துக்கு அனுப்புவதற்க்கு பதிலாக நரகத்துக்கு அனுப்பி விட்டார்கள். நரகத்திற்கு சென்ற அவன், அங்கே இருந்த வசதி குறைவுகளை கண்டு நொந்து போனான். தலைமை சைத்தானிடம் பேசி, கொஞ்சம் கொஞ்சமாக நரகத்தை மாற்றினான். எல்லா அறைகளும் குளிரூட்டப்பட்டன, தொலைபேசி இணைப்பு தரப்பட்டது, குளியல் தொட்டி முதல் இணையம் வரை அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. நரகம் முற்றிலும் மாறி ஒரு ஹைடெக் நகரமாக மாறியது.

ஒருநாள் சொர்க்கத்தில் இருந்து தலைமை சாத்தானுக்கு கடிதம் வந்தது.
"தவறுதலாக நரகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த எஞ்சினியரை உடனடியாக சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கவும்"
சாத்தானுக்கு கோபம் வந்து "எங்களால் அவரை அனுப்பி வைக்க முடியாது" என்று பதில் அனுப்பினார்.
அடுத்த நாளே சொர்க்கத்தில் இருந்து போன்
"ஹலோ சாத்தான், உடனே அவரை அனுப்பு, இல்லை இந்திரன் கோர்ட்டில் வழக்கு போட்டு விடுவோம்" என்று மிரட்டினர்.
அதற்கு சாத்தான் சிரி சிரி என்று சிரித்தான்.
" என்ன சாத்தான் சிரிக்கிறாய், கோர்ட்டுக்கு போனால் நீ தோற்று விடுவாய், மறந்து விடாதே" என்று மேலும் மிரட்டினர்.
சிரிப்பை நிறுத்திவிட்டு சாத்தான் சொன்னது
" அட முட்டாள் பசங்களா, நீங்க வக்கீலுக்கு எங்க போவீங்க?? எல்லாரும் இங்கே தானே இருக்காங்க"
என்று சொல்லிவிட்டு சிரிப்பதை தொடர்ந்தது..

Bayangara Jealous Party ( BJP )

பிஜேபி மேல இருந்த கொஞ்ச மதிப்பும் இப்போ அவங்க பண்ற வேலையிலே சுத்தமா போயிடிச்சி. தேர்தல் தோல்வி ரொம்ப சாதாரணமான விஷயம். இதை அவங்க இவ்வளோ பெரிய விஷயமா எடுத்துக்க கூடாது. தேர்தலுக்கு அப்புறம் பிஜேபி செஞ்ச ஒரு காரியமும் அவங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுக்கல. வித்தியாசமான கட்சி இதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தவங்க எல்லாரோட நினைப்புலேயும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க. தோல்வி வரும் போது துவண்டு விடாதவங்க தான் பெரிய மனுசங்க. அப்படி பார்த்தா பிஜேபிலே இப்போ யாரும் அப்படி இருக்குறதா தெரியலே. பிஜேபி திருந்தினா அதுக்கு எதிர்காலம் உண்டு. இல்லே... இல்லை..

Tuesday, July 06, 2004

என்ன யோசனை???

யார் யார் இப்பொழுது என்ன யோசனைலே இருப்பாங்க..
கமல் : இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு, நான் என்ன தலைப்பு வைக்கிறேனோ, அதிலேயே கை வைக்கிறான். பேசாம கமல்ராஜா, கமலாண்டி, கமல் லீலா'னு என் பேரையே வச்சிடப் போறேன்.

விஜய்காந்த் : தமிழ்'னு ஆரம்பிக்கிற மாதிரி கட்சிக்கு பேரு வச்சா நம்மாளுங்க எனக்கு ஓட்டு போடுவாங்களா???

ரஜினி : ஜக்குபாய் படத்தை சட்டசபை தேர்தல் வரும்போது ரிலீஸ் பண்ணினா, தனியா வாய்ஸ் குடுத்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.

கருணாநிதி : நான் வேண்டிகிட்டது வீணா போகல, பேரன் மந்திரி ஆயிட்டான், அவனை அமெரிக்கா பாலாஜி கோவில் போய் யாகம் செய்ய சொல்லணும், யாருக்கும் தெரியாம.

ஜெ : எல்லாரையும் இடம் மாத்தி போட்டாச்சு. பாக்கி இருக்குறது ஸ்கூல் போற பசங்க மட்டும் தான், கார்பரேசன் ஸ்கூல் பசங்களை கான்வென்ட்டுக்கும், கான்வென்ட் பசங்களை கார்பரேசன் ஸ்கூலுக்கு மாத்தி போட்டா அடுத்த பிரதமர் நான் தான்.

சசி : சே, எல்லா நகை கடையும் பார்த்தாச்சு, திருப்பி திருப்பி இருக்குற 10 கோடி டிசைன் தவிர வேற எதுவும் இல்லே..

லல்லு : ரயில்ல ஏ.சி கோச் கடைசில இருந்தா, நம்ம வழிப்பறி பசங்களுக்கு வசதியா இருக்குமோ?

வாஜ்பாய் : இந்த மோடி பச்சா, அந்த மோடி பாட்சா, பச்சா நல்லவன், பாட்சா கெட்டவன்னு சொல்லிப் பார்க்கலாம். நாளைக்கு எதிர்ப்பு வந்தா, இந்த மோடி பாட்சா, அந்த மோடியும் பாட்சா தான்னு சொன்னேன், பத்திரிக்கைகள் தப்பா போட்டுடிச்சின்னு சமாளிச்சிடலாம்.

அத்வானி : ரத யாத்திரை போய் கஷ்டப்பட்டு தோத்ததுக்கு, வாஜ்பாய் கூட சுப யாத்திரை போய் இருந்தா 4 வெளிநாடு பார்த்திருக்கலாம்.

Monday, July 05, 2004

ப்ளீஸ் கமல்

இதோ இப்போ தான் விஜய்காந்த் விவகாரம் முடிஞ்சது.. அடுத்து கமல்ஹாசனுக்கு வேட்டு வச்சிட்டாங்க. வசூல்ராஜா பேரு மாத்தணுமாம்.. டாக்டர்'ங்க எல்லாரையும் அசிங்கம் பண்ற மாதிரி இருக்காம். எப்படி சிரிக்கிறதுனு தெரியலே.

குத்தம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். வசூல்ராஜா பேரு குத்துது குடையுதுன்னா என்ன அர்த்தம்?. படத்தோட பேரு மட்டும் மாத்திட்டா, வசூல்ராஜா இல்லை, டாக்டர்ஸ் எல்லாரும் நல்லவங்கன்னு ஆயிடுமா? கிருஷ்ணசாமியை விடுங்கப்பா அவர் அரசியல் பண்றார், நம்ம டாக்டர் சங்கத்துக்கு எல்லாம் புத்தி எங்க போகுது. வெட்ககேடு.

ஒரு சினிமா தலைப்பு தான் டாக்டருங்களோட யோக்கியதையை சொல்லும்னா, கமல்ஹாசன் அவர்களே நீங்க உங்க படத்தோட பேரை மாத்திடுங்க. டாக்டர்ஸோட வெட்கம், மானம், ஈனம், கௌரவம், யோக்கியதை, சூடு, சொரணை எல்லாம் உங்களால தான் திருப்பி தர முடியும்னா, ப்ளீஸ் கமல்.....

நிலா சொந்தம்

ரொம்ப நாள் ஆசை, சொந்தமா ஒரு வீடு இல்லை நிலம் வாங்கணும்னு. ஆர்வமா இணையத்துல மேயும் போது பார்த்தேன். நிலா, செவ்வாய், புதன் இங்கே எல்லாம் நிலம் ரொம்ப சல்லிசா கிடைக்குதுன்னு. நிஜம் தான் 1 ஏக்கர் 20 பவுண்டு ( கிட்டதட்ட 1500 ரூபாய்) கிடைக்குது. 2 ஏக்கர் வாங்கினா 1 ஏக்கர் இனாமா வேற தர்றாங்களாம். பணம் குடுத்து வாங்கினா, நிலத்தோட மேப், அட்ச ரேகை, தீர்க்க ரேகை எல்லாம் குறிப்பிட்டு ஒரு சான்றிதழ் தருவாங்களாம். அவ்வளவு தான். இதுல ஒவ்வொரு இடத்தை பத்தியும் சிறு குறிப்பு வேற தந்து இருக்காங்க. புதன் ரொம்ப சூடானா கிரகமாம். 475* செல்சியஸ் வெப்பமாம். 40*க்கே இங்கே பொசுங்குறோம். படிக்க படிக்க நக்கலா தான் தெரிஞ்சது எனக்கு. இதுலே எத்தனை பேரு பணம் போட்டு ஏமாந்து இருக்காங்களோ? ஒரு வேளை இதெல்லாம் உண்மையா இருந்தா, நாமளும் ஒரு 10 ஏக்கர் வாங்கி போட்டா, நம்ம கொள்ளு பேரன் நிலாவுல போய் மண்ணுல வீடு கட்டி விளையாடுவானோ என்னவோ?

பார்த்திபன் மாதிரி எனக்கும் தோணுது
நிலா பூமிக்கு சொந்தம்
பூமி நமக்கு சொந்தம் - எனில்
நமக்கு நிலாவும் சொந்தம்

என்ன நான் சொல்றது?

Saturday, July 03, 2004

ராண்டி - நாட்டி - கதை

நாட்டியும், ராண்டியும் இணை பிரியா நண்பர்கள். ஒன்றாக சாப்பிடுவார்கள், ஒன்றாக படிப்பார்கள், ஒன்றாக விளையாடுவார்கள், ஒன்றாக தூங்குவார்கள். இருவரும் நன்றாக படித்து விமான ஓட்டுனர் பயிற்சிக்கு இணைந்தார்கள். பயிற்சியின் போது இருவரும் ஒரே விமானத்தில் ஒன்றாகவே பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். ஒரு நாள் இருவரும் தனியே விமானத்தை ஓட்டிச் சென்றனர். நாட்டிக்கு திடீரென விமானத்தை தலைகீழாக ஓட்டவேண்டும் என்று ஆவல் வந்தது. ராண்டியிடம் எதுவும் கூறாமல் சடாரென விமானத்தை தலைகீழாக திருப்பினான். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ராண்டி, தன் கட்டுப்பாட்டை இழந்து அவன் இருக்கையில் இருந்து விலகி கதவில் மோதி, அவன் மோதிய வேகத்தில் கதவும் திறந்து, வெளியே தூக்கி வீசப்பட்டான். நாட்டியும் செய்வதறியாது திகைத்துப் போனான்.
கீழே போய் கொண்டு இருந்த ராண்டி கத்தினான்..
"கம் நாட்டி கம்னாட்டி கம்னாட்டி, பிக் மி கம்னாட்டி" என்று கதறினான்.
"மை ராண்டி... மைராண்டி..ஓ.. மைராண்டி...." என்று நாட்டி, விமானத்தை கட்டுப்படுத்தி அவனை காப்பாற்ற முயன்றான்..........
இதுக்கு மேல கதை என்னாச்சுன்னு தெரியல.. :-))

ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டார்

ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டார்...
நம்ம விஜயகாந்த் தான்...
கட்சி இல்ல...
காது குத்தி விட..
மக்கள் மனசு தெரியணுமாம்..
ரசிகர்கள் ஆதரவு தெரியணுமாம்..
காலம் நேரம் பொருந்தி வரணுமாம்
அப்புற்ற்ற்ற்ற்ற்ற்ற்றம்....தா.....ன்...
கட்சி ஆரம்பிப்பாராம்..
இதுக்கா இவ்வளோ அலம்பல் விட்டாங்கோ??..
எப்போ மக்கள் மனசு தெரிஞ்சி..
எப்போ காலம் நேரம் பொருந்தி.....
வேலையை பாருங்கப்பா...

Friday, July 02, 2004

இனிய இணைய நண்பர்களே

என்னோட பதிவை நாலஞ்சி பேர் படிக்கிறாங்கன்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க எல்லாருக்கும் என்னோட நன்றி. நான் தினமும் 10, 15 பேரோட வலைபதிவு போய் படிக்கிறேன். 6 மாசமா படிச்சிட்டு தான் இருக்கேன், "பரி" பக்கத்துல இருந்து தான் வலை பதிவு போடுறது எப்படின்னு கத்துகிட்டேன். அப்புறம் தான் சொந்தமா ஆரம்பிச்சேன். உண்மையாய் சொன்னா, வலைபதிவு தொடங்குறது இலவசம்னு தெரிஞ்சதும் தான் தொடங்கினேன் :-))

பரி, குசும்பன், அருண் வைத்தியனாதன், டுபுக்கு, ரங்கா, பாரா, கிருபா, கொஸப்பேட்டை, இட்லி வடை, பாலாஜி, ராசா மற்றும் சிலரது வலைபதிவுகளை வாசிப்பேன். நல்லா இருக்கு, நல்லா பொழுது போகுது, பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட மாதிரி இருக்கு.

இப்போ நான் இருக்குறது பிரிஸ்டல் - அடுத்த மாசம் இந்தியா வந்துடுவேன். அப்புறம் தான் அங்கே வீடு பார்த்து, இணைய இணைப்பு வாங்கி.. செட்டில் ஆகணும். அந்த நேரத்துலே, அலைச்சல் காரணமா ஒரு சில நாட்கள் என்னால் வலை பதியாம போக முடியலாம், எனவே என் இனிய இணைய நண்பர்களே, நான் காணவில்லைனு மட்டும் நினைச்சிடாதீங்க.

நன்றி.

Thursday, July 01, 2004

சே சே சே சே

சே எல்லாரையும் திட்டி திட்டி பதிவு எழுதுறது ஒரு பொழப்பான்னு மனசுக்கு பட்டுச்சு. அதுனால ஒரு மாறுதலுக்கு யாரையாச்சும் பாராட்டலாம்னு நினைக்கிறேன் இல்லை யோசிக்கிறேன் இல்லை தெரியல... :-(

கு.க -குவா - ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

தமிழ் செய்திதாள்கள் இணையத்தில் கிடைப்பது ரொம்ப சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தான். ஆனால் சில நேரத்தில் படிப்பவர்களை எரிச்சல் படுத்தி விடுகிறார்கள். அதை தான் தாங்க முடிவதில்லை.

"கு.க செய்த பெண்ணுக்கு குவா குவா" தினமலர் ஜூன் 29

செய்திக்கு கொடுக்கும் தலைப்பு. இது செய்தியாய் படிப்பதற்கா? இல்லை தலைப்பை படித்து சிரிப்பதற்கா? சிரிப்பு பகுதியை எல்லாம் தனியாய் எழுதலாம் இல்லையா?
தினமலர் தலைப்பு பெரும்பாலும் இந்த மாதிரி தான் இருக்கிறது. பாதி தமிழ், பாதி ஆங்கிலம், பாதி ஹிந்தி கலந்து கவிதை மாதிரி தலைப்பு கொடுக்கிறார்களாம். கஷ்டம் :-(

எதனால் இது போல் தலைப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
"குடும்ப கட்டுபாடு செய்யப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது" என்று சாதாரணமாக குடுத்தால் என்ன? தலைப்பில் கவர்ச்சி சேர்த்து என்ன சாதிக்க போகிறார்கள். எதையாவது விற்க வேண்டும் என்றால் தலைப்பில் கவர்ச்சி சேர்க்கலாம். அதை விடுத்து குழந்தை பெற்ற அம்மாவுக்கு எதுக்குய்யா விளம்பரம்? தினமலர் கொஞ்சம் திருந்தினால் நன்றாக இருக்கும்.

திருந்தா விட்டால் இந்த மாதிரியும் கொடுக்கலாம்.

- "ஹிப்" நடிகைக்கு "ஹிப் பெய்ன்" காரணம் யார் - நமது சிறப்பு நிருபர்.
- பார்ட்டி கொடுக்கும் பேமிலியின் பெரிய பேட்டிக்கு(ஹிந்தி) முட்டிக்கு கீழ் கட்டி.
- திவால் ஆன குணால்
- ரமேஷ் கார்ஸில் போட்ட பணம் அபேஸ்.


அடுத்து தினகரன் பத்திரிக்கையின் ஸ்டைல்
"நேற்று மன்மோகன்சிங் கருணாநிதியை சந்தித்தார் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இன்றும் சந்தித்தார்"
"அல்லவா?" போடாமல் அவர்கள் செய்தி போடுவதில்லை. தினமும் எத்தனை "அல்லவா" போடுகிறார்கள் என்று போட்டியே வைக்கலாம்.

எனக்கு தெரிந்து தினமணி தான் ஒழுங்கான தலைப்பும், உருப்படியான செய்தியும் தருகிறார்கள்.

(பி - கு 1) ஆரம்பிச்சிட்டான்யா பி-கு குடுக்க.. :-))
(பி - கு 2) பி-கு லே எழுத ஒண்ணும் இல்லேன்னு பி-கு குடுத்திருக்கேன்.:-)