தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, October 11, 2006

ஒரு அழகிய திகில் இரவு - தொடர்ச்சி..

ஒரு அழகிய திகில் இரவு - 1
என் கழுத்தில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததும், உயிர் துடிக்க ஆரம்பித்தது, உயிர் பிரியும் பயத்தில் உடல் துடிக்கத்தொடங்கியது. பலம் பெருகியது. திமிறி எழுந்தேன். 'வால்நட் கிரீக்' என்றது ஸ்பீக்கர் குரல். கனவு. நான் கண்ட அத்தனையும் கனவு. அடுத்த ஸ்டாப் என்னுடையது. சுதாரிக்க முயன்றேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. திரும்பி அருகில் பார்த்தேன். அங்கே பாதிரியார் இல்லை. திடுக்கிட்டு சன்னல் வழியே பார்த்தால், அவர் அங்கே நின்று கொண்டு எனக்கு டாடா சொல்லி கொண்டிருந்தார். ரயில் வேகமாய் ஸ்டேசன் கடந்தது. உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. ஒரே குழப்பம். ரயில் ஏறியது, பாதிரியார் அருகில் அமர்ந்தது அனைத்தும் நிஜம். பாதிரியார் என் ரத்தம் குடித்தது கனவு. கனவா? ஒருவேளை அந்த ஆவி கழுத்து வழியாக என்னுள்ளே நுழைந்து விட்டதோ? இதய துடிப்பு எகிறியது.

சந்தேகமாய் கழுத்தை தொட்டுப்பார்த்தேன். விரல்களில் பிசுபிசுப்பாய் ஒரு திரவம். படபடக்கும் இதயம். அதன் துடிப்பு நான்கு மடங்கானது. விரல்களை எடுத்து பார்த்தேன். அது ரத்தம். என் ரத்தம். வாய் வழியே இதயம் வெளியே வந்து விடும் போல இருந்தது. "ப்ளிஷண்ட் ஹில்ஸ்" என்றது ஸ்பீக்கர் குரல். அவசரமாய் எழுந்தேன். கதவு மூடும் முன் வெளியே வந்தேன். ஓடினேன். யாருக்கோ பயந்து ஓடினேன். கண்களில் கண்ணீர். என்னுள்ளே யாரோ? எப்போது வெளிவந்து என்னை என்ன செய்வானோ? என்று ஏகப்பட்ட கேள்விகள். கடவுளே ஏன் இந்த சோதனை என்று வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.

கண் விழித்த போது விடிந்திருந்தது. வாசலிலேயே படுத்திருந்திருக்கிறேன். இப்படி ஒருமுறை கூட ஆனதில்லை. நான் நானாக இல்லாத போது எப்படி தூங்கி இருந்து என்ன? வெளிச்சத்தின் காரணமாக பயம் கொஞ்சம் தெளிந்திருந்தது. குளித்து தயாராகி அலுவலகம் கிளம்பினேன். அதே ரயில், ஆனால் இப்போது ஜன நெருக்கடி. ஆவி பயம் இல்லை எனக்கு. எனக்குள்ளேயே அது இருக்கும் போது தனியாக அதற்காக எதற்கு பயம்? விரக்தியான சிரிப்பு மட்டும் எனக்குள் எழுந்தது. அலுவலகத்தில் அனைவரும் கேட்டார்கள். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று. எப்படி சொல்வது நான் மனுஷி அல்ல. பேய் புகுந்த வீடு என் உடம்பு என்று. அலுவலகத்தில் யாரிடம் பேசவும் எனக்கு பயமாகவே இருந்தது. தன்னிலை மறந்து என்னுள் இருக்கும் ஆவிக்கு இடம் குடுத்து யாரையாவது ஏதாவது செய்து விடுவேனோ என்று பயம். தனிமை தேவை பட்டது. ஒதுங்கியே இருந்தேன்.

இன்றும் நேரம் ஆகி விட்டது. அலுவலகம் விட்டு வெளியே வந்தேன். இருள். இருளை பார்த்தால் பயமாக தான் இருக்கிறது. ஆவி கொண்டவள் என்றாலும் நான் ஒரு பெண். பயம் இருக்கத்தான் செய்தது. இன்று ரயிலுக்கு என்னை போல் பலரும் காத்து கொண்டிருந்தனர். ரயில் வந்ததும் ஏறிக் கொண்டேன். கால்கள் தானாய் நடந்து காலியாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தேன். கண்ணை மூடலாம் என்று நினைத்து சாய்ந்த போது, பக்கத்தில் ஒரு குரல்
"ஹலோ"
திரும்பினேன். அலற நினைத்து அடக்கி கொண்டேன். அதே பாதிரியார். இது பிரமையா இல்லை நிஜமா? யாரிடம் கேட்ப்பது என்று புரியவில்லை. அதற்குள் அதே குரல் மீண்டும்
"நேற்று மாதிரி தூங்கிவிடாதீர்கள். அப்புறம் என் பாடு திண்டாட்டம்" என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன" என்றேன்.
லேசாய் சிரித்து விட்டு தொடர்ந்தார்.
"நேற்று நீங்கள் நன்கு தூங்கிவிட்டீர்கள். நான் இறங்கும் இடம் வந்ததும் உங்களை எழுப்பினேன். ஆனால் நீங்கள் அசைந்து கொடுப்பதாய் இல்லை.. கடைசியில் என்ன செய்தேன் தெரியுமா?" என்று நிறுத்தினார். கேள்வியாய் அவரை பார்த்தேன்.
"சீட்டின் மீது ஏறி, முன் சீட்டில் தாவி இறங்கினேன்.. ஹ ஹ ஹ" என்று சிரித்தார்.
எனக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. ஓ அதனால் தான் நான் கண் விழித்த போது அவர் வெளியே இருந்தாரா. என் பயம் கொஞ்சம் விலகியது.. வழிசலாய் முறுவலித்தேன். அவர் தொடர்ந்தார்.
"நீங்கள் தூங்குவதாய் இருந்தால், இதோ ஜன்னல் ஓர சீட். இதில் தூங்குங்கள். வழி விடுகிறேன். இன்றும் என்னால் தாவ முடியாது" என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.

எனக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. அப்படி என்றால் ரத்தம். கழுத்தை மீண்டும் தடவி பார்த்தேன். ரத்தம் வந்த இடத்தில் இடறியது. பாதிரியார் தாவியது உண்மை என்றால் இந்த ரத்தத்திற்க்கு காரணம்?. கழுத்தில் இருந்த என் தங்க செயினை தடவிப் பார்த்தேன். தமிழ் பெண்களின் ஆதர்ஷ "ஊக்கு" அங்கே இல்லை. எல்லாம் புரிந்து நான் சிரிக்க ஆரம்பித்த போது பாதிரியார் அவருடைய தாவலை நினைத்து சிரிப்பதாக நினைத்து கொண்டு அவரும் என் சிரிப்பில் பங்கு கொண்டார்.
*****

4 Comments:

  • At Thu Oct 12, 02:04:00 AM EDT, Blogger Lakshman said…

    nalla kathai and good karpanai too.

    Walnut creek & Pleasant hill.. ada namma area pakkathula irukkira blogger. athuvum tamil blogger. Nice to know.

    - lakshman (Fremont)

     
  • At Thu Oct 12, 06:12:00 PM EDT, Blogger Gyanadevan said…

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மண்.

     
  • At Fri Dec 26, 05:11:00 AM EST, Blogger ரவி said…

    கதை முடிஞ்சுருச்சா ????

    அமெரிக்காவுலும் ஊக்கு மேட்டரா ?

    தாலி செண்டியை நம்மாளுங்க விடவே மாட்டாங்க :))))

     
  • At Wed Apr 14, 07:19:00 AM EDT, Blogger www.bogy.in said…

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

     

Post a Comment

<< Home