தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, August 26, 2004

கனவு பயம் எனக்கு - PART 2

"நீங்க இன்னைக்கு இரவு சாக போறீங்க... " என்று உறுதியுடன் கூறினேன்.

டாக்டர் பயந்து தான் போய் இருக்க வேண்டும். இருந்தும் ஒன்றும் கண்டுகொள்ளாதவர் போல்

"என்ன சொல்றீங்க??" என்றார்.

"நிஜம் தான் டாக்டர்... எனக்கு நேத்து வந்த கனவுலே.. நீங்க இன்னைக்கி சாக போறதா தெரிஞ்சது.. அதுவும் நீங்க வீட்டுக்கு போற வழியிலே லாரியிலே அடிபட்டு சாகறதை நான் பார்த்தேன்."

இவ்வளவு நேரம் என் பேச்சை கேட்டவர் இப்போது லேசாய் சிரித்தார்.
"இல்லை கவலை படாதீங்க.. நான் சாக மாட்டேன்... உங்க கனவு இன்னைக்கு பலிக்காம போக போகுது.. "
என்று சொல்லியவாறு மேலும் சிரித்தார்.

"சிரிக்க வேண்டாம் டாக்டர், ஏற்கனவே 60 பேரை காப்பாத்த முடியாம போய் நான் ரொம்ப வருத்தத்துல இருக்கேன், உங்க உயிரை காப்பாத்தின ஒரு சந்தோசமாச்சும் குடுங்க.. ப்ளீஸ்."

"ஓ கமான்.. உங்க கனவுக்கு பயந்து நான் எங்கேயும் வெளியே போகாம எல்லாம் இருக்க முடியாது.. நீங்க தான் என்னோட கடைசி பேஷண்ட்.. இனி நான் வீட்டுக்கு தான் போறேன்..."

நடுவில் தடுத்தேன்.
"இங்கே இங்கே தான் டாக்டர் சொல்றேன்.. நீங்க வீட்டுக்கு போற வழியிலே தான் அடி பட்டு... " சொல்லாமல் நிறுத்தினேன்.

"இங்க பாருங்க உங்க நல்ல மனசு எனக்கு புரியுது.. எனக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நினைக்கிறீங்க.. அது போல தான் நடக்கும். கவலை படாதீங்க.. நாளைக்கு உங்களை சந்திச்சி.. நான் நல்லாதான் இருக்கேன்னு நிரூபிக்கிறேன். உங்க கனவு வெறும் கனவு தான் பயப்பட ஒண்ணும் இல்லேன்னு காட்டுறேன்... ம்ம்ம் இந்த மருந்துகளை வாங்கி சாப்பிடுங்க. நல்லா தூக்கம் வரும். குட்நைட். கிளம்புங்க" என்றார்

நான் அவரை அப்படியே பார்த்தவாறு இருந்தேன். பிறகு..

"சரி டாக்டர் நான் கிளம்புறேன்.. "

என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்து பிரிஸ்கிரிப்ஸனை வாங்கினேன்.
"ஆனா டாக்டர்.. நீங்க சொன்னது ஒண்ணு மட்டும் உண்மை.." என்றேன்
என் இருக்கையில் இருந்து எழுந்தவாறு.

"என்ன சொன்னேன்??" என்றார்

"யார் நினைச்சாலும் சில விபத்துக்களை தவிர்க்க முடியாதுன்னு சொன்னீங்களே... அது சரி தான்.. யார் நினைச்சாலும்.... முடியாது.. "
என்றவாறு கதவுக்கு போனேன்..
திரும்பி,
"குட்நைட் டாக்டர்.. பத்திரம்" என்று வெளியேறினேன்.

"நில்லுங்க.." என்றது டாக்டரின் குரல்.

"உங்க கனவு பலிக்காதுன்னு நிரூபிக்கிறேன்.. இந்த இரவு முழுதும் உங்க கண்ணுக்கு முன்னாடி உட்காந்து இருக்கேன்.... சரியா??"
என்றார் புன் சிரிப்புடன்.

எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.. என் கெட்ட கனவு பலிக்காமல் போக போகிறது என்று ,

"ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் டாக்டர்.. "
என்று அவரது அறைக்கு திரும்பினேன்.

டாக்டர் தொலைபேசி எடுத்தார், தன் வீட்டுக்கு பேசினார், பிறகு தன் உதவியாளரை அழைத்து உணவுக்கு ஏற்பாடு செய்தார்.. எனக்கும் ஆர்டர் கொடுத்தார்... தன் உதவியாளரையும் தன்னுடன் இருக்க செய்து இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு, பல தாள்களை அச்சிட்டு அடுக்கி வைத்துக்கொண்டனர். நான் பாட்டுக்கும் வரவேற்பறையில் இருந்த டிவியில் மிட்நைட் மசாலா பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரவு 1 மணி இருக்கும், லேசாய் தூக்கம் கண்ணை இழுத்தது..

"என்ன தூக்கம் வருதா உங்களுக்கு" என்றார் டாக்டர்.

"ம்ம் ஆமாம் டாக்டர்.. லேசாய்.. பாவம் நீங்க.. உங்களை இங்கேயே இருக்க வைத்து ரொம்ப கஷ்டம் குடுக்குறேன்.. சாரி " என்றேன் தலை குனிந்தவாறு.

"அப்சலூட்லி நாட்... உங்களால எனக்கு எந்த தொந்தரவும் இல்லை.. எனக்கு அடுத்த வாரம் ஒரு முக்கியமான கான்பரன்ஸ் இருக்கு அதுக்கு எப்போ தயார் பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன்.. இந்த இரவை உபயோகப்படுத்தி கிட்டேன். உங்க பிரச்சினையும் தீர்ந்தது.. எனக்கும் வேலை முடிஞ்சது.. .. சரி.. உங்களுக்கு தூக்கம் வந்தா அப்படியே சோபாலே படுத்துக்கங்க.. "என்று சொல்லி விட்டு அகன்றார்.

நானும் 3 மணி வரை டிவி பார்த்தேன்... டாக்டர் சலிக்காமல் ஏதேதோ படித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்... அப்புறம்... என்னை அறியாமல் தூங்கினேன்....

எழுந்திருக்கும் போது...

"குட்மார்னிங்.." என்றவாறு டாக்டர் என் முன்னே முழுதாய் நின்றிருந்தார்.

"குட்மார்னிங் டாக்டர்..." என்று எழுந்து அவரை தொட்டு பார்த்தேன்..

"என்ன முழுசாய் இருக்கேனா..??" என்று சொல்லி சிரித்தார்..

" கவலை படாதீங்க..உங்க கனவுக்கும் நிஜத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு நிரூபிச்சிட்டேன் பார்த்தீங்களா?? தைரியமா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.. அடுத்த வாரம் வந்து பாருங்க." என்றார்.

"ரொம்ப நன்றி டாக்டர்.. ரொம்ப இம்சை படுத்திட்டேன் உங்களை " என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

********
டாக்டரின் வீடு..

"ஓ இதுதானா கதை, ஐயா நேத்து நைட் வீட்டுக்கு வராதது.. நல்ல காமெடி போங்க.. உங்களுக்குன்னு வந்து மாட்டுறாங்க பாருங்க, நல்ல பேஷன்ட், நல்ல டாக்டர்.. "
என்று சொல்லிவிட்டு டாக்டரின் மனைவி அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தார்.

********
டாக்டரின் க்ளினிக்
"ஹலோ வாங்க வாங்க... எப்படி இருக்கீங்க.. கனவு எல்லாம் வருதா இன்னும் " என்றார் டாக்டர் என்னைப் பார்த்தும்..

நான் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே..
"இல்லே டாக்டர். நீங்க குடுத்த மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிச்சதும் நல்லா தூக்கம் வருது.. அதுனாலே எந்த கனவும் வர்ற்தில்லை.. " என்றேன்.

"குட், இதை தான் நான் எதிர் பார்த்தேன்.. இன்னும் 1 வாரம் அந்த மாத்திரை சாப்பிட்டு அப்புறம் விட்டுடுங்க.. அவ்வளவு தான் உங்க பிரச்சினை சரி ஆயிடிச்சி.. "

"ரொம்ப நன்றி டாக்டர்... எனக்கு இவ்வளவு உதவி செஞ்சி இருக்கீங்க. எனக்காக ஒரு நைட் புல்லா இருந்திருக்கீங்க. .. என்னோட ஒரு சின்ன அன்பளிப்பை நீங்க வாங்கிக்கணும்"
என்ற சொல்லிய படி, அவரிடம் அந்த கவரை குடுத்தேன்.அவர் அதை வாங்கியவாறு,

"என்ன இதெல்லாம்... நான் என் வேலையை தானே செஞ்சேன்" என்றபடி அதை பிரித்தார்..

"ஒண்ணும் இல்லீங்க அது.. வர்ற ஞாயிற்று கிழமை கிரேஸி மோகன் நாடகத்துக்கு முதல் வரிசையில உட்கார்ந்து பார்க்குறதுக்கு பேமிலி டிக்கெட். புது நாடகம். அன்னைக்குத் தான் அரங்கேற்றம்... உங்களுக்கு அவர் நாடகம் பிடிக்கும்ன்னு டிவிலே சொன்னீங்க அதான்...."

"ஓ ரொம்ப தேங்க்ஸ்.. இந்த வாரம் கட்டாயம் நான் என் குடும்பத்தோட போய் பார்க்குறேன். ரொம்ப நன்றி" என்றார்.

"ஐயோ எனக்கு எதுக்கு நன்றி சொல்லிகிட்டு.. என் வியாதியை சரி பண்ணதுக்கு ஒரு நன்றிகடன் அவ்வளவு தான்... வர்றேங்க டாக்டர்"
என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

******
டாக்டர் வீடு..
"ரொம்ப நல்ல மனுஷனா இருப்பார் போல இருக்கு அவர். நீங்க ஒருநாள் நைட் அவரை பார்த்துகிட்டதுக்கு நம்ம குடும்பத்துக்கே ஒரு சந்தோசத்தை குடுத்து இருக்கார்.. நானும் உங்க கூட வெளியே போய் எவ்வளவு நாள் ஆச்சு... இதை மிஸ் பண்ண கூடாதுங்க... " என்று பேசிக்கொண்டிருந்தார் டாக்டரின் மனைவி...
******
டாக்டர் வீடு..
ஞாயிற்றுக்கிழமை இரவு... டாக்டர் காரை நிப்பாட்டுகிறார்...
"சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு புண்ணாயிடிச்சிங்க... டிக்கெட் குடுத்தவரை பார்த்தா நான் ஸ்பெஷல் தாங்க்ஸ் சொன்னதா சொல்லிடுங்க" என்று சொன்ன டாக்டரின் மனைவி வீட்டை திறந்தார்... "வீவீவீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்" என்று அலறினார்..
*******
"DVD ப்ளேயர், காம்கார்டர்,லாப்டாப், டிஜிட்டல் கேமிரா, 50 பவுன் நகை.. யப்பா யப்பா யப்பா.. சரியான டாக்டர் தான் அவரு... எப்படியும் ஒரு 3 லட்சம் தேறும்" என்று மனதிற்க்குள் மெல்ல சிரித்தவாறு விசில் அடித்துக்கொண்டு.. என் மாருதியில் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தேன்... என் பக்கத்தில் ஒட்டு தாடி, மீசை, விக் எல்லாம் சிரித்துக்கொண்டிருந்தது.
******
முற்றும்.

1 Comments:

  • At Thu Aug 26, 05:11:00 PM EDT, Blogger Gyanadevan said…

    ஓசூர்ல மாட்டினது நான் இல்லீங்க... வேற எவனோ... இப்போ பெங்களூர்லே ஒரு ஓட்டலே இருக்கேன். சீக்கிரம் அடுத்த இரையை பிடிக்கணும் ;-)

     

Post a Comment

<< Home