தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, December 08, 2004

பயணம் - பணயம்

தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வது உயிரை பணயம் வைப்பதற்கு சமம் என்பது என் சமீபத்திய இரண்டு பயணங்கள் நிரூபித்தது.

1. சென்னையிலிருந்து திருச்சி
2. திருச்சியில் இருந்து சேலம்

நான் ஓட்டிக்கொண்டு போனது சாதாரண மாருதி ஆம்னி வாகனம் தான். 4 சக்கரம் தான் இருந்தது. ஆனால் எதிரே முந்தி கொண்டு வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இதையெல்லாம் ஒரு வாகனமாய் கருதியதாய் தெரியவில்லை, என்னை பல முறை சாலையில் இருந்து இறக்கி உயிர் பயம் உண்டாக்கி தன் காரியமே கண்ணாய் சென்றுக் கொண்டிருத்தனர். அதுவும் இருட்டிய பிறகு கேட்கவே வேண்டாம் கண்ணை கூசும் விளக்குகளுடன் காட்டுத்தனமாய் பேயை விரட்டிக் கொண்டு போவது போல் அப்படி ஒரு அசுர வேகத்துடன் ஒவ்வொருவரும் எதிரே வரும் போது மறுநாள் சன் டிவி, தினத்தந்திகளில் நாமும் வந்து விடுவோமோ என்று பயம் மனதில் உருள்கிறது.

ஏன் இப்படி அவசரம்? புரியவில்லை :-( சாலைகளில் பள்ளம் பார்ப்பதில்லை. பேருந்துகள் தட தடத்து போய் கொண்டே இருக்கிறது. 4 நாய்கள், 2 லாரிகள், 1 ஜீப் இப்படி 300 கிலோமீட்டர் பயணம் செய்வதற்குள் இத்தனை விபத்துகளை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் பேருந்து ஒரு லாரியை முந்தும்போது எதிரே வரும் வாகனம் பாதையை விட்டு விலகியே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இந்தியாவில் விபத்துகள் மலிந்து விட்டதில் ஆச்சரியமே இல்லை :-(

இன்னொரு விஷயமும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது பேருந்து ஓட்டுனரின் தைரியம். அதை பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரத்தில் அவர் ஒரு விபத்தை உண்டாக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகமாய் இருப்பது நல்லதல்ல.

சாலைகளை விரைவில் அகலபடுத்துவதும், வேகத்தை கண்காணிப்பதுமே இதற்கான தீர்வாக இருக்கும். அதுவரை தினமும் செய்திகளை பார்த்து உச் கொட்ட மட்டுமே முடியும் :-(

மேலும்....

அனுபவசாலிகளிடம் மிகவும் எதிர்பார்ப்பது நல்ல நேர்த்தியான நடை, உடை மற்றும் வார்த்தை பிரயோகங்கள்.அவரின் பேச்சுகளை வைத்தே அவரது அணுகுமுறையை ஓரளவு கணித்துவிட முடியும். எனவே இதில் எல்லாம் சிறிது கவனம் செலுத்தினாலே மிக எளிதில் நேர்முக தேர்வில் வென்று விடலாம்.

நேர்முக தேர்வுக்கான நேரத்திற்கு சரியாக போவது மிக அவசியம். பல சமயம் வேறு அலுவலகத்தில் பணி புரிபவர்கள் தான் வருவார்கள். எனவே பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு தாமதமாய் செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 2 மணிக்கு ஒருவரை வர சொல்லி இருந்தேன். ஆனால் அவர் வந்தது 2.40க்கு 20 நிமிடத்தில் அவரை அனுப்பிவிட்டேன். அவர் பதட்டமாக இருந்ததாலும், வியர்த்து வழிந்து கொண்டிருந்ததாலும், முதல் 10 நிமிடம் ரொம்பவும் தான் திணறி பேசினார். முடிவில் வாய்ப்பை இழந்தார்.
இப்போதைக்கு இது போதும்.. மீண்டும் சில தேர்வுகளுக்கு பிறகு இதை தொடர்கிறேன்.

Tuesday, December 07, 2004

சில குறிப்புகள்

லண்டனில் இருந்து திரும்பிய என்னை, இங்கே சென்னை அலுவலகத்தில் மேலாளர் பதவியில் அமர வைத்து விட்டனர். அதாவது செயல் அடிப்படையில்(Role based) நான் மேலாளர். பிறகு நீண்ட கால employee என்பதால் என்னை நேர்முக தேர்வு குழுவிலும் உறுப்பினராக்கி விட்டனர். தினமும் குறைந்தது இருவரை நான் நேர்முக தேர்வு செய்கிறேன். அதில் நான் கவனித்தவற்றை தருகிறேன்.

சில அடிப்படை தவறுகளை பலரும் செய்கின்றனர். அதை மிக சுலபமாக தவிர்க்கலாம். அனுபவசாலிகளை தான் நான் நேர்முக தேர்வில் சந்திப்பதால் புதிதாய் வேலை தேடுபவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.2 அல்லது 3 வருடம் அனுபவம் கொண்டவர்கள் செய்யும் சில தவறுகள்.

- கேட்கப்படும் கேள்விகளுக்கு சுற்றி வளைத்து பதில் தருவது.. பல நேரங்களில் பதில் தப்பாக புரிந்து கொள்ளப்படும். பதில்கள் சுற்றி வளைக்காமல் தெளிவாக சுருக்கமாக இருக்க வேண்டும். நேரத்தை வீணாக்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

- அடிப்படை கேள்விகளில் சறுக்குவது. அதாவது அவர் சம்மந்தப்பட்ட துறையில் மிக சுலபமான, அடிப்படை கேள்விக்கு தவறாக பதில் சொல்வது. காரணம் - தெரியாது என்று சொல்ல முடியாததால்.

- சூழ்நிலையின் (real time situation) அடிப்படையில் கேள்வி கேட்கும் போது தரப்படும் பதில் தான் ஒருவரை தேர்வில் வெற்றி பெற செய்கிறது.

- யோசிக்காமல் விடை அளிப்பதை தவிர்க்க வேண்டும். 1 முதல் 2 நிமிடம் வரை யோசிக்க அவகாசம் கேட்கலாம் தப்பில்லை, ஆனால் எல்லா கேள்விகளுக்கும் அதே போல் கேட்க கூடாது.

-பேசும் போது தேர்வாளரை பார்த்து பேசுவது நல்லது

- தெரியாதவற்றை அல்லது மறந்ததை மறைக்காமல் சொல்லி விடுவது உத்தமம்

- பயோ டேட்டாவில் இருந்து தான் கேள்விகள் கேட்பார்கள். எனவே அதை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருப்பவற்றை நன்கு படித்து வைத்து இருப்பது நல்லது.

மேலும் சிலவற்றை தொகுத்து சொல்கிறேன்....

Saturday, December 04, 2004

மீண்டும் இந்த அடியேன்

வணக்கம் மீண்டும் இந்த அடியேன் வலைபதிவுலகத்தில் அடியெடுத்து வைக்கிறேன். ஒருவழியாக சென்னையில் ஒரு வீடு பார்த்து, தொலைபேசி இணைப்பு வாங்கி, இன்று தான் இணைய இணைப்பும் வாங்கினேன். இரண்டு மாதமாய் படிக்காமல் விட்ட அனைத்து வலைபதிவுகளையும் படித்து விட வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறேன். சென்னை ரொம்பவும் என்னை அலைகழித்து விட்டது. எல்லாவற்றையும் இணையத்திலேயே செய்து முடித்து பழக்கப்பட்ட சோம்பேறித்தனத்தால், இங்கு வந்து அலுவலகம் அலுவலகமாக அலைந்து திரிந்து அல்லாடிவிட்டேன். 1 மணி நேரத்தில் தொலைபேசி, இணையம்,சமையல் எரிவாயு, வீட்டு வரி பெயர் மாற்றம், மின்சார கட்டண பெயர் மாற்றம் என்று பலவற்றையும் இருந்த இடத்திலேயே லண்டனில் செய்து முடித்த நான், இங்கே வந்து ஒவ்வொன்றுக்கும் அலைந்த கதையை சொல்ல ஆரம்பித்தால், ஒரு பெரும் தொடர்கதை போல் ஆகி விடும். ஆகவே, இந்த புலம்பலை இத்தோடு நிறுத்தி விட்டு சில புது விஷயங்களுடன் வருகிறேன்.

பரபரப்பான தமிழ்நாடு. படுகொலைகளும், கொள்ளைகளும், கைதுகளும், யூகங்களுமாய் தினம் ஒரு திடுக்கிடும் திருப்பங்களுடன் ஒவ்வொரு தினமும் ஆரம்பிக்கிறது. இதற்கு நடுவில் தான் ஒரு சராசரியனின் வாழ்க்கையும் நடக்கிறது அமைதியாய். எப்படி???? ஒரு பார்வையாளனுக்கு நடப்பதை பார்ப்பதை தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லாததால் அவன் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, சில வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு தன் வேலையில் மூழ்குகிறான். இதை தவிர வேறு அவன் என்ன செய்து விட முடியும்? அப்படி ஏதேனும் செய்ய முற்பட்டால் அவனும் நாளை செய்தியாகி விடுவானோ? ஒரு உண்மை கதை சமீபத்தில் நடந்தது.. அது...