தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, August 17, 2004

ஒரு ரயில் பயணமும், பிஸ்கட் பாக்கெட்டும்.. - PART - 1

இந்தியாவின் மற்ற பெரிய ஸ்டேசன்களை போலவே சென்னை சென்ட்ரல் அன்றும் நிரம்பிவழிந்துக் கொண்டிருந்தது. மொத்த மக்கள் தொகையும் அங்கே வந்து குவிந்தது போல்அத்தனை தலைகள். அவற்றுக்கு நடுவே புகுந்து, பிழியப்பட்டு, நைந்து, வேர்வைவெளியேற, சேலம் செல்லும் விரைவு புகையில்லா வண்டியை கண்டுபிடித்தேன். நீண்ட வால்போல் அத்தனை பெட்டிகளை இணைத்துக்கொண்டு, ஒரு சத்தமும் இடாமல் அமைதியாய்நின்று கொண்டிருந்தது.

உடம்பின் வேர்வையில் காற்று பட்டு அதை குளிர செய்தது. உடலும் அதனால்அங்கங்கே குளிர்ந்தது. சன்னலோர இடம் தேடி கடைசி வரை ஒரு கால்நடைபயணம். வீணாகவில்லை அற்புதமாய் ஒரு இடம் கிடைத்தது. "கண்டேன் சீதையை"என்ற அனுமன் போல் "கண்டேன் சீட்டினை" என்று மனதிற்க்குள் கூவிக்கொண்டு அங்கே சென்றுஅமர்ந்தேன். உடல் "கச கச" என்றிருந்தது. சட்டையை லேசாய் தூக்கி விட்டுசன்னலை நெருக்கிக் கொண்டு அமர்ந்தேன்.

ஏசி'யா அது?? சாதாரண சன்னல் தானே! என் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறுகாற்று வரவில்லை. காற்றில் ஈரம் தென்பட்டால் எவனது துப்பியது என்றுஎட்டிப்பார்க்கத் தோன்றியது. கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்தமர்ந்தேன். "ஷ் ஷ் ஷ் ஷ்அப்பாடா" என்றவாறு என்னைப்போல் ஒரு ஜீவன் பழைய ரயில் எஞ்சின் சத்தம் போல்மூச்சு விட்டுக்கொண்டே வந்தது.. இல்லை வந்தார். சினேகமாய் புன்னகைத்தார்.நானும் சிரித்தேன்.

" சென்னையில் இருந்து கோயமுத்தூர் நோக்கிச் செல்லும்....... ".என்ற தேனறிவிப்பு என்காதில் தேனாய் தான் பாய்ந்தது... குணா கமல் போல "வரும் வரும் வரும் வரும்..காத்து வரும் " என்று மனம் முனகியது. அறிவிப்பு முடிந்த போது உடம்பை லேசாய்உதறிக்கொண்டு அந்த பெரிய இரும்பு பாம்பு சென்னையில் இருந்து புறப்பட்டது.

"என்ன சார் சேலமா" என்று ஆரம்பித்தார் எதிரே இருந்தவர்... இப்போது அவர்தனது ரயில் எஞ்சினை அணைத்து விட்டார் போலும், சாதரணமாக பேசினார்.கடந்த 30 நிமிடமாக அவரது "ஷ் ஷ் ஷ்" சத்தம் கேட்டு எனக்கு எந்த ரயிலில்போகிறோம் என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒரு சாதாரண மனிதன் இப்படி"ஷ்ஷ்...." பண்ண முடியுமா என்று குழப்பம் ஆகி, நானே 2 முறை வாசல் வரை சென்று"ஷ்......" செய்து பார்த்தேன்... ம்ம்ஹூம்.. அது என் காதுக்கே எட்டவில்லை. மேல்மூச்சு கீழ் மூச்சு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே மூச்சாக விட்டு இப்போதுதான் சாதா மூச்சுக்கு வந்து என்னிடம் இந்த கேள்வியை கேட்டார்.

"ஆமா" என்றேன் ஒரே வார்த்தையில்.. ஏனோ அந்த ஆளை எனக்கு பிடிக்கவில்லை.

"ஏதாச்சும் புக்ஸ் வச்சி இருக்கீங்களா சார்" என்றார் அணைந்து போன ரயில்எஞ்சின்.
இல்லை என்பது போல் தலையாட்டினேன்

"பரவாயில்லை என்கிட்ட குமுதம், கல்கி, ஜூனியர் விகடன் இருக்கு, நீங்கஏதாச்சும் ஒண்ணு படிங்க நான் ஒண்ணு படிக்கிறேன்" என்று கல்கியை நீட்டினார்.

திடுக்கென்று காலையில் படித்த தினத்தந்தி ஞாபகம் வந்து தொலைத்தது.
ரயிலில் திருடும் பெரும்பாலோர், சக பயணிகளிடம் மிகுந்த பாசம் உள்ளவராக நடிப்பர்... புதியவர்களின் நட்பை உடனே நம்ப வேண்டாம்...

"என்ன சார் யோசனை? கல்கி வேண்டாமா?" ஷ்ஷின் குரல்

"ம்ம் ம்ம்க் வேண்டாம்..." என்று மறுத்தேன்..

"அப்போ ஜூனியர் விகடன் படிங்க.. இந்தாங்க" என்றார்..

நீங்கள் கேட்க்காமலே உங்களுக்கு தேவையானதை தருவதை போல் தருவார்.அவரது பேச்சில் உதவியில் மயங்கி விட வேண்டாம்.

"என்ன சார், எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா என்ன?? சூப்பர் பாஸ்ட் சார்நீங்க. நேத்து தான் வந்துச்சி, இன்னைக்கி நீங்க படிச்சி முடிச்சிஇருக்கீங்க.. சரி விடுங்க புத்தகம் வேண்டாம், நாம கொஞ்ச நேரம் பேசிகிட்டுஇருக்கலாம் சார்"

உங்களுக்கு மிக நெருக்கமானவராக காட்டிக்கொள்ள முனைவார். நீங்கள்சாதாரணமாக பேசும் பேச்சில் இருந்து உங்களை அறியாமல் சில முக்கியமானவிவரங்களை எடுத்து தனக்கும் அது தெரியும் என்பது போல் கட்டிக்கொள்வார். எனவே இவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நன்று.
தினத்தந்தி அடிக்கடி குறுக்கே வந்து ஆலோசனை சொல்லியது.

"இல்லீங்க எனக்கு தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்குறேன்.. அப்புறம் பேசலாம்"என்றேன்.

என்னையே உற்றுப்பார்த்த அந்த ரயில் எஞ்சின்..

"சரி தூங்குங்க.. பார்த்தா ரொம்ப களைப்பா தெரியிரீங்க.. கவலைபடாதீங்க. தூங்குங்க.. உங்க பொட்டி எது எதுன்னு சொல்லுங்க, நான் வேணாபார்த்துக்குறேன்" என்றார்..

திடீரென்று அடி வயிற்றில் அமிலம் சுரந்தது... ஆஹா ஒரு பக்காத் திருடன் நம்முன்னாடி உட்காந்து இருக்கானே.. எப்படி பிடிப்பது என்று மனம் பர பரக்கஆரம்பித்தது.. கண் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது..

"என்ன சார், கண்ணை மூட முடியலியா? வெளிச்சம் இருந்தா எப்படி சார் தூக்கம்வரும், கைகுட்டை வச்சி இருந்தா அதை எடுத்து கண்ணை கட்டிகங்க" என்றார்.

'நான் என்ன இளிச்சவாயனாடா?, நான் கண்ணை கட்டிகிட்டா நீ அடுத்த ஸ்டேஸன்வரும் போது எஸ்கேப் ஆயிடுவே, அப்புறம் தினத்தந்திலே என் பேட்டி + போட்டோ போட்டு..இன்று ஏமாந்தவர்ன்னு வரும்.. ம்க்கும். நானாவது ஏமாற்றதாவது... ' என்றுனினைத்துக் கொண்டிருக்கும் போது..

"என்ன சார் யோசனை, நீங்க கண்ணை கட்டிகிட்டு இருக்கும் போது உங்க பொட்டியைதூக்கிட்டு போயிடுவேன்னு பயப்படுறீங்களா?" என்று சொல்லி ஸ்டார்டிங் ட்ரபிள் ஆனரயில் எஞ்சின் மாதிரி "ஹஸ் ஹ்ச் ஸ்க் அஷ்க்ஸ்ஸ்ஸ் ஹஸ்க் ஹஸ்க்" என்று சிரித்தார்

"இல்லீங்க" என்றேன் ரொம்ப அப்பாவியாய்.

"பயப்படாதீங்க .. நான் நல்லவன் தான்.. தைரியமா தூங்குங்க.. நான்பார்த்துக்குறேன்" என்றார்

அந்த ஆள் அப்படி சொல்ல சொல்ல எனக்கு பயம் அதிகம் ஆனது.. இந்த கம்பார்ட்மெண்டில்வேறு கூட்டமே இல்லை.. என்ன செய்வது என்று முழித்தேன்.. இல்லை கண்ணை மூடிக்கொண்டு,பெட்டி மேல் ஒரு கை வைத்துக்கொண்டு யோசித்தேன்.

ரயில் "தடக் தடக்" என்று ஒரே சீராய் போய்க் கொண்டிருதது.. பெட்டி லேசாய்இழுபடுவது போல் ஒரு உணர்ச்சி.. மெல்ல கண் இமை திறந்து பார்த்தேன்... முடிவுசெய்துவிட்டேன்.. அவன் தான்.. திருடன் தான் அவன்.. நிச்சயம்.... பெட்டியை லேசாய்இழுக்க பார்த்துக் கொண்டிருந்தான்..

தொடரும் ......

0 Comments:

Post a Comment

<< Home