தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, June 30, 2004

லல்லூங்கிலம்

லல்லு, அவர் மனைவி மற்றும் மகன், மூவரும் கன்னியாகுமரியில் இருந்து பாட்னாவுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். லல்லு கீழ் பெர்த்திலும், அவர் மனைவி நடு பெர்த்திலும், மகன் மேல் பெர்த்திலும் படுத்திருந்தனர். ரயில் நடுவில் ஒரு சிறிய கிராமத்தில் நின்றது. முழித்து பார்த்த பையனுக்கு சாக்லேட் சாப்பிட தோன்றியது. அப்பாவை எழுப்பி வாங்கி தர சொன்னான். லல்லுவும் எழுந்து பையனை அழைத்து கொண்டு வெளியே சென்றார். சாக்லேட் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தால், பையனின் பெர்த்தில் யாரோ ஒருவர் படுத்திருந்தார். லல்லு அவரை எழுப்பி ஹிந்தியில் அது அவர் பையன் படுத்திருந்த இடம் என்றார். ஆனால் அவருக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது. பொறுமை இழந்த லல்லு ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்தார். அவரிடமும் ஹிந்தியில் பிரச்சினையை விளக்கி கூறினார். ஆனால் அவருக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே ஆங்கிலத்தில் சொல்ல சொன்னார்...

லல்லுவும் உடனே..
"That man sleeping on top of my wife is not giving birth to my child."

குட்டி சாமி

இளம் சாமியார் அல்லது இளம் துறவியார் பற்றி எல்லா பத்திரிக்கைகளிலும் தினமும் ஒரு செய்தி போட்டு விடுகிறார்கள். அது சீக்கிரம் அடங்கி விடும் என்று நினைத்தேன். இல்லை, என் நினைப்பில் லாரி ஏற்றிவிட்டு அது பறந்து கொண்டு இருக்கிறது. அண்ணாச்சி கதை, பிரகாஷ் கதை போல இதுவும் ஜூவி, ரிப்போர்டர்-க்கு நல்ல தீனீ போடுகிறது. மான் தோல், குவாலிஸ் கார், திருவண்ணாமலை விஜயம், சேலம் தரிசனம், மதுரை ஆதீனம் என்று தினம் ஒரு திருப்பம். ஆக மொத்தம் மீடியா மற்றும் என்னை போன்ற ஆட்களுக்கு வாயில் போட்டு மெல்ல ஒரு மேட்டர்.

இந்த பதிவு எழுத காரணம் தினகரனில் வந்த ஒரு செய்தி தான். "குழந்தை தொழிலாளரை தடை செய்வது போல குட்டி சாமியாரையும் கைது செய்ய வேண்டும் - நாத்திகம் ராமசாமி வலியுறுத்தல்". தடை செய்வதும், கைது செய்வதும் ஒன்றா? என்று செய்தியை முழுதாய் படித்தேன். ராமசாமியின் கோபம் புரிந்தது. பத்திரிக்கையில் இளம் சாமியார் பெயர் தினமும் வருகிறதாம், காவல் துறை கண் மூடி கிடக்கிறதாம். ஒன்று பையன் பெற்றோரிடம் செல்ல வேண்டுமாம் இல்லையென்றால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டுமாம். 13 வயதில் துறவி ஆகலாம் என்றால் அதே வயதில் திருமணம் செய்யலாமா? என்று மடக்குகிறார். 13 வயதில் பிரபலம் ஆகிறான் அந்த சிறுவன் என்று ராமசாமிக்கு கோபம். வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு. ஒருவேளை அந்த சிறுவன் தப்பானவர்களின் கைகளில் மாட்டி இருந்தால் காப்பாற்ற சொல்லி இருக்கலாம். இல்லை அவனுக்கு நிஜமாகவே ஆன்மீக பற்று இருந்தால் அதனை முறைப்படுத்த வேண்டுக்கோள் விடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு, அச்சிறுவனை கைது செய்ய வேண்டும், சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வயிறெரிய -மன்னிக்க - வலியுறுத்தக் கூடாது.

- 13 வயசில் அப்பா அம்மாவை பிரிய வேண்டிய அவசியம் என்ன வந்தது அந்த சிறுவனுக்கு?
- சின்ன பையனின் சகவாசம் பற்றி அறிந்து கொள்ளாமல் அவன் பெற்றோர் ஏன் இருந்தனர்?
- மூன்றாவது மனிதன்/மனிதர்கள் எப்படி ஒரு சிறுவனை வசியப் படுத்த முடியும்?

அப்படியும் பிள்ளை ஒன்றும் கஞ்சா கேஸ், கொள்ளை கேஸில் மாட்டவில்லை, அதனால் எப்படியும் மீட்டு விடலாம். பிள்ளையையும், பெற்றோரையும் தனியே விட்டால் போதும், அவர்களே பேசி முடித்துக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. கொஞ்சம் பிரியமாய் பேசினால் பெற்றோர் பேச்சை கேட்பவன் போல் தான் அச்சிறுவன் இருக்கிறான்.

எப்படியோ அந்த பையன் நல்லா இருந்தா சந்தோஷம்.

Tuesday, June 29, 2004

கஜேந்திரா

விஜயகாந்த் பத்தி என்ன சொல்றது. சும்மா கிடந்த சங்கை...... கதை தான். ராமதாஸ் தன் கட்சி இருக்குன்னு காட்டிக்கிறதுக்கு சில காரியம் தான் செய்வார்
- மரம் வெட்டி ரோடுக்கு குறுக்கே போடுறது ( அந்த கால ஸ்டைல் )
- பஸ் எரிக்கிறது ( பலரும் இதை செய்றாங்க இப்போ )
- இட ஒதுக்கீடு கேட்கிறது ( வன்னியருக்கு மட்டும் )
- அடிக்கடி கூட்டணி மாற வேண்டியது
- (பொய்) சத்தியம் செய்யிறது
- பத்திரம் எழுதி தர்றது
- கூத்தாடி மாதிரி சாட்டையாலே அடிச்சிக்குவேன்னு/அடிங்கன்னு ரீல் விடுறது.
- ஏழைங்க வீட்டுக்கு சொல்லாம கொள்ளாம எம்.பி(களை) அனுப்பி அவங்களோட ஒரு வேளை சோத்தையும் திங்கிறது.
- இவன் வேட்டியை உருவிட்டான், அவ சட்டையை கிழிச்சிட்டானு புலம்புறது.
- அப்புறம் வேட்டி அவுத்தவன் தான் அண்டர்வேர் குடுக்குறான்னு அவன் கிட்டே போய் நாக்கை தொங்க போட்டுகிட்டு தொகுதி வாங்கிட்டு வர வேண்டியது..
- கட்சி சொல்லிச்சினு பையனை மந்திரி ஆக்கினேன்னு உதார் விடுறது
- கட்சி தான் அப்பா, அப்பா தான் கட்சின்னு பையன் உண்மையை உளர்றது.
- எவனாச்சும் சினிமால சிகரெட் குடிச்சா, தண்ணி அடிச்ச தொண்டர்களை விட்டு ரகளை பண்றது. அந்த தொண்டர்களுக்கு தண்ணி வாங்கி தர்றது.
- வழிபறி கொள்ளைகாரங்களை விட்டு சினிமா பொட்டியாய் தூக்கிட்டு ஓட சொல்றது.
- கல்யாணத்துக்கு போனா, மொய் வச்சிட்டு சாப்பிட்டு வராம "அவன் பன்னி, இவன் அரைவேக்காடு, ஓட விடமாட்டேன், வாழ விடமாட்டேன்.... வாழ்க மணமக்கள்"னு பேசுறது (எல்லா அரசியல்வாதி மாதிரி தான்)

இப்படிப் பட்ட சாதாரண அரசியல்வாதி பத்தி ஏன்னய்யா விஜயகாந்த் நீ பேசி உதை வாங்குறே. நீயும் கல்யாணத்துல தான் வம்பை விலைக்கு வாங்கினே(கல்யாணத்துக்கு வர்ற கூட்டத்தை, தனக்கு வந்ததா நினைச்சிகிறாங்களோ?? :-( ) சரி பேசினது பேசிட்டே, அப்புறம் பிரச்சினை பெரிசு ஆகிட்டே வந்துச்சுலே? அப்போ ஏன் வாய் மூடி பார்த்துக்கிட்டு இருந்தே? கடைசிலே பாரு, அய்யா அறிக்கைவிட்டு தன்னை நல்லவரா காட்டிகிட்டார். நீ சண்டைக்கு நிக்கிற, எதிரி சமாதானத்துக்கு கூப்பிடறான், சப்போர்ட் அவனுக்கு தான் போகும். நீ சிலுப்பிகிட்டே நிக்க வேண்டியது தான். உங்க ஆளுங்களும், அய்யாவுக்கு நன்றி சொல்லி அவங்க பொழப்பை காப்பாத்திகிட்டாங்க. உனக்கும் வேற ஒரு இடி "நடிகர்கள் அரசியல் கட்சி தலைவர்களை விமர்சிக்க கூடாது"ன்னு கட்டளை போட்டுட்டாங்க.என்ன செய்ய போறீங்க? உங்களை நினைச்சா பாவமா இருக்கு. அரசியலுக்கு வெளியே நின்னு விளையாடினது போதும், உள்ளே வந்து உங்க வீரத்தை காட்டுங்க.. பாராட்டுறேன்.

Monday, June 28, 2004

அஹிம்சாவாதி அய்யா

டாக்டர் அய்யா சொல்லிட்டார், விஜயகாந்த் கூட பிரச்சினை வேண்டாம்னு. இப்போ அவர் பெரிய மனுஷன் ஆயிட்டார். சண்டையை விரும்பாத அஹிம்சாவாதி ஆயிட்டார். திரை துறை சங்கங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டதால் இந்த விவகாரத்துக்கு முற்று புள்ளி வச்சிட்டதா சொல்லி இருக்கார். ரொம்ப சந்தோசம். எனக்கு என்னமோ இந்த அமைதி ஒரு நடிப்பு மாதிரி தான் தெரியுது. நல்லது நடந்தா பிடிக்காதா எனக்குன்னு கேட்காதீங்க, சில காரணம் இருக்கு.

- திரை துறை சங்கங்கள் வேண்டுகோள் விடுத்து 5 நாளைக்கு மேல ஆயிடிச்சி. இப்போ தான் சாவகாசமா அய்யாவுக்கு அதை பரிசீலனை செய்ய முடிஞ்சிதா?
- விவகாரத்துக்கு முற்று புள்ளி வைக்க காரணம் என்ன சொல்லி இருக்காங்க படிச்சீங்களா? மக்கள் பிரச்சினைகளை கவனிக்கனுமாம் :-( அடப்பாவிகளா இவ்ளோ நாளா ரஜினிகாந்த், விஜயகாந்த் பிரச்சினை மட்டும் கவனிச்சீங்களா?
- 2 நாள் முன்னாடி ஒரு கல்யாணத்துல பேசுறார், பஸ் கண்டக்டர் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்?.. சாராயம் வித்தவங்க எப்படி கல்வி நிறுவனம் நடத்துறாங்க??..

இதையெல்லாம் பார்த்தா ஏதோ ஒரு திட்டத்தோட தான் முற்று புள்ளி வைக்கிறார்னு தோணுது. இல்லாட்டி விவகாரம் இவ்ளோ சூடு பிடிக்கும் வரை காத்திருந்து, முடிஞ்சவரை இவரும் அதில் பெட்ரோல் ஊத்தி வளர்த்துட்டு, பொசுக்குன்னு பின் வாங்குறார்னா.. நம்ப முடியவில்லை...

என்னோட இந்த அதீத கற்பனை - கற்பனையாவே போயிடனும்.

அடுத்து விஜயகாந்துக்கும் இருக்கு....

Sunday, June 27, 2004

ஜக்குபாய் இடைவேளைக்கு பிறகு !!!

இடைவேளைக்கு பிறகு

வாஷிங்டன்: தமிழ் சினிமா கலைஞர்கள் கலை நிகழ்ச்சி: மேடையிலே ரஜினி டான்ஸ். ஜோதிகாவும் கூட ஆடுறாங்க. புஷ் பார்த்துகிட்டு இருக்கார்.
"ஜக்குபாய்ய்ய் சினிமா சினிமா ..
ஜக்குபாய்ய்ய் நேரம் தான்...
வாழ்க்கை ஒரு வாட்டர் ஜக்கு
வாட்டர் தீரும்வரையில் தான்.
வாட்டர் தீர்ந்து போற மாதிரி
உயிரும் பறந்து போகும்தான்.."
பாட்டு முடியும் போது புஷ், ஒசாமா எதிரே இருந்தார். ரஜினி ஒசாமா வேசம் போட்டுகிட்டு கேஸ்ட் அனுப்புறார்.
"இன்னும் 1 மாசத்துல இந்தியாவில இருக்குற அத்தனை நதிகளும்
ஒண்ணாயிடனும், இல்லை புஷ்....(ஒரு விஷ் சவுண்ட் குடுத்து)
ரெண்டாயிடுவார். ஹா ஹா ஹா". ஆனா எதிர் பார்த்த மாதிரி யாரும் புஷ் காணோம்னு சொல்லி வருத்தப்படாம உலகமே சந்தோஷமா தீபாவளி கொண்டாடுது. அமெரிக்கா, ஒசாமாக்கு தேங்ஸ் சொல்லி கிரீட்டிங்ஸ் அனுப்புது. ரஜினி அப்படியே இமயமலைக்கு போய் பாபாவை பார்க்கிறார். பாபா, ஜக்குபாய்க்கு 3 வரம் தந்து ஊருக்கு அனுப்புறார். வரத்தை சோதிச்சி பார்க்க ஜோதிகா ஓடி வந்து முத்தம் தரணும்னு நினைக்கிறார். அதே மாதிரி ஜோதிகா ஓடி வந்து முத்தம் தர்றாங்க. அப்போ ஒரு டூயட் சாங்.
"ஜக்குபாய்... ஜொள்ளு முத்தம் தா..
அது வற்றா நதி ஆகுதான்னு பார்ப்போம் வா.."
பாட்டு முடியும் போது போலிஸ் வந்து திருப்பி பிடிச்சிடறாங்க. ஜாமீன் முடிஞ்சி போச்சு, ஆத்துல பள்ளம் வெட்டி தண்ணியை திருடினதா குற்றம் நிரூபிச்சி 1 வருஷம் தண்டனை குடுத்துடறாங்க. இதுக்கு நடுவுல இண்டர்போல் போலிஸ் வந்து ரஜினிக்கு உடந்தையா இருந்ததா சொல்லி ஜோதிகாவை தூக்கிட்டு போய்டுறாங்க. வேற வழியில்லாம 2வது வரம் பிரயோகிச்சி ஜெயிலை விட்டு தப்பிச்சி வந்து, ஜோதிகாவை காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிறார். ஜெயிலே இருந்து தப்பிச்ச குற்றத்திற்காக அவருக்கு 15 வருஷம் தண்டனை அதிகம் பண்ணிடறாங்க. 15 வருஷம் கழிச்சி வெளியே வர்றார். நாடே பாலைவனமா கிடக்குது. ஜெயில் வாசல்லே ஜோதிகா காஞ்சி போன மரம் மாதிரி கிடக்குறாங்க. ரஜினி வந்ததும் அவர் காலை பிடிச்சி நீங்க தான் எல்லாரையும் காப்பாத்தனும்னு கதறுறாங்க. போன தடவை மாதிரி இந்த தடவையும் மக்கள் கூட்டம் ஜெயில் வாசல்லே நின்னுகிட்டு "ஜக்குபாய் ஜக்குபாய்"னு கோஷம் போடுறாங்க. ரஜினி மேல பார்க்குறார். அங்கே பாபா "குழந்தாய் ஜக்கு இன்னும் 1 வரம் மிச்சம் இருக்கிறது, உபயோகி"ன்னு சொல்லிட்டு மறைஞ்சிடுறார்.
ஜக்குபாய் வலது கை எடுத்து தரையிலே வச்சி எடுக்கிறார்.. தண்ணி பீய்ச்சி அடிக்குது..
"ஓ ஓ ஓ தண்ணி ஊறுதே..
உள்ளுக்குள்ளே ஈரம் ஆகுதே..
அட கம்பஞ்சோரு தின்னவும் தண்ணி வேணும்
அட தங்க பஸ்பம் செய்யவும் தண்ணி வேணும்..."

பாட்டு முடியும் போது, மக்கள் எல்லாரும் அவரை தோள் மேல தூக்கி வச்சிகிட்டு இருக்காங்க.. கேமிரா பார்த்து சிரிக்கிறார்..
வணக்கம் போடுறாங்க.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : கே.எஸ்.ரவிகுமார்
இசை : இசை புயல் ஏ ஆர் ரகுமான்
பாடல்கள் : வைரமுத்து
தயாரிப்பு : சத்யநாராயணா

நான் ஜக்குபாய் கதை சொல்லிட்டேன்னு தியேட்டர் போய் பார்க்காம இருந்துடாதீங்க.. கட்டாயம் போய் பாருங்க.. ராமதாஸ் துணை இருப்பார்.

Saturday, June 26, 2004

ஜக்குபாய் கதை (???)

ஜக்குபாய் கதை என்னான்னு தெரியாம தமிழ்நாடு ஸ்தம்பிச்சி போய் இருக்கு. பத்திரிக்கைகள் எல்லாம் என்ன எழுதுறதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சிகிட்டு இருக்காங்க. யாருக்கும் சாப்பிட பிடிக்கல தூங்க பிடிக்கல மொத்ததுல வாழ்க்கையே பிடிக்கல. இதை இப்படியே விட்டுட கூடாதுன்னு சொல்லி 007 கிட்ட மேட்டரை சொன்னேன். கே.எஸ்.ரவிகுமாரை எப்படியோ ஏமாத்தி அவர் வச்சி இருந்த ஸ்டோரியை அப்படியே சுட்டு வந்து குடுத்துட்டார். கதை நான் சொல்லிடறேன், ஆனா நீங்க யாரும் கே.எஸ்.ரவிகுமார் கிட்ட போட்டு குடுத்திடாதீங்க ப்ளீஸ்..

ரஜினி அவர் நண்பர்கள் ரமேஷ் கண்ணா, செந்தில் இன்னும் 4 பேர் மைசூருக்கு டூர் போறாங்க. அப்போ ரஜினியின் நண்பருக்கு தாகம் எடுக்குது. ஒரு வீட்டு கதவை தட்டி தண்ணி கேட்குறார். அவங்க தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணியும் தரமுடியாதுனு சொல்லி வெளியே துரத்திடறாங்க. தாகம் தாங்க முடியாம நண்பர் மயக்கம் போட்டுறார். ரஜினி அவரை 2 கையிலே தூக்கிகிட்டு நடக்குறார். அப்படியே அங்கே ஒரு பாட்டு
"தண்ணி குடு.. தண்ணி குடு.."
(பாபா பட "சக்தி கொடு" மெட்டு இசை நம்ம ரகுமான் தானே :-) )
பாட்டோட முடிவுல ஒரு பெட்டி கடைக்கு போய் கோக் வாங்கி குடிக்க வைக்கிறார். அய்யோ பாவம், பூச்சிகொல்லி மருந்து அதிகமா போய் நண்பர் இறந்துடறார்.அப்போ கோக் தொழிற்சாலை போய் நியாயம் கேட்கிறார். அங்கே அற்புதமா ஒரு பைட். ஒரு கோக் பாட்டில் எடுத்து சுத்தி விடுறார். அதுலே இருந்து தெரிக்கிற ஒவ்வொரு சொட்டும் ஒரு அடியாள் வாயிலே விழுந்து எல்லாரும் மயக்கம் ஆயிடறாங்க. பைட் முடிஞ்சி எல்லாரும் தமிழ்நாட்டுக்கு வந்துடறாங்க. நண்பரை நினைச்சி அழுறார். அப்போ பாபா கனவுலே வந்து, இந்த துன்பத்துக்கு காரணம் நதிகள் எல்லாம் பிரிஞ்சி இருக்குறது தான், நீ தான் அதை எல்லாம் சேர்த்து வைக்க முயற்சி செய்யணும்னு சொல்லிட்டு மறைஞ்சிடறார். அடுத்த நாள் விடிஞ்சதும் ஒரு கடப்பாறை எடுத்துகிட்டு ஆத்தோரம் போய் ஒரு கொத்து கொத்துறார், தண்ணி பீய்ச்சி அடிக்குது. அப்போ ஒரு பாட்டு
" வெற்றி கொடி கட்டு..
நதிகளை இணைத்து நீ கட்டு..
நரிகளை தீர்த்து நீ கட்டு..
எங்கள் ஜக்குபாய்.."
பாட்டு முடியும் போது போலிஸ் வந்து கைது பண்ணிடுது, அனுமதி இல்லாம பொது சொத்துக்களை நாசம் பண்ணினார்னு ஜெயில்ல போட்டுடறாங்க.

அப்போ தான் ஹீரோயின் வக்கீலம்மா ஜோதிகா வர்றாங்க, ரஜினி பக்கம் நியாயம் இருக்குனு வாதாடுறாங்க. எப்படியோ ஜாமீன்ல ரஜினி வெளியே வர்றார், கோர்ட் வாசலே இருந்து கண்ணுக்கெட்டின தூரம் வரை மக்கள் வெள்ளம். ரஜினி கண்ணுல தண்ணி வருது.. அப்போ சோகமா
"தண்ணியில்லாஆஆஅ இந்த வாழ்கை...
தருபவன் தான் யாரோ..
வானில் ஒளிந்துள்ள மழை துளிகள்..
வந்து விழுகின்ற நாள் எதுவோ..
பிரிந்து கிடக்கின்ற நதிகள் எல்லாம்,
பின்னி பிணைகின்ற நாள் எதுவோ??"

பாட்டு முடியும் போது, ரஜினி விமானம் ஏறி டில்லி போறார். அப்போ அந்த விமானத்தை அல்-கொய்தா தீவிரவாதிகள் கடத்திடறாங்க. ரஜினி ஒசாமாவை(ரகுவரன்) மீட் பண்றார்.. "வாங்க பாய்.. ஜக்கு பாய்.. எப்படி இருக்கீங்க.. நீங்க தமிழ் நாட்டு மக்களுக்கு தண்ணி காட்டணும்னு சொன்னீங்களாம், அதான் என் பசங்களை அனுப்பி கூட்டி வர சொன்னேன். நான் தான் அமெரிக்காவுக்கே தண்ணி காட்டிகிட்டு இருக்கேனே, நான் சொல்லி தர்ரேன் டோண்ட் வொரி"
ரஜினி : இல்ல பின்லேடன் ஜி, எனக்கு நிஜ தண்ணி வேண்டும்.. நதிகள் இணையனும்.. வழி சொல்லுங்க
பின்லேடன் : நதிகள் இணைக்க நிறைய பணம் வேண்டும், அது புஷ் கிட்டே தான் இருக்கு, அவனை என்னாலே கடத்த முடியல, நீங்கதான் செய்யணும்..
ரஜினி கண் சிவக்குது.. ஒசாமா மாதிரி மாறிடறார்.
"ஒசாமா சொல்றான் ஜக்குபாய் முடிக்கிறான்"
இடைவேளை விடுறாங்கோ

Friday, June 25, 2004

ஆங்கில ஹாஸ்யங்கள்

மன்னிக்க! இதையெல்லாம் நான் தமிழ் படுத்தினால்... ம்கூம்.. நல்லா இருக்காது.... இப்படியே படிச்சிக்கங்க.

- If "Fed Ex" and "UPS" were to merge, would they call it "Fed UP"?

- Do "Lipton Tea" employees take "coffee" breaks?

- If olive oil comes from olives, where does baby oil come from?

- If people from Poland are called Poles, why aren't people from Holland called Holes?

- Do infants enjoy infancy as much as adults enjoy adultery? Oops...

- Why is the man who invests all your money called a broker?

- If horrific means to make horrible, does terrific mean to make terrible?

- Why is it called building when it is already built?

- If you're not supposed to drink and drive, then why do bars have parking lots?

- If vegetarians eat vegetables, what do humanitarians eat?

- If working hours are meant for working, then why are you reading this??

(பி-கு) இதே பொழப்பா போச்சு எனக்கு :-( பி-கு போடுறதை சொல்லுறேன்
(பி-கு) சும்மா இந்த மாதிரி ஆங்கில ஹாஸ்யங்கள் போடுறதுல எனக்கு விருப்பம் இல்லை, ரொம்ப பிடிச்சி, தமிழ் பண்ண முடியாட்டா மட்டும் தான்.. சரியா?? சமத்து :-)

ரீபப்ளிஷ் பிரச்சினை

வலைபதிவுக்கு புதுசுங்கிறதால சின்ன சின்ன மாற்றங்களுக்கும் அடிக்கடி ரீபப்ளிஷ் பண்ணிகிட்டு இருக்கேன். எல்லாரும் இப்படி தான் செய்றீங்களா?? இப்படி செய்றதுல ஒண்ணும் பிரச்சினை இல்லையே? யாராச்சும் பதில் போடுறீங்களா?

Thursday, June 24, 2004

அப்பாவி தமிழன் ஒருவன்

அய்யா ராமதாஸ் அவர்களுக்கு,
ஒரு அப்பாவி தமிழனின் ஓலை, மடல், கடிதம், இல்லை இல்லை விண்ணப்பம்னு வச்சிகலாம். கொஞ்ச நாளா நீங்க ரொம்ப அழும்பு பண்றீங்க. தாங்க முடியல. நீங்க மரம் வெட்டி ரோட்டை மறிச்சி அரசியல் பண்ணின காலத்துல நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன். அப்புறம் கொஞ்சம் அரசியல் கத்துகிட்டு, தெளிவாகி எங்கே சந்து கிடைக்குமோ அங்கே சிந்து பாடி, அப்படி இப்படி பெரிய தலை ஆயிட்டீங்க. இப்போ உங்க புள்ளையும் உங்களை மாதிரி வளர வைக்கிறீங்க. இதெல்லாம் தப்பு இல்லீங்க. மரம் போனா போகுது, 10, 20 வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்துடலாம். பஸ் எரிச்சதும் ஒண்ணும் இல்லீங்க. காப்பீடு இருக்கும் வாங்கிக்கலாம். பையன் அரசியலுக்கு வர்றது, பதவி பிடிக்கிறது எல்லாம் உங்க குடும்ப - மன்னிச்சிகங்க - கட்சி சம்மந்தப்பட்டது. நீங்க நேரா போய் பதவி வாங்கினீங்களோ, கொல்லை பக்கம் போய் வாங்கினீங்களோ, தெரியாது, அதை பத்தியும் கவலை இல்லை. விஜயகாந்தும் நீங்களும் இப்போ கொஞ்ச நாளா அறிக்கை மேல அறிக்கை விட்டு ஒருத்தரை ஒருத்தர் திட்டிகிட்டு இருக்கீங்க. விஜயகாந்த் பாவம் ஒரு பாதுகாப்புக்கு மறைமுகமா உங்களையும் உங்க புள்ளையையும் காய்ச்சினார். நீங்க பெரிய மனசு பண்ணி அதை கண்டுக்காம இருந்திருந்தா, இந்த பதிவே அவசியம் இருந்திருக்காது. அட, நீங்க கண்டுகிட்டது கூட தப்பு இல்லீங்க, உங்க பக்கத்து நியாயம் மட்டும் சொல்லிட்டு விட்டு இருந்தா நீங்க பெரிய இடத்து அரசியல்வாதியா நினைச்சி இருக்கலாம், ஆனா நீங்க, 3ம் தர பேச்சாளர் மாதிரி அவரை போய் "அரைவேக்காடு.." அது இதுனு சொல்லி உங்க மானத்தை காத்துல விட்டுட்டீங்க. அவங்களும் சும்மா இருந்தாங்களா, உங்களை மாதிரி ஆகனும்னு, கொடும்பாவி எரிச்சாங்க. உங்களுக்கு பயம் வந்து நீங்களும் கொடும்பாவி எரிச்சீங்க. இத்தோட கதை முடிஞ்சா பரவால்ல, ஆனா முடிக்கலியே, நீங்க உங்க குண்டர் - மன்னிக்கவும் - தொண்டர் படை விட்டு ரசிகர் மன்றம் எல்லாம் எரிச்சீங்க.. தேவையா இது?

அய்யா இதுவரை கூட உங்க மேல ரொம்ப குத்தம் சொல்ல முடியாதுங்க. அடுத்து போட்டீங்க பாருங்க ஒரு குண்டை.. அதுதாங்க இந்த பதிவுக்கு காரணம். உங்க வலது கை "காடு வெட்டி குரு" தான் அந்த குண்டை போட்டார்(நீங்க தான் சொல்லி போட வச்சி இருப்பீங்க). "விஜயகாந்த் படங்கள் எங்கேயும் ஓட விட மாட்டோம், மீறி திரையிட்டால் அங்கே நடப்பதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல". என்ன இது?? அறிக்கையா? மிரட்டலா? விஜயகாந்துக்கு வேட்டு வைக்கிறீங்களா இல்லை படம் பார்க்க வர்ற எங்களை மிரட்டுறீங்களா? படப்பெட்டியை தூக்கி என்ன பிரயோசனம், வாங்கின வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம், ஸ்கீரீனை கிழிச்சி எரிச்சி தியேட்டர் முதலாளிக்கு நஷ்டம், இப்படி எல்லாம் செஞ்சா விஜயகாந்த் பயப்படலாம், இல்லை அவரும் உங்களை மாதிரி இறங்கி பின்னங்கால் தூக்கி உதைக்கலாம். நாங்க என்னையா பாவம் செஞ்சோம்? நீங்க போடுற சண்டையிலே இன்னைக்கி ஒரு கர்ப்பிணி பொம்பளையை அடிச்சிட்டீங்க. நாளைக்கி தியேட்டர் எரிக்கிறேன், பேனர் எரிக்கிறேன், பேர்வழின்னு 10 குடிசை 10 பஸ் எரிப்பீங்க. பண்றதெல்லாம் பண்ணிட்டு நீ தான் பண்ணே, நீ தான் பண்ணேனு சின்ன புள்ள தனமா அறிக்கை விட்டு ஊரை ஏமாத்துவீங்க. உங்களுக்கு விஜயகாந்த் மேல கோவமா அவரை திட்டுங்க, அவன் மட்டும் ரொம்ப ஒழுங்கா? தமிழனானு கேள்வி கேட்டு வசைமாறி திட்டுங்க. விஜயகாந்தும் உங்களை திருப்பி திட்டட்டும். நேருக்கு நேர் பார்த்து முறைச்சிக்கங்க. ஏன்யா எங்களை படுத்துறீங்க.

இன்னைக்கி அடிச்சிகுவீங்க, நாளைக்கு விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பிச்சி, அது 10 சீட் வாங்கி, உங்க கூட்டணி தலைவர் உங்க வேட்டியை உருவி துரத்தி விட்டா.. எல்லாத்தையும் மறந்து, தங்க கம்பி தம்பி விஜயகாந்த், அப்படின்னு சேர்ந்துகுவீங்க..

போதும் அய்யா, போதும், உங்க தனிமனித பிரச்சினையை உங்க கூடவே வச்சிக்கங்க. எங்களை எல்லாம் நிம்மதியா வாழ விடுங்க...

அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்
அப்பாவி தமிழன் ஒருவன்.

கிசு கிசு - விதிகள்

சுவாரசியம் இல்லாமல் போகின்றது இந்த வலை பதிவு என்பதற்காக ஏதாவது வித்தியாசமாய் செய்யலாமா என்று யோசிக்கிறேன்....ஐயோ ரொம்ப யோசித்து நிஜமாவே வித்தியாசமாய் தோன்றிவிடுமோ என்று பயமாய் இருக்கிறது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. ஒழுங்காக மரபுப் படி நடப்போம். முதலில் கிசு கிசு எழுதலாம். அது தான் நமக்கு நிறைய கற்பனை வளத்தை தரும். அதில் நாம் கரை கண்ட பிறகு அடுத்ததிற்கு போகலாம்.

கிசு கிசு எழுத சில முக்கியமான விதிகள் இருக்கிறது. அதில் சில
- யாரைப் பற்றி எழுதுகிறோம் என்பது கட்டாயம் எல்லாருக்கும் புரிய வேண்டும்.
- யாரைப் பற்றியும் அவர்கள் பெயர் சொல்லி தாக்கக் கூடாது.
- யாரும் பிற்காலத்தில் என்னை பற்றி தானே எழுதினாய் என்று கேட்டாலும் சமாளிக்கும் அளவிற்கு எழுத வேன்டும்.
- முக்கியமாய் நன்றாக ஜோடித்து கற்பனை கலந்து தர வேண்டும்.
- சுருக்கமாய் இருக்க வேண்டும்.
- பல பேர் படித்து "அப்படியா?" என்று கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.
- புதிர் போல கட்டாயம் இருக்கக் கூடாது.
- கிசு கிசு எழுதி யாரையும் பிரபலம் ஆக்கக் கூடாது
- பிரபலமாய் இருப்பவர் பற்றி மட்டும் எழுதி நாம் பிரபலம் ஆகலாம் :-)
- கிசு கிசுவிற்கு எந்த அளவுகோலும் இல்லை, எனவே இஷ்டத்திற்கு எழுதலாம்.
- கிசு கிசு மட்டும் எங்கும் எப்போதும் கிடைக்கும், நாம் தேடி செல்ல தேவை இல்லை.
- எந்த கிசு கிசுவும் கிடைக்கா விட்டால், மற்றொருவர் கிசு கிசு எடுத்து, கொஞ்சம் மாற்றி நம்முடையதாக்கிக் கொள்ளலாம்.
- சம காலத்து பிரபலங்களை பற்றி மட்டும் கிசு கிசு எழுதுவது உத்தமம். சமாளிக்கவோ இல்லை "நான் தான் முன்னமே சொன்னேன்லே" என்று மார் தட்டிக் கொள்ள உதவும்.

இப்போதைக்கு இது போதும். உதாரணத்திற்கு ஒரு கிசு கிசு ஆரம்பம் மட்டும்...
"எப்போதும் தண்ணி அடிப்பதைப் பெருமையாய் பேசி/எழுதிக்கொண்டும் (குழாய் தண்ணீர் அல்ல), தன்னைப் பற்றி பெரிதாகப் பீற்றிக் கொண்டும், தன் எழுத்தை தானே சிலாகித்துக் கொண்டும், வீண் பேச்சு வீணராய், வெட்டியாய், கோணலாய், வாழும் இலக்கியவாதி(?) எழுத்தாளருக்கு...." இதற்கு மேல் நமக்கு தேவையானதை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

(பி-கு:1) எல்லாரும் பி-கு தருவதால் நானும் தருவது தான் முறை :-)
(பி-கு:2) சத்தியமாய் நான் இதுவரை ஒரு கிசு கிசுவும் எழுதியது இல்லை.

Wednesday, June 23, 2004

சும்மானாச்சுக்கும்..

அனைத்துலக மருத்துவ விஞ்ஞான கருத்தரங்கம்:
அமெரிக்க விஞ்ஞானி: நாங்கள் அற்புதம் செய்திருக்கிறோம். வாஷிங்டனில் கைகள் இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு செயற்கை கை பொருத்தி, இப்போது அந்த குழந்தை வளர்ந்து ஒலிம்பிக்ஸ் குத்து சண்டையில் தங்க பதக்கம் வாங்கி இருக்கிறது.
ஜெர்மனி விஞ்ஞானி: இது என்ன அதிசயம். பெர்லினில் கால் இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு செயற்கை கால் பொருத்தி, இப்போது அந்த குழந்தை வளர்ந்து ஒலிம்பிக்ஸ் மாரதான் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு வாங்கி இருக்கிறது.
இந்திய விஞ்ஞானி: ஹா ஹா ஹாஆ... இதெல்லாம் ஒரு அதிசயமா? ஒரு சாதனையா? எங்கள் நாட்டில் பீஹாரில் தலையே இல்லாமல் பிறந்த குழந்தைக்கு தேங்காய் வைத்து வளர்த்து, இப்போது அது எங்கள் நாட்டு ரயில்வே மந்திரியாக இருக்கிறது, இதற்கு என்ன சொல்கிறீர்கள்??

மேஜிக் விடை

அந்த மேஜிக் பதிவுக்கு விடை கேட்டு இதுவரை வந்திருக்கும் மின்ஞ்சல்களை என்னால் எண்ண முடியவில்லை ( 0 வை எப்படி எண்ணுவது ;-) ) அதனால் அதற்கான விடையை சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன்.
இலக்கங்களை கூட்டி வரும் விடை எப்போதும் 9 ஆக இருக்கும்.
அதிலிருந்து 5ஐ கழிக்கும் போது 4 வரும்
4 என்றால் D
D ல் தொடங்கும் நாடு DenmarK
K ல் தொடங்கும் விலங்கு KangaroO
O ல் தொடங்கும் பழம் OrangE
E ல் தொடங்கும் பெரிய விலங்கு Elephant

பொதுவாக எல்லோரும் இதை தான் நினைப்பார்கள். அதனால் இந்த விடைகளை சொல்லி அசத்தலாம். ஒரே ஆளிடம் ஒருமுறைக்கு மேல் இதை பயன்படுத்தக் கூடாது. ஆல் தி பெஸ்ட்.

Tuesday, June 22, 2004

இது நடக்கக் கூடாதது

விஜயகாந்த் ரசிகர்களுக்கும், ராமதாஸ் தொண்டர்களுக்கும் நடுவில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். இரு தரப்பும் மாறி மாறி கொடும்பாவி கொளுத்திக் கொள்கிறார்கள். ரசிகர் மன்றங்கள் எரிக்கப் படுகின்றன. கொடிமரங்கள் சாய்க்கப் படுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால்....
விஜயகாந்த் : என்னை தொல்லை படுத்தும் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. இருக்கவும் விட மாட்டேன். யாரும் யாரையும் இங்கே வராதே அங்கே வராதேன்னு தடுக்க முடியாது. அப்படி தடுத்தா .. தாண்டி வருவேன். ஆட்சியில் இருப்பதால ஆட கூடாது, எப்பவும் ஆடிகிட்டே இருக்கவும் முடியாது. நான் யாரையும் அழிக்க நினைக்கல, அழிக்க நினைச்சா அழிச்சிடுவேன். நான் வரணும்னு நினைச்சா உடனே வந்துடுவேன். நான் வந்துட்டா இப்போ ஆடுற எல்லாரோட ஆட்டத்தையும் அடக்கிடுவேன். அப்புறம் மக்கள் சக்தி உங்களை விழுங்கிடும்.
டைரக்டர்: கட் கட் கட்
விஜயகாந்தின் அருகில் வந்து "சூப்பர் சார். கலக்கிட்டீங்க, தியேட்டர் அதிரும் இந்த சீனுக்கு.."
வெள்ளித்திரையின் முன்னால் "தலைவா.. வா ... வா தலைவா" இருட்டைப் பார்த்து "டேய் பாருங்கடா, தலைவர் வந்தா, நீங்க எல்லாம் காலிடா... ஓ..."
"எவண்டா அவன் எங்களை மிரட்டுறது?? வெளியே வாடா, வகுந்திடறோம்"
தலைப்புச் செய்திகள்: திண்டிவனத்தில் "மகேந்திரா" திரையிடப் பட்ட திரையரங்கில் கலவரம். 3 பேர் பலி, காவல்துறை துப்பாக்கி சூடு. 10 பேர் கைது.
ராமதாஸ் அறிக்கை: அரைவேக்காட்டு விஜயகாந்தின், அறிவுகெட்ட பேச்சால் அப்பாவி மக்கள் அடித்துக் கொண்டு இறக்கின்றனர். திரைப்படம் வன்முறையை தூண்டுகிறது என்று எவ்வளவு முறை சொல்லி இருக்கிறேன். இதோ மீண்டும் ஒருமுறை அது நிரூபணம் ஆகி இருக்கிறது. இனிமேலாவது, அர்த்தம் கெட்டதனமாய் பேசாமல் வாயை.... மூடிக் கொண்டு இருந்தால் விஜயகாந்துக்கு நல்லது. இல்லையேல் ரஜினிக்கு தமிழக மக்கள் செய்தது போல், முக்காடு போட்டு மூலையில் அல்ல முச்சந்தியில் நிறுத்தி விடுவார்கள் என்று எச்சரிக்கிறேன்...............

மீன்டும் இதே வலைப்பதிவில் நான்...
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், ராமதாஸ் தொண்டர்களுக்கும் நடுவில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். இரு தரப்பும் மாறி மாறி கொளுத்திக் கொள்கிறார்கள். ரசிகர் மன்றங்கள் எரிக்கப் படுகின்றன. தலைகள் சாய்க்கப் படுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால்....

Monday, June 21, 2004

மேஜிக்

பல பேருக்கு இது தெரிந்திருக்கலாம். இது தெரியாதவர்களுக்காக.
1. நீங்கள் 10க்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். (உ-ம் : 7)
2. அதை 9ஆல் பெருக்கி கொள்ளுங்கள்( 7 * 9 = ??)
3. வரும் விடையை அதன் இலக்கங்களால் கூட்டிக் கொள்ளுங்கள் ( 45 என்றால் 4+5 என்று கூட்டவும்)
4. கூட்டி வரும் விடையில் 5ஐ கழிக்கவும். விடை 10க்குள் இருக்கும்.
5. A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10... என்று ஒவ்வொரு எண்ணிற்க்கும் ஒரு ஆங்கில எழுத்தை தரவும். உதாரணமாக, உங்கள் விடை 5 என்றால் உங்கள் எழுத்து 'E'
6. 'E'இல் ஆரம்பிக்கும் ஒரு நாட்டின் பெயரை(ஆங்கிலம்) நினைக்கவும்.(உம்: England)
7. அந்த நாட்டுப் பெயரின் கடைசி எழுத்தில் தொடங்கும் ஒரு விலங்கின் பெயரை நினைக்கவும் (உம்: D என்றால் Dog)
8. விலங்கின் பெயரின் கடைசி எழுத்தில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயரை நினைக்கவும். (உம் : G என்றால் Grape)
9. இப்பொழுது பழத்தின் பெயரின் கடைசி எழுத்தில் தொடங்கும் ஒரு பெரிய காட்டு விலங்கின் பெயரை நினைக்கவும்.
10. இப்பொது எனக்கு ஒரு மின்னஞ்சல் (gynadevan@hotmail.com) அனுப்பவும். உங்களுக்கு விடைகளை நான் அனுப்புகிறேன், அப்படியே புதிருக்கும் விடை சொல்கிறேன்.

அரசியல் அவியல்

அரசியல் பற்றியும் பேசலாம் என்று பார்க்கிறேன். முதலில் திமுக கூட்டணி பற்றி, வேறு வழியே இல்லாமல், இணைந்து இருக்க வேண்டிய கட்டாயக் கூட்டணி. நமக்கு 4 மாடு 1 சிங்கம் கதை தெரியும். அதே தான் இங்கு நடக்கிறது. ஜெயலலிதாவை எதிர்த்து தனிதனியாக அரசியல் செய்து அடி வாங்கியது போதும் என்று ஒன்றாக இணைந்து ஜெயித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஒற்றுமையாய் இருக்கும் வரை இவர்களுக்கு பிரச்சினை இல்லை, பிரிந்தால்....:-) சொல்ல ஒன்றும் இல்லை, பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படியே கூட்டணி பிரிகிறது என்றால் முதல் ஆள் தைலாபுர மருத்துவராக தான் இருக்கக்கூடும். கருணாநிதியும் இவரும் ஒரே மாதிரி வாரிசு அரசியல் செய்வதால், விரைவில் வில்லங்கம் வரலாம், ஏனென்றால் பங்காளிகள் ஆயிற்றே(வாரிசு அரசியலில்). வைகோ- அடிபட்ட சிங்கம்? புலி? எதுவோ ஒன்று, அடி கொஞ்சம் பலம் தான். அண்ணன் தயவு இப்பொழுது இருக்கிறது, ஆனால் நிச்சயமாய் அது நிலையானது அல்ல. இதுவும் சமயம் வந்தால் கழண்டு கொள்ளும். காங்கிரஸ்- வேறு வழியில்லாததால் திமுகவுடன் இருக்கும். அம்மா பக்கம் போக ரொம்ப பயப்படுவார்கள்.

அம்மா கூட்டணி - இதுவும் ஒரு வகையில் கட்டாயக் கூட்டணி தான் அல்லது இப்படி சொல்லலாம் "கழித்துக்கட்டப் பட்டவர்களின் கூட்டணி" என்று. வேறு வழியே இல்லாமல் பாஜகவும் அம்மாவும் இணைந்தார்கள், இணைந்திருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைத்துக் கொண்டாலும், அதே கைகளை குலுக்கியும் கொள்கிறார்கள். தைலா புரமும், புலியும், கிரக நிலை மாறும் போது, இங்கே வந்து விடுவார்கள், புதிய கோஷத்துடன். பாஜக - வேறு வழியில்லாததால் அம்மாவுடன் இருக்கும்.

சூடான சர்ச்சை: விஜயகாந்த் பக்கம் நியாயம் இருப்பதாகவே எனக்கு படுகிறது (இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு, அதான் நான் யார் பக்கம்ன்னு தெரிஞ்சி போச்சே :-(). அவர் கேட்டதிலும் அர்த்தம் இருக்கிறது. பதிலுக்கு அய்யா விட்ட அறி(வி)க்கை(அரைவேக்காட்டுக்கை) கொஞ்சமும் நாகரீகமாக இல்லை(அவரிடம் அதை எதிர்பார்க்க கூடாதோ??). தமிழ்நாட்டு அரசியல் ரொம்ப கேவலமாகி கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

சுயநலம், சந்தர்ப்பவாதம் அல்லது ஒற்றுமை என்று எப்படி பெயர் வைத்துக் கொண்டாலும் சரி சமீபத்தில் காவிரி பிரச்சினைக்காக திமுக-அதிமுக இணைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியதே. அடுத்தவர் மட்டும் தனியாக பெயர் வாங்கிட கூடாது என்ற நல்லமனம்(?) இருவரையும் இணைத்தது.. இப்படியே எல்லாவற்றிலும் இருந்தால்... மன்னிக்கவும் கற்பனைக்கும் ஒரு அளவுண்டா?... மீண்டும் சந்திப்போம்

Saturday, June 19, 2004

நல்லசிவமும் கிட்டப்பார்வையும்

இது நான் எட்டாம் வகுப்பு படித்தப் போது நடந்தது. அரையாண்டு தேர்வு முடிந்து எங்கள் அறிவியல் ஆசிரியர் எங்களது விடை தாள்களை தந்தார். எப்போதும் பெயர் அகர வரிசை படி தான் தருவார்கள். அன்றும் அப்படி தான் வரிசை படி எங்களை அழைத்து விடை தாள் குடுத்து, தப்புக்கு தகுந்தார் போல் முதுகில் 4 தப்பு, கன்னத்தில் 4 அப்பு குடுத்துக்கொண்டிருந்தார். எல்லார் பேரும் அழைக்கப்பட்ட போதும் என் நண்பன் ஒருவன் பெயர் மட்டும் அழைக்கப்படவில்லை. அவன் திருதிரு என்று முழித்துக்கொண்டிருந்தான். அனைவருக்கும் தந்து முடித்த பிறகு, அவர் கையில் ஒரே ஒரு விடை தாள் மட்டும் இருந்தது. மெதுவாக நிமிர்ந்து பார்த்தார். "யாரப்பா அது நல்லசிவம், கொஞ்சம் எந்திரிச்சி இங்கே வாப்பா" என்றார். என் நண்பன் எழுந்து அருகில் சென்றான் "எஸ் ஸார்" என்றபடி.

ஆசிரியர் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு "நல்லசிவம் என்னை கொஞ்சம் கம்பீரமாய் பாரு" என்றார். சத்தியமாய் எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நடப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். நல்லசிவத்திற்க்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. "ஸார் ஸார்.." என்று இழுக்க ஆரம்பித்தான். ஆசிரியை அவன் காதை பிடித்து "ஏண்டா விடை தெரியாட்டி அப்படியே விட வேண்டியது தானே, நீயே ஒரு விடை கண்டுபிடிக்கிறியா?" என்றவாரு அவன் காதை திருகினார்.

நல்லசிவத்தின் கண்கள் பனித்தன. "ஸார் வலிக்குது" என்று அரற்றினான். "அண்மை பார்வை என்றால் என்ன? சொல்லுடா" என்றார். நல்லசிவம் பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தான். "தெரியுமா? தெரியாதா? சொல்லுடா" என்று மிரட்டினார். "தெ..தெ..தெரி..தெரி..யா...தெரியாது ஸார்.." திக்கி திணறினான். "தெரியாட்டி விட வேண்டியது தானே, நீ என்ன எழுதி வச்சி இருக்கே பாரு, படி சத்தமா.." நல்லசிவத்தின் கண்ணீர் அவன் கண்ணை மறைத்தது, படிக்க முடியவில்லை. ஆசிரியர் பொறுத்துப் பார்த்து அவரே படித்தார். "தெரிஞ்சிகோங்க பசங்களா, அண்மை பார்வை என்றால், ஆராய்ச்சியாளர் டாக்டர் நல்லசிவத்தின் வரையரையை..." என்றவாறு தொடர்ந்தார் "..ஆண்கள் பெண்களை கம்பீரமாக பார்ப்பது ஆண்மை பார்வை... நல்லா கவனிங்க அண்மை பார்வை இல்லை ஆண்மை பார்வை எனப்படும்".. நல்லசிவத்தை பார்த்து முறைத்தார்.. எல்லோருக்கும் தப்பு அடித்தவர், அவனுக்கு மட்டும் டிரம்ஸ் வாசித்தார் அவன் முதுகில். அன்றிலிருந்து அவன் பெயர் ஆண்மை நல்லசிவம் ஆகியது...

Good Boy

நேற்று நான் Good Boy திரைபடம் பார்த்தேன். மிக அற்புதமான படம். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சுவாரசியம் குறையாமல் எடுத்திருந்தார்கள். கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் அதை படமாக்கிய வகையில் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

சிறுவன் ஒருவனுக்கு நாய்கள் மீது பிரியம் அதிகம். அவன் பொழுதை கழிப்பதே பிறர் வீட்டு நாய்களுடன் தான். அவனுக்கென்று ஒரு நாயை அவனுடைய பெற்றோர் வாங்கி தருகிறார்கள். அது மிகவும் புத்திசாலியாய் இருக்கிறது. இவன் சொல்லும் ஒவ்வொன்றையும் உடனே புரிந்து கொண்டு செய்கிறது. ஒருநாள் இரவு இவன் படுத்திருக்கும் போது நாய் மெதுவாக வெளியே செல்கிறது. அவனும் அதை பின் தொடர்ந்து செல்கிறான். அங்கே ஒரு பறக்கும் தட்டு உடைந்து நொறுங்கி கிடக்கிறது. இவன் அதை நெருங்கி போய் பார்க்கிறான். உள்ளிருந்து கிளம்பும் ஒளியானது இவனை தாக்குகிறது, மயங்கி விடுகிறான். விழித்துப் பார்க்கும் போது வீட்டில் படுத்திருக்கிறான். அவனுடைய நாய் அவனிடம் பேசுகிறது, இவனுக்கும் அது புரிகிறது. கதை இங்கு தான் சூடு பிடிக்கிறது. விண்வெளியில் இருந்து வந்த நாய், "சிரியஸ் ஸ்டார்" என்கிற நாய்களின் தாய் பூமி பற்றி மற்ற நாய்களுக்கு விளக்குகிறது. அதன் பிறகு நாய்களுக்கும், இவனுக்கும் நடுவில் நிகழ்கின்ற வேடிக்கைகளும், வாக்குவாதங்களும் நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. நாய்களின் முகபாவங்களும், அவைகள் பேசுவதும், மிக அற்புதம். வயது வித்தியாசமின்றி ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்.

Friday, June 18, 2004

கண்ணன் - இயேசு - நபி

மஞ்சள், குங்குமம் - ஒன்றும் இல்லை தமிழர் வழக்கப்படி நானும் மங்களகரமாக என் வலைபதிவை ஆரம்பிக்கிறேன். நீண்ட ஆயுளுடன் வாழ நான் என் வலைபதிவை ஆசிர்வதிக்கிறேன்.

எனக்கு எம்மதமும் சம்மதம் என்பதில் உடன்பாடு உண்டு. பிறந்தது இந்து மதம் என்றாலும், படித்தது எல்லாம் கிறிஸ்தவ பள்ளியில் தான்.சின்ன வயதில் பக்தி பாடல்கள், பக்தி கதைகள் நிறைய படிப்பேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு நாத்திகம் சார்ந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அது படிக்க சுவாரசியமாய் இருந்தது. மற்ற படி மனதில் ஒட்டவில்லை. ஒருமுறை நான் படித்த பள்ளியில் மத பிரச்சாரம் நடந்தது. மத போதகர் பல பாடல்களை பாடி எங்களை உற்சாகப் படுத்தினார். எல்லாம் முடிந்த பிறகு எங்களை பார்த்து "பிள்ளைகளே, உங்களுக்கு இயேசுவின் பால் பிரியம் உண்டாகட்டும், உங்களுக்கு ஏதேனும் கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள்" என்றார். வழக்கம் போல் எல்லாரும் அமைதியாய் இருந்தனர். நான் அப்பாவியாய் எழுந்து நின்றேன். என் வகுப்பாசிரியர் ஆச்சரியமாய் பார்த்தார். அவர் பார்த்ததிலும் அர்த்தம் இருந்தது. வகுப்பில் ஒரு முறை கூட எழுந்து எந்த சந்தேகமும் கேட்டதில்லை நான். அப்படிப் பட்ட நான் என்ன கேட்கப் போகிறேனோ என்று ஆவலாய் பார்த்தார்.

உள்ளுக்குள் பயமாய் இருந்தாலும் கேட்டே ஆக வேண்டும் என்று கேட்டேன்.
" நான் கேட்கிறேன் என்று திட்டாதீர்கள். பைபிளில் இயேசு சொல்கிறார் - நான் இறைவனின் மைந்தன் என்று, குரானில் நபிகள் சொல்கிறார் - நான் இறைவனின் தூதுவன் என்று.. ஆனால் பகவத்கீதையில் கண்ணன் சொல்கிறார் - நானே கடவுள் என்று. அப்படியானால் இயேசு கண்ணனின் மைந்தன், நபிகள் கண்ணனின் தூதுவன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?"

இந்த நேரம் பார்த்து தான் பள்ளி மணி அடித்தது. பதில் சொல்லாமல் அவர் போய் விட்டார். என் வகுப்பு ஆசிரியர் என்னை பார்த்த பார்வைக்கு விடை நான் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் முட்டைக்கு வெகு பக்கத்து இலக்கங்களை வாங்கிய பொழுது தான் தெரிந்தது.

அதற்கு பிறகு பள்ளி முடிக்கும் வரை "இயேசுவின் நாமம் இனிதான நாமம்.." என்று பாடிக் கொண்டிருந்தேன்

அறிமுகம்

அன்புள்ள அனைவருக்கும் வணக்கம். நான் வலைபதிவிற்க்கு புதுமுகம். என் பெயர் தான் இந்த வலைப்பதிவின் பெயரும். இந்த வலைபதிவின் பெயருக்கும் நான் எழுத போவதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை இப்பொழுதே தெரிவித்து விடுகிறேன். ஏன் என்றால் என் பெயருக்கும் எனக்குமே சம்மந்தம் இல்லாத போது எப்படி வலைபதிவின் தலைப்புக்கு நான் சம்மந்தப் பட முடியும். :-)

தமிழில் பதிப்பதால் நான் தமிழன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் பிறப்பால் தமிழன் அல்ல. "வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என் மூதாதரை வாழ வைத்தது. அப்படியே நானும் வாழ்கிறேன்.

என் பிழைகளை அனைவரும் பொறுத்தருள வேண்டுகிறேன். தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பளியுங்கள். நன்றி.

என் தாய்மொழி, என்னுடைய பிற அடையாளங்களை இப்பொழுது சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அப்படியே சொன்னாலும் யாருக்கும் தெரியப் போவது இல்லை. இது தான் உண்மை.

எதை பற்றி எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். நாளை பார்ப்போம்.