தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Sunday, May 21, 2006

"விட்டுது சிகப்பு"

"விட்டுது சிகப்பு" அற்புதமாக எழுதுகிறார். கோபமாக வந்து பந்து வீசும் சோயப் அக்தரின் பந்துக்களை பொறுமையாக பவுண்டரிக்கு திருப்பும் டெண்டுல்கர் போல், பல சூடான விசயங்களை கேலியாக கையாள்கிறார். நக்கலும் நையாண்டியும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கிறது.

அவருடைய பதிவுகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை. இது பலரை சீண்டி பார்க்கவும் செய்கிறது மறுப்பதற்கில்லை. ஆனாலும் அவரின் வாதங்களில் சில நியாயங்கள் இருக்கிறது. அவர் யார் சார்பாக எழுதுகிறார் என்று தெரிகிறது. பலமுனைகளில் தாக்குதல் பெற்று வரும் ஒரு சாராருக்கு அவரின் பதிவுகள் ஒரு ஆதரவாய் இருக்கும்.

"விட்டுது சிகப்பு" யார் என்றே எனக்கு தெரியாது. அவர் சொல்வதை ரசிக்கிறேன். அவரது பதிவுகள் எனக்கு பிடிக்கிறது. முக்கியமாய் நான் பிறப்பால் தமிழன் இல்லை. விட்டுது சிகப்புவின் ஆதரவு பெற்ற அணியிலும் இல்லை. பதிவுலகில் சில காலமாய் நடந்து வரும் "ஒரு சாரார்" தாக்குதலை படித்து சற்று கவலை அடைந்திருந்தேன். அவர்களுக்கு சரியான பதிலாய் இவர் எழுதுகிறார்.

யார் பதிவுக்கும் நான் இப்படி ஒரு ஆதரவு பதிவு எழுதியதில்லை. இவருக்கு எழுத வேண்டும் போல் தோன்றியது. எழுதுகிறேன். மற்றபடி நான் எந்த அணியிலும் இல்லை.

பின்னெச்சரிக்கை:
விட்டுது சிகப்பு அவர்களே, எனக்கு உங்கள் ஆட்சியில்(ஆப்பில்) பங்கு வேண்டாம். நான் வெளியில் இருந்து உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.

Tuesday, May 16, 2006

தங்கப்பல் ராஜகுமாரனும் இருபது குமரிகளும்


நமது கதையின் நாயகனாக இப்படி ஒருவரை கற்பனை செய்து பாருங்கள்...
ராஜ்கிரண் அறிமுகம் செய்து வைத்த வடிவேலு போல ஒருவன்....
கழுத்தில் சைக்கிள் செயின் அளவுக்கு மூன்று வஸ்துக்கள் இடுப்பு தொடும் அளவில். ...
இடது காதில் வெள்ளை கற்கள் வைத்த இரண்டு கடுக்கண்கள்....
பத்து விரலிலும் நமது தாமரைகனி போல மோதிரங்கள்...
வெள்ளை ஃப்ரேம் போட்ட குளிர்க்கண்ணாடி....
ஜிகுஜிகு வண்ணங்களில் உடைகள்......
இதெல்லாம் போதாதென்று கழுத்தில் ஒரு வால் கிளாக்(!).
ஆம் நிஜமாக ஒரு வால் கிளாக்....
சந்திரமுகி பிரபு மாதிரி என்ன கொடுமை இது என்று கேட்கிறீர்களா?

இப்படி இருக்கும் நமது இராஜகுமாரனுக்கு காதலிக்க ஒரு பெண் தேடுவதற்கு ஒரு நவீன சுயம்வரம் நடக்கிறது. நமது இளவரசனுக்கு ஃபேளேவ்(Flave) என்று பெயர். அதில் கலந்து கொள்வதற்கு இருபது இளம் கன்னியர் நாடெங்கிலும் இருந்து வருகின்றனர். அவர்களை நமது அரசகுமாரன் தனது அரண்மனையில் தங்க வைக்கிறார்.

அங்கு இருக்கும் அழகிகள் அனைவருக்கும் அவர்கள் இயற்பெயர் மறைக்கப்பட்டு ஒவ்வொரு புனைப்பெயர் வழங்கப்படுகிறது.ஸுவீட்டி, நியூ யார்க், பம்ப்கின், ரெட் ஒய்ஸ்டர், இப்படியாக பலப் புனைப்பெயர்கள்.
இவர்களில் ஒருவரைத்தான் அந்த ராஜகுமாரன் காதலியாக தேர்வு செய்ய இருக்கிறான். அதற்கு கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்று தேர்வுகள். இறுதியில் தேர்வு பெறுபவளே அரசகுமாரனின் காதலியாவாள்.

சுற்றுக்களில் சில (சாம்பிளுக்கு):

வந்திருக்கும் பெண்கள், தமது சமையல் திறனை வெளிப்படுதும் சுற்று இது. அவர்கள் சமைத்த உணவு வகைகளை இளவரசன் ருசித்து மதிப்பெண் அளிப்பான்(ஆனாலும் இவனின் மனோதைரியத்தை நாம் பாராட்டியே தீர வேண்டும்!) கலந்து கொண்ட பெண்களில் பலருக்கு சமையலில் அது தன் முதல் அனுபவமோ என்று எண்ண தோன்றுகிறது...

அப்படிப்பட்ட படைப்புகள் தான் உணவு மேஜை மீது! சராசரியாக எல்லோருமே சிக்கன் சமைத்து இருந்தார்கள். இதில் உச்சகட்டமே ஒரு பெண் சமைத்து(!!!) இருந்தது தான். ஒரு முழு கோழியை ஒரு மைக்ரோவேவ் தட்டில் வைத்து அதன் மீது பச்சை காய்கறிகளை அலங்காரம் செய்து பத்து நிமிடம் வேக வைத்தாள்...இதற்கு பெயர் சமையல்???

அந்த சுற்றில் அதிக மதிப்பெண் எடுத்த பெண்ணுக்கு ஃபேளேவுடன் அன்று டேட். அரசகுமாரன் குடுத்த மதிப்பெண் அடிப்படையில் முதல் சுற்றில் சில பெண்கள் வெளியேற்றப்பட்டனர்.

அடுத்தது இரண்டவது கட்டம். இதில் பெண்கள் அனைவரையும் ஒரு ப்ரைவேட் ஜெட்டில் ஏற்றிக் கொண்டு நம் ஃபேளேவ் செல்லும் இடம் - லாஸ்வேகஸ்! அங்கு அவர்களை ஒரு மிக பிரம்மாண்டமான ஹோட்டலில் தங்கவைக்கிறான் நம் தலைவன். விதவிதமான புத்தாடைகளை பரிசளிக்கிறான். லாஸ்வேகஸ் வந்து அமைதியாக இருந்தால் எப்படி?

அந்நகருக்கே உரிதான ஒரு கஸினோவிற்கு அவர்களை அழைத்துச் சென்றான். அங்கே நடக்கும் சூதாட்டத்தில் எந்த பெண் மிக அதிகமாக பணத்தை ஜெயிக்கிறாளோ அவளுக்கு அன்று டின்னர் அதுவும் இளவரசனுடன். இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் இளவரசனுடன் அரண்மனைக்கு திரும்பினர்.

அடுத்த நாள். இது தான் உச்சகட்டம். அன்று புலன் சம்பந்தப்பட்ட போட்டிகள். ஐந்து புலன்களுக்கும் அன்று பரீட்சை. தொடுதல், உணர்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் - இவற்றில் தான் போட்டி. ஆனால் இதில் இவை எல்லாம் செய்து மதிப்பெண் அளிக்கப்போவது நம் கதாநாயகன். இவற்றை அவன் செய்ய தேர்ந்தெடுத்த களம் அந்த பெண்கள்! அதெல்லாம் நம் சென்சாரில் எடிட் செய்யப்பட்டுவிட்டன என்று வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தனை பெண்கள் வருகிறார்களே அவர்கள் எல்லோரும் உண்மையான அன்புடந்தான் வருகின்றனரா? இல்லை அவனுடைய செல்வம் மற்றும் பெயர், புகழுக்காக வருகின்றனரா? இதை எப்படி அறிந்து கொள்வது? அதற்காக ஒரு பாலிக்ராப்(Lie Detector) டெஸ்ட் செய்தால் தெரிந்து விடுகிறது! அதை செய்ய அந்த இளவரசனின் முன்னாள் காதலியே வருவதுதன் சிறப்பம்சம்.

இதெல்லாம் என்ன வெட்டி கதை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஐயா இது கதை அல்ல நிஜம். அதாகப்பட்டது, அமெரிக்காவில், விஹெச்1 என்று ஒரு சேனல் வருகிறது, அதில் வரும் ஷோ தான் மேற்கூறியது.

அந்த அழகிய இளவரசன் ஒரு ராக் ஸ்டாராம்! வெகு சமீபத்தில் தான் வாய் முழுவதும் தங்க பற்களை கட்டிக்கொண்டாராம். நான் பார்க்க நேர்ந்தது ஒரே எபிசோட் தான் என்றாலும், இது பல மாதங்களாக தொடர்கிறது என்று அவர்களது வெப்சைட் மூலமாக அறிகிறேன். நேரம் கிடைத்தவர்கள் இதை http://www.vh1.com/shows/dyn/flavor_of_love/series.jhtml க்ளிக்குங்கள்.