தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, July 28, 2004

மழை மல்லிகை

அது இருபாலர் படிக்கும் பள்ளி. எட்டாம் வகுப்புக்கு புதிதாய் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவருக்கு அது முதல் நாள். எனவே வகுப்புக்குள் சென்று
"என் அன்பு மாணவ மாணவியரே, என் பெயர் சுப்புலட்சுமி, நான் தான் இனி உங்கள் வகுப்பு ஆசிரியை. நீங்கள் எல்லோரும் உங்கள் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை சொல்லுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக எனக்கு பாரதியார் கவிதைகள் பிடிக்கும், பூரி பிடிக்கும், பூக்கள் பிடிக்கும். இது போல் உங்கள் விருப்பம் எதுவோ அதை இங்கே சொல்ல வேண்டும். சரியா?" என்று முடித்தார்

" சரி டீச்சர்.. " என்றனர் கோரஸாக.

" நல்ல பசங்க.. சரி, நான் வருகைபதிவு பார்த்து கூப்பிடுவேன், அவங்க எந்திரிச்சி, அறிமுகம் செஞ்சிக்கணும். சரியா?" என்றார்.

பிறகு வருகைபதிவை திறந்து வாசித்தார்.
" அனுபமா..."

" எஸ் டீச்சர்.."

" சொல்லு அனுபமா, உன்னை பத்தி சொல்லு" என்றார் ஆசிரியர் அன்புடன்.

" என் பெயர் அனுபமா. எனக்கு ரோஜாப்பூ பிடிக்கும், அப்புறம் இட்லி... அப்புறம்.. " என்று சொல்லிவிட்டு ..

" அவ்வளவு தான் டீச்சர்" என்று உட்கார்ந்து விட்டாள்.

" சமத்து அனுபமா.. அடுத்து அன்புசெல்வம்"

அன்புசெல்வம் கடைசி பெஞ்சில் இருந்து எழுந்து நின்றான்.

" டீச்சர் எனக்கு மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் " என்றான்.

ஒரு நிமிடம் டீச்சர் அசந்து போனார். இவ்வளவு சின்ன பையன் மனதில் இப்படி ஒரு ரசனையா, இவன் கட்டாயம் பிற்காலத்தில் பெரிய கவிஞனாக வருவான் என்று நினைத்து உள்ளுக்குள் சிலிர்த்து போனார்.

"வித்தியாசமான ரசனை உனக்கு அன்புசெல்வம். குட்" என்று பாராட்டிவிட்டு,

 "அடுத்து... சந்திரிகா" என்றார்.

" எனக்கு தோசை பிடிக்கும் டீச்சர், ரஜினி காந்த் பிடிக்கும் டீச்சர்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தாள்.

" சந்திரசேகர்" என்று அழைத்தார்

" டீச்சர்.. எனக்கும் மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று சொல்லி அமர்ந்தான். ஆசிரியர் நினைத்தார், அவனுக்கு "குட்" சொன்னதால் தான் இவனும் அதே போல் சொல்கிறான் என்று. எனவே ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அடுத்த பெயரை அழைத்தார்.

" தன லட்சுமி.."

" டீச்சர் எனக்கு பட்டாசு பிடிக்கும், திருக்குறள் பிடிக்கும்" என்று அமர்ந்தாள்.

" வெரி குட், திருக்குறள் பிடிக்குமா உனக்கு? நல்லது தன லட்சுமி" என்று பாராட்டிவிட்டு அடுத்த பெயரை அழத்தார்

"தன சேகர்"

தன சேகர் எழுந்து
"எனக்கு கொட்டும் மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்றான்.

இப்போது ஆசிரியருக்கும் லேசாக எரிச்சல் வந்தது. என்ன இந்த பசங்க, ஒரு தடவை குட் சொன்னா எல்லாரும் அதையே சொல்லுறாங்க என்று. இருந்தும் ஒன்றும் சொல்லாமல் அடுத்தடுத்து பெயர்களை அழைத்துக் கொண்டே போனார்.

" இளங்கோ"

" மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.

" கமலா "

" குதிரை, பூனை அப்புறம் கொழுக்கட்டை பிடிக்கும் டீச்சர்" என்றாள்.

" லாவண்யா "

" பிள்ளையார் அப்புறம் லட்டு பிடிக்கும் டீச்சர்" என்றாள்.

"லட்சுமணன்"

" மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.

" மதிவாணன் "

" மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.ஆசிரியரின் பொறுமை இப்போது எல்லை கடந்து இருந்தது. எல்லா பசங்களும் ஒரே மாதிரி சொல்லுறாங்க என்று வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். எனவே

"அடுத்த ஆள் யார்?? நீங்களே வரிசை படி உங்க பேர் சொல்லி, விருப்பத்தை சொல்லி அறிமுகம் பண்ணிகோங்க" என்று சொல்லிவிட்டு கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்தார்.

" என் பேர் மதியரசன் டீச்சர்... எனக்கு மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும்" என்று அமர்ந்தான்..

ஆசிரியர், உச்சபட்ச கோபத்தில் நிமிர்ந்து பார்தார்.. அடுத்து இன்னொருவன்

" என் பேர் மதுகுமார் டீச்சர். எனக்கு கொட்டும் மழை அல்லது சாரல் மழையில் நனையும் மல்லிகை பிடிக்கும் டீச்சர்" என்று அமர்ந்தான்.

கோபத்தை அடக்க முடியாமல், அறிமுக வகுப்பை நிறுத்தி விடும் நோக்கில் டீச்சர் தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.அப்போது, அடுத்ததாக ஒரு அழகான பெண் எழுந்து நின்றாள்

" டீச்சர் என் பெயர் மல்லிகை. எனக்கு மழையில் சொட்ட சொட்ட நனைய பிடிக்கும்" என்று சொல்லி விட்டு அமர்ந்தாள்.

ஆசிரியர் மயக்கம் போட்டு விழுந்தார்.

2 Comments:

Post a Comment

<< Home