தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, June 24, 2004

கிசு கிசு - விதிகள்

சுவாரசியம் இல்லாமல் போகின்றது இந்த வலை பதிவு என்பதற்காக ஏதாவது வித்தியாசமாய் செய்யலாமா என்று யோசிக்கிறேன்....ஐயோ ரொம்ப யோசித்து நிஜமாவே வித்தியாசமாய் தோன்றிவிடுமோ என்று பயமாய் இருக்கிறது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. ஒழுங்காக மரபுப் படி நடப்போம். முதலில் கிசு கிசு எழுதலாம். அது தான் நமக்கு நிறைய கற்பனை வளத்தை தரும். அதில் நாம் கரை கண்ட பிறகு அடுத்ததிற்கு போகலாம்.

கிசு கிசு எழுத சில முக்கியமான விதிகள் இருக்கிறது. அதில் சில
- யாரைப் பற்றி எழுதுகிறோம் என்பது கட்டாயம் எல்லாருக்கும் புரிய வேண்டும்.
- யாரைப் பற்றியும் அவர்கள் பெயர் சொல்லி தாக்கக் கூடாது.
- யாரும் பிற்காலத்தில் என்னை பற்றி தானே எழுதினாய் என்று கேட்டாலும் சமாளிக்கும் அளவிற்கு எழுத வேன்டும்.
- முக்கியமாய் நன்றாக ஜோடித்து கற்பனை கலந்து தர வேண்டும்.
- சுருக்கமாய் இருக்க வேண்டும்.
- பல பேர் படித்து "அப்படியா?" என்று கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.
- புதிர் போல கட்டாயம் இருக்கக் கூடாது.
- கிசு கிசு எழுதி யாரையும் பிரபலம் ஆக்கக் கூடாது
- பிரபலமாய் இருப்பவர் பற்றி மட்டும் எழுதி நாம் பிரபலம் ஆகலாம் :-)
- கிசு கிசுவிற்கு எந்த அளவுகோலும் இல்லை, எனவே இஷ்டத்திற்கு எழுதலாம்.
- கிசு கிசு மட்டும் எங்கும் எப்போதும் கிடைக்கும், நாம் தேடி செல்ல தேவை இல்லை.
- எந்த கிசு கிசுவும் கிடைக்கா விட்டால், மற்றொருவர் கிசு கிசு எடுத்து, கொஞ்சம் மாற்றி நம்முடையதாக்கிக் கொள்ளலாம்.
- சம காலத்து பிரபலங்களை பற்றி மட்டும் கிசு கிசு எழுதுவது உத்தமம். சமாளிக்கவோ இல்லை "நான் தான் முன்னமே சொன்னேன்லே" என்று மார் தட்டிக் கொள்ள உதவும்.

இப்போதைக்கு இது போதும். உதாரணத்திற்கு ஒரு கிசு கிசு ஆரம்பம் மட்டும்...
"எப்போதும் தண்ணி அடிப்பதைப் பெருமையாய் பேசி/எழுதிக்கொண்டும் (குழாய் தண்ணீர் அல்ல), தன்னைப் பற்றி பெரிதாகப் பீற்றிக் கொண்டும், தன் எழுத்தை தானே சிலாகித்துக் கொண்டும், வீண் பேச்சு வீணராய், வெட்டியாய், கோணலாய், வாழும் இலக்கியவாதி(?) எழுத்தாளருக்கு...." இதற்கு மேல் நமக்கு தேவையானதை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

(பி-கு:1) எல்லாரும் பி-கு தருவதால் நானும் தருவது தான் முறை :-)
(பி-கு:2) சத்தியமாய் நான் இதுவரை ஒரு கிசு கிசுவும் எழுதியது இல்லை.

0 Comments:

Post a Comment

<< Home