தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, June 30, 2004

குட்டி சாமி

இளம் சாமியார் அல்லது இளம் துறவியார் பற்றி எல்லா பத்திரிக்கைகளிலும் தினமும் ஒரு செய்தி போட்டு விடுகிறார்கள். அது சீக்கிரம் அடங்கி விடும் என்று நினைத்தேன். இல்லை, என் நினைப்பில் லாரி ஏற்றிவிட்டு அது பறந்து கொண்டு இருக்கிறது. அண்ணாச்சி கதை, பிரகாஷ் கதை போல இதுவும் ஜூவி, ரிப்போர்டர்-க்கு நல்ல தீனீ போடுகிறது. மான் தோல், குவாலிஸ் கார், திருவண்ணாமலை விஜயம், சேலம் தரிசனம், மதுரை ஆதீனம் என்று தினம் ஒரு திருப்பம். ஆக மொத்தம் மீடியா மற்றும் என்னை போன்ற ஆட்களுக்கு வாயில் போட்டு மெல்ல ஒரு மேட்டர்.

இந்த பதிவு எழுத காரணம் தினகரனில் வந்த ஒரு செய்தி தான். "குழந்தை தொழிலாளரை தடை செய்வது போல குட்டி சாமியாரையும் கைது செய்ய வேண்டும் - நாத்திகம் ராமசாமி வலியுறுத்தல்". தடை செய்வதும், கைது செய்வதும் ஒன்றா? என்று செய்தியை முழுதாய் படித்தேன். ராமசாமியின் கோபம் புரிந்தது. பத்திரிக்கையில் இளம் சாமியார் பெயர் தினமும் வருகிறதாம், காவல் துறை கண் மூடி கிடக்கிறதாம். ஒன்று பையன் பெற்றோரிடம் செல்ல வேண்டுமாம் இல்லையென்றால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டுமாம். 13 வயதில் துறவி ஆகலாம் என்றால் அதே வயதில் திருமணம் செய்யலாமா? என்று மடக்குகிறார். 13 வயதில் பிரபலம் ஆகிறான் அந்த சிறுவன் என்று ராமசாமிக்கு கோபம். வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு. ஒருவேளை அந்த சிறுவன் தப்பானவர்களின் கைகளில் மாட்டி இருந்தால் காப்பாற்ற சொல்லி இருக்கலாம். இல்லை அவனுக்கு நிஜமாகவே ஆன்மீக பற்று இருந்தால் அதனை முறைப்படுத்த வேண்டுக்கோள் விடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு, அச்சிறுவனை கைது செய்ய வேண்டும், சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வயிறெரிய -மன்னிக்க - வலியுறுத்தக் கூடாது.

- 13 வயசில் அப்பா அம்மாவை பிரிய வேண்டிய அவசியம் என்ன வந்தது அந்த சிறுவனுக்கு?
- சின்ன பையனின் சகவாசம் பற்றி அறிந்து கொள்ளாமல் அவன் பெற்றோர் ஏன் இருந்தனர்?
- மூன்றாவது மனிதன்/மனிதர்கள் எப்படி ஒரு சிறுவனை வசியப் படுத்த முடியும்?

அப்படியும் பிள்ளை ஒன்றும் கஞ்சா கேஸ், கொள்ளை கேஸில் மாட்டவில்லை, அதனால் எப்படியும் மீட்டு விடலாம். பிள்ளையையும், பெற்றோரையும் தனியே விட்டால் போதும், அவர்களே பேசி முடித்துக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. கொஞ்சம் பிரியமாய் பேசினால் பெற்றோர் பேச்சை கேட்பவன் போல் தான் அச்சிறுவன் இருக்கிறான்.

எப்படியோ அந்த பையன் நல்லா இருந்தா சந்தோஷம்.

0 Comments:

Post a Comment

<< Home