தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, August 09, 2004

"வலி" - PART - 1

ராஜாவின் "உரிமை கேட்கும் ஓரினம்" பற்றிய பதிவை படித்தேன். இது என் சிறு வயது நினைவினை ஞாபகமூட்டியது. இந்த பதிவில் நான் சொல்லப்போகும் சம்பவம் நிஜம். நெஞ்சை சுடும். இந்த வடுவை சுமந்து கொண்டு என் கண்படா இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பனின் பெயரினை மட்டும் மாற்றி இருக்கிறேன். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற அவன் வார்த்தையை மீறி நான் இதை எழுதுகிறேன். அவன் என்னை மன்னிக்கட்டும்.

திருச்சியில் தான் நான் வளர்ந்தேன். 1995ம் வருடம். என் நண்பன் வசந்த் என்னை விட 2 வயது பெரியவன். ஆனால் என்னை விட 1 வகுப்பு தான் அதிகம் படித்தான். அதாவது நான் +1 அவன் +2. ஒன்றாக தான் பள்ளிக்கு போவோம். அந்த வயதினருக்கு தேவையான துடுக்கு தனம், அரும்பு மீசை, குறும்பு எல்லாம் இருந்தது. எனக்கும் அவனுக்கும் சில வித்தியாசங்கள் இருந்தது. நான் வளர்ந்த சூழ்நிலை வேறு. நான் ஏழை நடுத்தர குடும்ப பிண்ணனியில் வளர்ந்தேன். காலேஜ் முடித்த பின் தான் நான் வேலைக்கு போனேன். ஆனால் அவன் அப்படி இல்லை.

அவன் குடும்பம் ஏழை. அவன் அப்பா ஒரு சாதாரண கடையில் சாதாரண குமாஸ்தா.எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியாமல் அவனை கல் பட்டறைக்கு அனுப்பி வைத்தனர். எட்டாம் வகுப்பு முடிந்து அந்த கோடை விடுமுறையில் உழைத்து சம்பாதித்த பணத்தை மிச்சம் செய்து 9 ம் வகுப்புக்கு பணம் கட்டினான். அதன் பிறகு, பள்ளி முடிந்து வேலைக்கு போய் சம்பாதித்து அவனுக்கு தேவையானவற்றை வாங்கி படித்தான். இப்படித்தான் அவன் 9,10 11ம் வகுப்புகளை கடந்தான். படிப்பில் பெரிய சூரப்புலி இல்லை என்றாலும் 60% மதிப்பெண்கள் வாங்குவான். இப்படியாக போய் கொண்டிருந்த அவன் வாழ்க்கை, அவன் +2 படிக்கும் போது என்னால் (நானும் ஒரு காரணம்) ஒரு அடி விழுந்தது.

எங்களின் குடும்பத்திற்க்கு தெரிந்த ஒரு சேட் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தது. தினமும் பூஜை செய்யாமல் சாப்பிட மாட்டார். அவருக்கு வைரக்கல் வியாபாரம். சொல்ல வேண்டாம், நிறைய சேர்த்து வைத்து இருந்தார். அவருக்கு 2 பையன்கள், 2 பெண்கள். அழகான மனைவி. அவர் நெற்றியில் இருக்கும் கலர் கலர் குங்குமம், வார்த்தைக்கு வார்த்தை கடவுளை அழைக்கும் பாங்கு, அவர் மீது மிக மிக நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கி வைத்திருந்தது.

ஒருமுறை, அவர் வீட்டுக்கு என்னை அழைத்தார். நான் போன போது என்னிடம், என் கடையில் வேலை செய்ய ஒரு நல்ல பையன் வேண்டும் என்றார். நல்ல சம்பளம் கொடுப்பதாகவும், படிக்கவும் உதவி செய்வதாகவும் கூறினார். எனக்கு உடனே வசந்த் ஞாபகம் தான் வந்தது. அவனுக்குத் தான் இந்த வேலையை சிபாரிசு செய்ய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன். அன்று மாலையே அவனைப் பார்த்து விஷயத்தை சொல்லி அவனுடைய சம்மதத்தை வாங்கினேன். ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை அவன் விட்டுவிடுவதாக சொன்னான்.

அடுத்த நாள் அவனை சேட்டிடம் அழைத்துச் சென்றேன். அறிமுகம் செய்து வைத்தேன். அவரும் ரொம்ப சந்தோஷமாக அவனை சேர்த்துக்கொண்டார். அன்றே வேலையை அவன் ஆரம்பிக்கட்டும் என்று என்னை அனுப்பிவிட்டார். நான் பெரிய உதவியை செய்தவனாய் என்னைப் பற்றி பெருமையாய் எண்ணிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அவனை மீண்டும் பார்க்கும் வரையில் தான் இந்த சந்தோஷம்/பெருமை எல்லாம் நிலைக்கும் என்று தெரியாமல்.


0 Comments:

Post a Comment

<< Home