தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, September 14, 2004

வெந்தவன்

ஒருவழியாக சென்னைக்கு வந்து சூட்டில் வெந்து நொந்து கொண்டிருக்கிறேன். இன்னும் உருப்படியாய் ஒன்றும் செட்டில் ஆகவில்லை. வலைப் பக்கங்களை படித்து நாட்கள் ஆகிறது. மீண்டும் சீக்கிரம் வந்து பழையபடி உங்களை எல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கிறது..

"ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கிறது மாடு மேய்க்க..."

அவசரப்பட்டு என்னை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டாம். "புதுசு கண்ணா புதுசு" என்று ஏதாவது சொல்லிக்கொண்டு விரைவில் வந்து விடுகிறேன்...

அன்புடன்
ஞானதேவன்

Friday, September 10, 2004

Strike Out Game ( for Long journey )

இது கிரிக்கெட் மாதிரி அவ்வளவு சுலபம் கிடையாது. நல்ல கண் பார்வை வேண்டும்.ஒருத்தர் ஜன்னல் ஓரமா கட்டாயம் உட்காந்து இருக்கணும். இந்த விளையாட்டை நிச்சயம் ஒருத்தர் மட்டும் விளையாடினா சுவாரசியம் இருக்காது.

இப்போ 2 பேர் இருக்குறதா வச்சிக்குவோம். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடிச்ச ஒரு எண்ணை சொல்லனும்(1,2,3,4,5,6,7,8,9,0 க்குள்ள மட்டும் தான்.) அதை ஒரு துண்டு காகிதத்துல 10 தடவை எழுதிக்கணும்.

அதாவது ராமு, சோமு, 2 பேர்இருந்தா, ராமு ஒரு எண்ணையும் (உ-ம்: 2) சோமு ஒரு எண்ணையும் (உ-ம்: 4 ) சொல்லனும். கட்டாயம் ரென்டு பேரும் வேற வேற எண்ணை தான் சொல்லனும். அதை 10 தடவை எழுதிக்கணும். இப்பொ எதிரே வர்ற வாகனத்தின் நம்பர் பிளேட்டை படிக்கனும், அதுல இருக்க்ற எண்களில் நீங்க தேர்ந்தெடுத்த எண் இருந்தால், அதை ஸ்ட்ரைக் அவுட் பண்ணுங்க.

உதாரணமா : TN-01 1234 ந்னு வந்தா ராமுக்கு ஒரு 2 அடிபடும்,சோமுவுக்கு ஒரு 4 அடிபடும்..) முக்கிய குறிப்பு : TN-01'லெ இருக்குற எண்ணை சேர்க்கக்கூடாது. ஒருவேளை TN-01 2256ன்னு வந்தா ராமுவுக்கு ரெண்டு 2 அடிபடும், சோமுவுக்கு ஒண்ணும் அடிபடாது. இது மாதிரி ஒரு பேமிலியா போறீங்கன்னா ஆளுக்கு ஒரு எண்ணை குறிச்சிகிட்டு யாரோட எண் மொதல்லே மொத்தமும் ஸ்ட்ரைக் அவுட் ஆகுதோ, அவங்க ஜெயிச்சதா அறிவிச்சிக்கலாம். முதலில் ஜெயித்தவர் முதல் இடம், அவர் விலகிட்டாலும் மீதி இருப்பவர்கள் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் தெரியும் வரை தொடரலாம். இப்படி உங்களுக்கு விருப்பமான முறையில் விளையாட்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

வெளிநாட்டுல இருக்குறவங்க, எண்களுடன், எழுத்துக்களையும் குறிச்சி வச்சிகிட்டு இதே ஆட்டத்தை விளையாடலாம்.

முக்கிய குறிப்பு : எதிரே வர்ற வாகனத்தின் எண்ணை மட்டும் வைத்து விளையாடனும். ஓட்டுனரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் உள்ளவர்கள்(only motorway or freeway), உங்களை கடந்து போகும் வாகன எண்ணை அல்லது நீங்கள் கடந்து போகும் வாகன எண்ணை வைத்து விளையாடலாம். ஆனால் ஓட்டுனரை சேர்த்துக்கொள்ள வேண்டாம். :-)காரணம் அவரோட எண் இருக்கிற வாகனத்தை முந்த விட்டு, பின் இவர் முந்தி.. சுலபமாக ஜெயித்து விடுவார்.

Wednesday, September 08, 2004

முட்டை ஆராய்ச்சி

அறிவுப்பூர்வமாக ஏதாவது எழுத வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. நிறைய யோசித்து யோசித்து, மூளை குழம்பி போய் கிடந்த சமயம், உள்ளே ஒரு ஆம்லெட்(பொறிமாதிரி) தட்டியது.

ஆம் அப்போது தான் நான் ஒரு முட்டையை பார்த்தேன். அது ஒரு கோழி முட்டை. என் அறிவை கொண்டு யோசித்தேன். பெரும்பாலான முட்டைகள் ஏன் முட்டைவடிவத்திலேயே இருக்கிறது? சரியான கேள்வி இல்லையா இது?? ஏன் பறவைகள் முட்டை வடிவத்தில் முட்டை இடுகிறது?

யோசிக்க வேண்டிய விஷயம் இது. மூளையை கசக்கி கசக்கி பிறகு கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்தேன்.


முடிவு 1: முட்டையின் வடிவம் ஒரு விசேஷமானது. பறவையின் சிறிய கூட்டில், நிறைய இடத்தை அடைக்காமல் பல முட்டைகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்க முடியும்.

முடிவு 2: முட்டைகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்க முடிவதால், தாய் பறவையின் உடல் சூடானது எங்கேயும் வெளியே செல்லாமல், முட்டையை சிறந்த முறையில் அடை காக்க உதவுகிறது.

முடிவு 3: முட்டையின் வடிவத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், அது உருளும் போது வட்டமாக சுற்றுமே தவிர, நேர்கோட்டில் பயணிக்காது. எனவே முட்டை உருண்டு போய் தொலைந்து போகும் வாய்ப்புகள் இல்லை எனலாம்.

முடிவு 4: முட்டையிடும் பறவைகளுக்கு இந்த வடிவம் தான் மிக வசதியானது.முதலில் முட்டையின் பெரிய உருண்டையான, பகுதி வெளியே வந்து விடும், அதை தொடர்ந்து, கூம்பு வடிவ பகுதி மிக சுலபமாக வெளியேறிவிடும்.

முடிவு 5: இது தான் மிக மிக முக்கியமானது. நம் வீட்டு குளிர்சாதன பெட்டியிலும் மற்றும் முட்டை கடைகளிலும் இருக்கும், முட்டை ட்ரேக்கள் முட்டை வடிவத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளதால், முட்டையிடும் பறவைகள், முட்டை வடிவத்திலேயே முட்டை இடுகின்றன.

ஆராய்ச்சியாளர் : ஞானதேவன்
copyright (c) 2003-2010 http://gyanadevan.blogspot.com/

Tuesday, September 07, 2004

"அம்மா நாடு" அழைக்கிறது

மாற்றங்கள் மாற்றமுடியாதவை. குருவும், சனியும் நம்மை சுற்றி சுற்றி வரும் போது, நாம் மட்டும் சும்மா ஒரே இடத்தில் இருக்க முடியுமா என்ன?. குருவோ, இல்லை சனியோ கொஞ்சம் வேகமாக சுற்றி, அதில் என்னையும் இழுத்துக் கொண்டு விட்டது. ஆம், இங்கிலாந்து நாட்டில் இனிமையாய் பொழுதை கழித்துக் கொண்டு, தமிழை படித்துக் கொண்டு இருந்த என்னை, "போடா தொன்னை" என்று சொல்லி என் தாய் திருநாடாம், இந்தியாவுக்கு வான ஊர்தியில் அனுப்ப ஓலை வந்து விட்டது. சீக்கிரமே என்னை நாடு கடத்தப் போகிறார்கள். செய்த குற்றம் என்ன? அலுவலக நேரத்தில் வலைபூ படித்தேனாம்.. தமிழுக்கு தொண்டு செய்யும் தமிழன்னில்லாத தமிழா, நீ தமிழ் நாட்டுக்கேப் போய் தமிழ் சேவையை செய் என்று தலைவர் சொல்லி விட்டார். ஆகவே, என் ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிறப்பே, என் இனிய தமிழ் மக்களே, என்று பலவாறு சொல்லிக் கொண்டு சிங்கார சென்னையாம், பூலோக சொர்க்கமாம், புண்ணிய நதி கூவம் சங்கமிக்கும் ஷேத்திரத்தில், ஒரு விடியற்காலை பொழுதில் வான ஊர்தியில் வந்து இறங்கப் போகிறேன்.

வசந்த காலம் போய் விட்டது இங்கிலாந்தில். வாடை காற்றும், வாடி உதிரும் வண்ண இலைகளையும் பிரியப் போகிறேன். வறண்டே இருக்கும், வாகனம் நிறைந்திருக்கும், ஜனங்கள் சூழ்ந்திருக்கும், தண்ணீருக்கு தவிக்கும், தலை நகர் சென்னையில், வியர்வை வழிந்தோட, மேற் சட்டை, காற் சட்டை கசங்க, தொண்டை வரள, சூரியனின் கோபப் பார்வயில் சுட்டுப் பட்டு, சுருங்கி, சுருளப் போகிறேன். பாதாளப் பள்ளங்களில் பயணப்பட்டு, படியேறி, பணிக்குச் சென்று, உடல் பாதியாகி நிற்கப் போகிறேன்.

பல தலைகளுக்கு நடுவே ஒரு சிறு தலையாகி, என் தலையே மரத்துப் போகப் போகிறது. ஊழ்வினை, செய்வினை, தன்வினை மற்றும் வினை[] மொத்தமும் என் மீது ஆட்கொள்ளப் போகிறது. இயந்திரங்களுடன் இயந்திரமாக என்னை மாற்றப் போகிறது. எதையெல்லாம் அனுபவிக்கக் கூடாது என்று இங்கே வந்தேனோ அதையெல்லாம் இப்போது அனுபவிக்கப் போகிறேன்.இங்கே சுற்றிலும் சொந்தமில்லா மனிதர்கள் தான் ஆனால் என் சுதந்திரம் அப்படியே இருந்தது.. இப்போது அது பறிக்கப் பட்டுவிடும். ஆட்கள் சூழ்ந்திருப்பர், நாட்கள் ஓடிவிடும், கடிகார முட்கள் வேகமாய் சுற்றி விடும். யோசித்து, யோசித்து செய்தவற்றை எல்லாம், அள்ளி தெளித்து செய்ய ஆரம்பிப்பேன்... சொந்த சுக துக்கம் எல்லாம் வந்து தாக்கும்.. வேலை பளு மிகுந்து போகும்.. நானும் ஒரு சராசரி இந்தியனாகி போகப் போகிறேன்..
"பிறர் வாழ பல செயல்கள் புரிந்து...
நரை கூடி கிழப் பருவமெய்தி.....
பின் மாயும் வேடிக்கை மனிதர் போல....."

நானும்... :-(
..
..
..

Saturday, September 04, 2004

"மனநிலை குன்றியவர்கள்" ???!!!!!

முகுந்த் தன்னுடைய பதிவில், ஈராக் தீவிரவாதிகளின் கொலை அரங்கேற்றத்தினை காட்டிய சன் டிவியை எப்படி அடக்குவது என்று கேட்டு இருக்கிறார். அவரின் வருத்ததில், கோபத்தில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற கொலைகாரனை, கொல்லாமல் நல்வழி படுத்த வேண்டும் என்று நினைக்கிற ஆத்மாக்கள், கொலையை நேரில் பார்த்த உடனேயே அது மற்றவர்களை வன்முறைக்கு தூண்டும் என்று ஆதங்கப்படுவது சற்றும் பொருத்தம் இல்லாதது. மனநிலை சரியில்லாமல் தான் அவர்கள் இந்த கொலையை செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவனை மன்னித்து, தீவிரவாதியை நினைத்து பரிதாபம் கொள்ள வேண்டும்.அந்த தீவிரவாதியை பிடித்து தூக்கில் போட்டால் அது பலருக்கு (முகுந்துக்கும்) பிடிக்காது. காரணம் தீவிரவாதிகள் மனநிலை தவறிப் போய் தான் இப்படி செய்கிறார்கள், அவர்களை எல்லாம் சிறையில் அடைத்து நல்ல வழி காட்டி விடுதலை செய்ய வேண்டும் என்பார்கள்.

அவர்களை நல்வழிப் படுத்தும் முன், தீவிரவாத தொண்டர்கள் யாரேனும் வெளியே இருந்தால், அவர்கள் இப்போது ரஷ்யாவில் நடப்பது போல், இல்லை நமக்கு காந்தஹாரில் நடந்தது போல், பிணை கைதிகளை வைத்துக்கொண்டு, மனநிலை சரி இல்லாமல் சிறையில் வாடும், தீவிரவாதிகளை விடுவிக்க சொல்லி மிரட்டி, அழைத்துக்கொண்டு போவார்கள். மனநிலை தவறிய தீவிரவாதிகளும் உயிரோடு இருக்கணும், அவர்களின் கையில் மாட்டாமல் நாம், நம் குடும்பம், ஓர், நாட்டையும் காப்பாற்றனும். அப்படியே தப்பி தவறி தீவிரவாதி மாட்டிக் கொண்டால், அவனை மன்னித்து நாம் மனிதர்களாக நடக்க வேண்டும். இத்தனையும் எப்படி செய்வது??

சன் டிவி செய்வது தப்பே இல்லை. தீவிரவாதிகளின் பக்கம் சாய்ந்து பேசும் "மனித உரிமை காக்கும் மஹாத்மாக்கள்" அதிகம் வாழும் தமிழ்நாட்டில், சாதாரணமாக, கழுத்தை அறுத்து, கொன்று கூறு போட்டதை எல்லாம் பார்த்து தமிழ் மக்கள் எல்லாம் கெட்டு விடுவார்கள் என்று பயப்படுவது நம்ப முடிய இல்லை.

முகுந்த் அவர்களே, சன் டிவி காட்டியது "மனநிலை குன்றியவர்கள்" பற்றிய செய்தி குறிப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள்(வழக்கம் போல்). அதைப் பார்த்து பயப்பட வேண்டாம். அவங்க டிவியிலே காட்டியது ஒண்ணே ஒண்ணு தான். நம்ம நாட்டில் இதை விட மோசமாக மன்னிக்கவும் மனநிலை தவறியவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்க ஜெயில்லேயும் இருப்பாங்க. பாவம் அவங்களை எல்லாம் நல்ல வழி படுத்தி வெளியே கொண்டு வர்றது தான் மனித குல மாணிக்கங்களுக்கு அழகு. அதை விடுத்து, தீவிரவாதியை கெட்டவனாக சித்தரிக்கும், அதை படம் போட்டு காட்டும் சன் டிவியை எதிர்ப்பது வீண் வேலை, இல்லையா?

Friday, September 03, 2004

"பறையொலி" பதில்

தனக்கு தானே கேள்வி கேட்டுகிட்டு, தானே புத்திசாலிதனமா பதில் சொல்லிக்கிறது ஒரு பிரபலத்தின் வழக்கம். அதே தான் இது. ஆனால் ஒரு சின்ன குழப்பம், குமுதத்திற்க்கு போக வேண்டிய கேள்விகள் தபால்துறையின்(மத்திய அரசு :-)) அலட்சியத்தால் "குடும்பாலயம்" போய் விட்டது. அடுத்த நாள் "பறையொலி"ல் கேள்வி பதில் பகுதி.

கேள்வி: விஜய்காந்த் நிலைமை என்ன இப்போது?
பதில் : அருமை தம்பி விஜயகாந்த் அருமையாக நடித்த கஜேந்திரா திரைப்படம், சில சொந்த பிரச்னை காரணமாக "தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு" வெளியிட இயலாமல் அல்லாடிக் கொண்டு இருக்கார். அது வெளியிடப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடட்டும்.

கேள்வி: "ஜக்குபாய்?"
பதில் : ரொம்ப வருஷத்துக்கு முன்னே தம்பி ரஜினி போலியோ நோய் விழிப்புணர்ச்சி பற்றிய விளம்பர படத்தில் நடித்தார், அதில் ஒரு வசனம் பேசுவார் "அதோ அந்த குழந்தையை பாருங்க.. எப்படி துள்ளி விளையாடுது.. ஆனா இந்த குழந்தை?? "
மத்த நடிகர்களின் படங்கள் துள்ளி விளையாடுகிறது ஆனா ஜக்குபாய் ??? உறங்கிட்டு இருக்கார்.

கேள்வி : ஜோதிகா தொப்பை சின்னதாகி விட்டதே! கவனித்தீரா?
பதில் : இதை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அந்தப் பெண் வடநாட்டுப் பெண் என்று அறிகிறேன். எனவே ஹிந்தி தெரிந்த பேரன் இருக்கிறான். அவனிடம் சொல்லி விசாரிக்க சொல்கிறேன்.

கேள்வி :வைகோ நடை பயணம்?
பதில்:கால் வலி தான் மிச்சம்.. சைக்கிள் பயணம் தான் வேகமானது, வெற்றியானது.

கேள்வி : ஜெயலலிதா தான் அடுத்த முதல்வரா?
பதில் 1: அம்மையார் குட்டிகர்ணம் அடிக்காமல்.. எதற்கும் பின் வாங்காமல்.. பத்திரிக்கையாளர்களை கண்டு அஞ்சாமல், மக்கள் பிரச்சினையை புரிந்து கொண்டால்..... ........நடப்பதை பற்றி மட்டும் பேசுவோம். வீண் கற்பனை கூடாது.

இதே கேள்விகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேட்டு இருந்தால் என்ன சொல்லி இருப்பார்?

கேள்வி: விஜய்காந்த் நிலைமை என்ன இப்போது?
பதில் : இதை பற்றி ராமதாஸிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி: "ஜக்குபாய்?"
பதில் : யார் அது??.

கேள்வி : ஜோதிகா தொப்பை சின்னதாகி விட்டதே! கவனித்தீரா?
பதில் : அப்படியா? எனக்கு தெரியாதே?

கேள்வி :வைகோ நடை பயணம்?
பதில்: இதைப் பற்றி நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி : ஜெயலலிதா தான் அடுத்த முதல்வரா?
பதில் : இதைப் பற்றி நீங்கள் மக்களிடம் தான் கேட்க வேண்டும்.

Thursday, September 02, 2004

ரஜினி ரசிகர்கள்

வலைபதிவுகளில் ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நல்லது தான்.ஆனால் இவர்களுடன் மல்லு கட்ட ஆட்கள் யாரையும் காணோம். எல்லாரும் இஷ்டத்திற்கு, பாமகவையும், விஜயகாந்தையும் போட்டு தாளிக்கிறார்கள். யாரும் இங்கே விஜயகாந்த ரசிகர்கள் இல்லையா? பாமக தொண்டர்கள் இல்லையா? அப்படி யாரும் இல்லாவிட்டால் சொல்லுங்கள் நான் வேண்டுமானால் கட்சி மாறுகிறேன். அப்போ தானே ஒரு சூடு, சுவை, காரம், மணம், இருக்கும் ;-)

இணையப் பதிப்பு

2 வருடங்களுக்கு முன் அடிக்கடி நான் "Forum Hub" "மன்ற மையம்" போய் வருவேன். சில கவிதைகள், கதைகள் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது அது ஒரு குப்பை ஆகி கிடக்கிறது. நல்ல விஷயங்களை தேடி படிக்க வேண்டியதாய் இருக்கிறது. சுதந்திரமாய் எல்லாரையும் எழுத விட்டது தப்பாகி விட்டது. இஷ்டத்திற்க்கு தமிழிலில் உள்ள எல்லா அருவெறுக்கத்தக்க வார்த்தைகளையும் பிரயோகிக்கிறார்கள். சமீபத்தில் தான் தெரிந்தது "காமலோகம்" என்று ஒரு வலைப்பக்கம் இருப்பதாக. காமத்தை கண்ணியமாக அலசுவதாக போட்டு இருந்தது. படித்து பார்த்தால் நம்ம ஓர் விருந்து, குறிஞ்சி, சரோஜா தேவியின் இணையப் பதிப்பு. எப்படியோ தமிழ் வளர்ந்தா சரி. வேற என்ன சொல்றது.

துணுக்குகள்

கூகிள்காரன் ஜிமெயில்'லை சும்மா தந்தா, அந்த இன்விடேஷன் வச்சிகிட்டிருக்குற புண்ணியவான்கள் அதை விலைக்கு விக்கிறாங்க. எங்கே?? www.ebay.co.uk தான் :-) £1.00 குடுத்தா வாங்கிடலாம். எல்லாம் வியாபாரம் ஆகிப் போச்சி.
******
பாலுமகேந்திரா-மெளனிகா:
இதில் தப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா பெரிய இடங்களிலும் நடப்பது தான். அவர் இரு மனைவிகளின் மீதும் உண்மையான அன்பு வைத்திருப்பதாக சொல்வது நம்ப முடிகிறது. இந்த வயதிற்க்கு மேல் பொய் சொல்லி என்ன ஆவது? நீண்டநாள் அவர்கள் வாழட்டும். நமக்கும் ஒரு சில நல்ல திரைப்படங்கள் கிடைக்கட்டும்.
*******
நல்ல மனசுகாரர்கள்:
ஏதோ இந்தியர்களை விட்டுட்டதால ஈராக் தீவிரவாதிகளை(?) இப்படி சொல்லுறேன்னு நினைக்காதீங்க. கெட்டவங்களா(?) இருந்தாலும் குடுத்த வாக்கை காப்பாத்தினாங்களே. அதுக்கு ஒரு மனசு வேண்டும். சீக்கிரம் அவங்க பிரச்சினை எல்லாம் முடிஞ்சி அவங்களும் சந்தோஷமா வாழ இறைவன் வழி பண்ணட்டும்.
*********
பின்னுறாங்க.:
பிஜேபி'க்கு இப்போ தான் நல்ல வாய்ப்பு கிடைச்சி இருக்கு. உமா பாரதி விவகாரத்தை அப்படியே பிடிச்சிகிட்டு வளரப் பார்க்குறாங்க. காங்கிரஸ் என்ன பண்ணப் போகுதுன்னு பார்ப்போம். ?? இந்த விஷயத்துல நான் பிஜேபிக்கு முழு சப்போர்ட். உமா பாரதியை கைது பண்ணினது காங்கிரஸ் காரங்க செஞ்ச பெரிய தப்பு.இப்போ அத்வானியையும் கைது செஞ்சி இருக்காங்க.. நல்ல சூடா போகுது விஷயம்.. வாழ்க ஜனநாயகம்.

Wednesday, September 01, 2004

மகாத்மாக்கள் தொடர்ச்சி....

மகாத்மாக்கள் தொடர்ச்சி

NONOவுக்கு ஒரு பதில்.

ஆகஸ்ட் 25 2004 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிக்கையில் 27ம் பக்கத்தில் 27 எண் போட்ட ஒரு பத்தி.

மரணமே தீர்வு

ரேப் குற்றவாளிக்கு மரண தண்டனை.

பிரச்னை
இந்தியாவின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் தண்டனை ஒன்றிலிருந்து 10 ஆண்டு சிறைதான். பல கைதிகள் மூன்று, நான்கு வருடமே சிறையில் இருக்கிறார்கள்.

தீர்வு
மரண தண்டனை. இது பாலியல் பலாத்கார சம்பவங்களை குறைக்கும் என்கிறது தேசிய பெண்கள் கமிஷன். 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தனஞ்சய் சாட்டர்ஜியின் மரண தண்டனைக்கு மக்கள் காட்டும் ஆதரவு, இதற்கு பெரும்பான்மை வாக்குகள் இருப்பதை காட்டுகிறது.

"பாலியல் பலாத்காரம் என்பது கொலையை விட கொடுமையானது. பாதிக்கப்பட்ட பெண் அவமானத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது." ஷோபா டே. எழுத்தாளர்.

உட்கார்ந்து கொண்டே கிரிக்கெட்

பகல் நேரத்துல தொலை தூர பஸ்லே போறீங்களா?
தூக்கமும் வரலியா?
படிக்க புத்தகமும் இல்லையா? (ஆமாம்பா ஆமா!!!!)

இதோ உங்களுக்காக சில பஸ் விளையாட்டுக்கள். பஸ் மட்டும் இல்லே, கார்'லே பேமிலியா(family) போகும் போதும் இந்த விளையாட்டுகளை நீங்க விளையாடலாம்.

முதலில் கிரிக்கெட் :-
இதை விளையாட குறைந்தது 2 பேர் வேண்டும். இது இந்தியாவில் வாழ்பவர்க்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டில் உள்ளவர்கள் வேறு மாதிரி விளையாட வேண்டும், அது பிறகு.

முதலில் யார் பேட்(bat) செய்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.பஸ் அல்லது கார், நகர எல்லையை தாண்டியதும் இதை ஆரம்பிக்கவும். விளையாடும் போது நகரம் வந்து விட்டால் சற்று இடைவெளி விட்டு மீண்டும் நகரம் முடிந்ததும் விளையாட தொடங்குங்கள்.

நீங்கள் பயணம் செல்லும் போது உங்களுக்கு எதிரே வரும் வாகனம் தான் உங்களின் ரன். அதாவது 2 சக்கர வாகனம் என்றால் 1 ரன்னும், 4 சக்கர வாகனம் என்றால் 2 ரன்னும், லாரி வந்தால் 4 ரன்னும், பஸ் வந்தால் 6 ரன்னும் என்று வைத்துக் கொள்ளவும். மிதிவண்டிகளுக்கு எல்லாம் ரன் கிடையாது. உங்களின் வாகனத்தை இன்னொரு வாகனம் முந்தி சென்றாலோ, அல்லது நீங்கள் மற்றொரு வாகனத்தை முந்தி சென்றாலோ அவுட் ஆனதாக அர்த்தம்.

உங்களின் பயண நேரத்தை பொருத்து ஒருவருக்கு எத்தனை அவுட் அல்லது எத்தனை நிமிடம் என்று கணக்கு வைத்துக் கொள்ளலாம், குறிப்பிட்ட நேரத்துக்குள் அவுட் ஆகாமல், நிறைய ரன் யார் எடுக்கிறார்களோ அவர்கள் வென்றவர்கள்.

2க்கு மேற்பட்டவர்கள் இருந்தாலும் விளையாடலாம், ஒரு குழுவாகவும் விளையாடலாம். லாஜிக் சொல்லிவிட்டேன். இனி விதிமுறைகளை எல்லாம் சேர்த்து விளையாடுவது உங்கள் பொறுப்பு.

(முக்கிய குறிப்பு)
நீங்கள் காரில் போகிறீர்கள் என்றால் ஓட்டுனரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். பிறகு வேகமாகவோ இல்லை மெதுவாகவோ ஓட்டி ஒரு அணியிணரை தோற்கடித்து விடுவார்.

இது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு:
ப்ரீ வே(free way), மோட்டார் வே(Motor way) இவற்றில் செல்லும் போது, உங்கள் வாகனம் எந்த வாகனத்தை முந்துகிறதோ அதற்கு தகுந்த ரன்னை கூட்டிக் கொள்ளவும். உங்கள் வாகனம் முந்தப் பட்டால் அவுட் ஆனதாக அர்த்தம்.மற்ற சாதாரண சாலைகளில் இந்திய முறைப்படி ஆடலாம்.

அடுத்த விளையாட்டு .....
(பி-கு) தனியாக செல்பவர்கள் தங்களையே 2 அணியாக/பேராக நினைத்துக்கொண்டு விளையாடலாம் :-)