தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, August 20, 2004

கிழக்கு லண்டன்

சென்ற..சென்ற வாரம் சனிக்கிழமை (7 ஆகஸ்ட்) அன்று என் நண்பரைப் பார்க்க "ஈஸ்ட் ஹம்(East ham)" (லண்டன்) சென்றேன். அது மத்திய லண்டனுக்கு கிழக்குப்பகுதியில் இருக்கிறது. இங்கிலாந்து மகாராணியின் வீட்டில் இருந்து 30 அல்லது 40 நிமிடத்தில் போய் விட கூடிய தூரம் தான். பாதாள ரயில்(TUBE) பயணம் முடிந்து, நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தால் அது லண்டனே இல்லை.. அதிர்ச்சி அடைய வேண்டாம்... அது லண்டன் மாதிரி இல்லை என்று சொல்ல வந்தேன். தெருவெங்கும் குப்பை.. திரும்பிய பக்கம் எல்லாம் தமிழ் குரல், தமிழ் பாட்டு, தமிழர் முகம். பெரும்பாலும் ஈழத்தமிழர்கள் தான்.

".... சில்க் ஸ்டோர்ஸ்" என்று தமிழில் பெயர் பலகை பார்க்க முடிந்தது.
இட்லி £ 0.50
தோசை £1.00
மசாலா தோசை £2.50
என்று தெருவில் கறுப்பு அறிவிப்பு பலகையில் சாக்பீஸில் எழுதி இருந்தார்கள். ப்ளாட்பாரம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இஷ்டத்துக்கு எல்லாரும் ஹார்ன் அடித்துக் கொண்டு காரை கன்னா பின்னா என்று ஓட்டினார்கள்.

நிற்க. இந்த இடத்தில் சில விஷயங்களை சொல்ல வேண்டும்.
நம்மூரை போல் அல்லாமல் இங்கு ஹார்ன் அடிப்பது என்பது எதிராளியை மிக கெட்ட வார்த்தையில் திட்டுவதற்க்கு சமம். ஹார்ன் சத்தம் கேட்டாலே எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள். ஹார்ன் வாங்கினோம் என்றால் எதோ தப்பு செய்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதை தவிர, வெகு அரிதாக தங்களின் வாகனம் இருக்கிறது என்பதை பிறருக்கு, முக்கியமாய் ரிவர்ஸ் வருபவருக்கு உணர்த்த மட்டுமே ஹார்ன் உபயோகப்படும்.

சாலையில் சில இடங்களில் மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்கும் பாதசாரிகள் சாலை கடக்குமிடங்கள் இருக்கும். இவ்விடங்களை கடக்கும் போது வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக வர வேண்டும். ஏனென்றால் எந்த நிமிடம் யார் வேண்டுமானாலும் சாலையை கடக்கக் கூடும். பாதசாரிகளுக்குத் தான் அங்கே முன்னுரிமை. இந்த வகையான இடத்தை, இங்கிலாந்தின் எல்லா பகுதியிலும், எல்லா வாகன ஓட்டிகளும் பொறுப்பாய், பொறுமையாய் கடப்பார்கள். ஆனால் இங்கே மட்டும், வாகன ஓட்டிகள் முன்னுரிமை எடுத்துக் கொண்டு பாதசாரிகளை பயமுறுத்தி விட்டு ஹார்ன் வேறு அடித்து கலவரப் படுத்தி சென்றார்கள்.

சினிமா போஸ்டர்களை பார்க்க முடிந்தது. சத்தமாய் தெரு வரை ஒலிக்கும் தமிழ் பாடல்கள் இருந்தது. மொத்ததில் சற்று முன்னேறிய ஒரு பாண்டிபஜாரை பார்ப்பது போல் தான் இருந்தது.

அங்கே சென்னை ரெஸ்டாரெண்ட் சென்றோம். 2 தோசை, 3 வகை சட்னி, சாம்பார், பொங்கல், கேசரி எல்லாம் சேர்த்து £3.50 மட்டுமே. திருப்தியாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கில்லி, கந்தா கடம்பா கதிர் வேலா VCDகளை வாங்கினேன்.

அங்கே இருந்த ஒரு கடையில் சமையலுக்கு தேவயான சில காய்கறிகள், பருப்பு, கடலை வகைகளை வாங்கிக் கொண்டு, என் நண்பனின் அறைக்கு சென்றோம். சிறிது நேரம் பேசிவிட்டு, "சானரிபார்க்" என்ற இடத்திற்க்கு சென்றோம். அது 5 அல்லது 6 மைல் தொலைவு தான்.. ஈஸ்ட்ஹாமுக்கும் இந்த இடத்திற்க்கும் எவ்வளவு வித்தியாசம்??? இங்கே விண்ணை முட்டும் கட்டிடங்கள், தேம்ஸ் நதியின் ஓரத்தில் உயர்ந்து எழும்பி நின்றிருந்தது. துடைத்து வைத்தது போல் சாலைகள், வெளிநாடுதான் இது என்ற தோற்றம் தரும் வகையில் பிரம்மாண்டம், பசுமை, தூய்மை அனைத்தும் இருந்தது. அங்கே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஆளில்லா ரயிலில் ஏறி மீண்டும், பாண்டிபஜார் வந்தேன்.

அங்கே ஒரு ஓட்டலில் "கொத்து பரொட்டா" சாப்பிட்டேன். காரம் கண்ணை மறைத்து கண்ணீர் பெருகியது. கிட்டதட்ட 1 வருடம் கழித்து கொத்து பரொட்டா சாப்பிடுவதால் வரும் கண்ணீர் என்று என் நண்பன் நினைத்தான். அவனிடம் உண்மையான காரணம் சொன்னவுடன் சிரித்தான்.

இப்படியாக என் தாய் தமிழ் நாட்டை இங்கே லண்டனில் இல்லை இல்லை ஈஸ்ட்ஹாமில் தரிசித்தேன். நான் இங்கே சொல்ல மறந்தவை அங்கே இருக்கும் கோவில்கள்.. பிரபலமான இந்த கோவில்களுக்கு அன்று என்னால் செல்ல முடியவில்லை. அதனால் நோ கமெண்ட்ஸ்.

கிழக்குப்பகுதிக்கு ஒரு ஈஸ்ட்ஹாம் என்றால் மேற்க்கு பகுதிக்கு ஒரு "செளத்ஹால்" (southaal). இது லண்டனின் பஞ்சாப் என்று செல்லமாக சொல்வார்கள். ஈஸ்ட்ஹாமில் தமிழ் என்றால் இங்கே ஹிந்தி, பஞ்சாபி பாட்டுக்கள் தான் கேட்கும். ப்ளாட்பார ஜிலேபி கடைகள், பான் மசாலா கடைகள் அனைத்தும் உண்டு. ஹிந்தி பட போஸ்டர்கள், சுவற்றில் தீட்டப்பட்டிருக்கும் பான் மசாலா காவியும் இங்கு உண்டு. இந்த இடத்தைப் பார்த்தால் வட இந்தியாவின் ஜன நெரிசல் மிகுந்த ஒரு நகரத்துக்கு வந்தது போலவே இருக்கும்

பின் குறிப்பு.. நிஜமாவே இது என் பின் குறிப்பு தான்... சனிக்கிழமை இரவு நான் சாப்பிட்ட கொத்து பரொட்டா காரம் தன் வேலையை அடுத்த நாள் சரியாகவே செய்தது. ;-)

4 Comments:

  • At Fri Aug 20, 03:46:00 AM EDT, Blogger Chandravathanaa said…

    கொத்து பரொட்டா.....!

    inkeyum konjam anuppi vidunko.

    natpudan
    chandravathanaa

     
  • At Fri Aug 20, 03:48:00 AM EDT, Blogger Badri Seshadri said…

    நான் சவுதால் போயிருக்கிறேன். ஈஸ்ட்ஹாம் போனதில்லை. அடுத்த முறை வரும்போது போய்ப் பார்க்க வேண்டும். சவுதாலில் தியேட்டரில் உட்கார்ந்து குஷியின் ஹிந்தி ரீமேக் (பேர் மறந்து விட்டது) படம் பார்த்த அனுபவம் உண்டு.

     
  • At Fri Aug 20, 04:18:00 AM EDT, Blogger Gyanadevan said…

    உங்களுக்கு இல்லாத கொத்து பரோட்டாவா?.. "ப்ரியா ரெஸ்டாரெண்ட்" தெரியுமோ? ஈஸ்ட்ஹாம் பாதாள ரயில் நிலையத்துக்கு எதிர் வரிசையில் சில மீட்டர் தொலைவில் தான் இருக்கு. அங்கேதான் நான் சாப்பிட்டேன். but NO Credit card or Debit card. ONLY MONEY.நண்பன் தான் பணம் குடுத்தான்.. ஹி ஹி ஹி

     
  • At Fri Aug 20, 07:08:00 AM EDT, Anonymous Anonymous said…

    ஆஹா... ப்ரியா ரெஸ்டாரெண்டா.. :O கொஞ்ச நாளா அது தான் என்னோட லிவிங்க் ரூமா இருந்தது. அப்பொழுது ஒரு ஹாலந்து குடும்பத்துடன் (shared accommodation) தங்கியிருந்ததால் தினமும் சாயங்காலம் ஆஃபிஸ் முடிந்து நேராக செல்வது ப்ரியா தான்.

    ரெஸ்டாரெண்ட் மேனேஜர் 'வைத்தீஸ்வரன்' (இன்னமும் இருக்கிறாரா என்று தெரியவில்லை) பல நேரங்களில் ரெஸ்டாரண்ட் முடிந்த பின் வீட்டில் ட்ராப் செய்யும் அளவுக்கு நெருக்கமாகிப்போனது.

    அடுத்த முறை அங்கே செல்லும் போது சிக்கன் டெவில் சுவைத்து பாருங்கள். நல்ல காரம்/சுவை. ஆனால் பின் விளைவுகளுக்கு என்னை குறை சொல்லாதீர்கள்.

    அது தவிர இலங்கை உணவு விடுதிகளில் இங்கே கிடைக்கும் வேற சில ஸ்பெஸாலிட்டிஸ் - வீச்சு புரோட்டா, இடியாப்பம், புட்டு....

    ஈஸ்ட் ஹாம் தான் என்று இல்லை. இலண்டனில் பல பகுதிகளில் தமிழ் உணவு விடுதிகள் உண்டு. ஆல்பர்டன், வெம்ப்லி பக்கம் எல்லம் போய் பாருங்க. ஆனா சௌத் ஹால் மாதிரி ரோட்டுல உட்கார்ந்து ஜிலேபி சுடறதெல்லாம் தமிழ் பகுதிகளில் நடப்பதாக தெரியவில்லை.

    ம்ம்ம்.... மதிய நேரத்தில்... இதை எழுதி முடிக்கிறதுக்கு முன்னாடி பசி வயித்தை கிள்ளுது. நேரா சைனீஸ் ரெஸ்டாரண்ட் போய்... அப்புறமா வர்ட்டா.

    நவன் பகவதி

     

Post a Comment

<< Home