தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, February 11, 2006

புஷ் பூமி

குளிரும் மாதத்தில் கடும் பனி காலத்தில் நான் நாஷுவாவில் காலடி வைத்திருக்கிறேன். மாநகராட்சியும் இல்லாமல், நகராட்சியிலும் சேராமல், ஊராட்சிக்கு ஒரு படி மேலே இருக்கிறது. சுருக்கமாய் மூன்றும் கெட்டான் ஊர்.

கார் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்பது போல வாழ்க்கை. கார் வாங்கவும் வழி இல்லை. சிங்காரவேலன் கமல் மாதிரி "..ஆயிரம் வேலை.....தவிடு வைக்கணும், தண்ணி காட்டணும்... எஸ் எஸ் என் நம்பர் வாங்கணும், பேங்க் அகௌண்ட் ஓபன் பண்ணனும், இன்ஷூரன்ஸ் வாங்கணும், நம்பர் ப்ளேட் வாங்கணும்...ணும் ணும் ணும்.. " என்று நீள்கிறது பட்டியல்.

இன்றும் நாளையும் இங்கே கடும் பனி பொழிவு இருக்கும் என்று வானிலை எச்சரிக்கை சொல்கிறது. நம்ம ஊருக்கு ஒரு ரமணன் என்றால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். பார்போம் இவர்களின் வாக்கு பலிக்கிறதா என்று.

தமிழ் வலைபதிவுலகம் பிரம்மாண்டமாய் வளர்ந்து வருகிறது. அதை எல்லாம் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதையும் மீறி என்ன எழுதுவது என்று சோம்பலாகவும் இருக்கிறது.

இந்த பின்னூட்ட வளர்ச்சி கலையில் எனக்கு தேர்ச்சி பற்றாது. அதில் குடுத்து இருந்த ஒரு விதிமுறையையும் நான் பின்பற்றியதில்லை (சோம்பேறிதனமோ?). இருப்பினும் அந்த விதிமுறைகளை நான் ரசிக்கிறேன்.

யாராவது நம் எழுத்தை படிப்பார்களா என்று தான் நிறைய பேர் எழுதுகிறார்கள். படிக்கப்படுகிறார்கள், ரசிக்கப்படுகிறார்கள், சில சமயம் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி நம் எழுத்தை நாமே படிப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது (எனக்கு). இந்த பதிவை வேறு மாதிரி எழுதி இருக்கலாம், அப்படி மாற்றி சொல்லி இருக்கலாம் என்றெல்லாம், நம் பதிவை மீண்டும் மீண்டும் படிக்கும் போது தோன்றும். அது நல்லதாக தான் படுகிறது. தப்புகள் இருந்திருந்தால் திருத்திக்கொள்ள தோணுமே (அப்பாடி என்னோட கேப்ஷன் :-) வந்திருச்சி)

சரி. இது என்ன புஷ் பூமி என்று தலைப்பு?? காரணம் இருக்கிறது. இப்போதுதான் நான் முதன் முறையாக அமெரிக்கா வருகிறேன். அதனால் நாட்டின் தலைவருக்கு ஒரு மரியாதை தர வேண்டாமா? அதற்கு தான்.. அவர் ஆளும் நாட்டை அவர் பேரிலேயே அழைப்பது(ஆட்சேபங்கள் வரவேற்கப்படுகின்றன).

பின் குறிப்பு : நான் மீண்டும் இந்தியா போகும் போது அது "அன்னை" நாடாக தான் இருக்கும் என்று நம்புகிறேன். ("அம்மா" ஏதாவது செஞ்சி "அன்னை"க்கு பதிலா அவங்க இருந்தா? அம்மா நாடு அழைக்கிறது ந்னு மீண்டும் பதிய வேண்டியது தான். - அம்மா கதை இன்னும் 3 மாசத்துல தெரிஞ்சிடும்.)